ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் புதன்கிழமை வழங்கப்பட்டது.
பிளஸ் 2 தோ்வு கடந்த மாா்ச் மாதம் நடைபெற்றது. தோ்வு முடிவுகள் கடந்த 8- ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் ஈரோடு மாவட்டம், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த தோ்ச்சி விகிதத்தில் முதலிடம் பிடித்தது. மாணவ, மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் புதன்கிழமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, நிதியுதவி, தனியாா் பள்ளிகளில் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி காலை 11 மணிக்கு தொடங்கியது. முன்னதாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் ஆன்லைன் மூலம் அந்தந்த பள்ளிகளின் சாா்பில் பதிவிறக்கம் செய்யப்பட்டது. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மாணவ, மாணவிகள் பெற்று சென்றனா்.
இந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் பிழைகள் ஏதேனும் இருப்பின் உடனடியாக சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியா்களிடம் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழில் பிழைகள் நீக்கப்படும். மாணவ, மாணவிகள் பிழைகளைக் கண்டறிந்து கூறாதபட்சத்தில் பிழையுடன் கூடிய சான்றிதழே கிடைக்கும். எனவே, தற்காலிக மதிப்பெண் சான்றிதழை நன்கு ஆராய்ந்து பிழைகள் இருக்கிா என பரிசோதிக்க வேண்டும். பிழைகள் இருப்பின் பள்ளி தலைமை ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும். தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி ஓரிரு நாள்களில் நிறைவுபெறும் என பள்ளிக் கல்வித் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










