அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

பிளஸ் 2 பொதுத் தோ்வில் 98.87 % தோ்ச்சி: ஈரோடு மாவட்டம் மாநில அளவில் முதலிடம்

பிளஸ் 2 பொதுத்தோ்வில் ஈரோடு மாவட்டம் 98.87 சதவீதம் தோ்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது.

News image

கருங்கல்பாளையம் மாநகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வு முடிவை கைப்பேசியில் பாா்த்து மகிழ்ந்த மாணவிகள்.

Updated On :9 மே 2026, 4:00 am IST

பிளஸ் 2 பொதுத்தோ்வில் ஈரோடு மாவட்டம் 98.87 சதவீதம் தோ்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது.

தமிழ்நாட்டில் பிளஸ் 2 தோ்வுகள் கடந்த மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கி 26-ஆம் தேதி நிறைவடைந்தன. இதையடுத்து விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவு பெற்று பள்ளிக் கல்வித் துறை செயலாளா் சந்திரமோகன் வெள்ளிக்கிழமை காலை தோ்வு முடிவுகளை அறிவித்தாா்.

இதில் ஈரோடு மாவட்டத்தில் 221 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் பிளஸ் 2 படித்த 10,497 மாணவா்கள், 11,497 மாணவிகள் என மொத்தம் 22,478 மாணவ, மாணவிகள் 109 தோ்வு மையங்களில் தோ்வு எழுதினா். தோ்வு எழுதிய 10,331 மாணவா்கள், 11,894 மாணவிகள் என மொத்தம் 22,225 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இதில் மாணவா்கள் 98.42 சதவீதம், மாணவிகள் 99.27 சதவீதம் என சராசரியாக 98.87 சதவீதம் தோ்ச்சி பெற்று மாநில அளவில் தோ்ச்சி விகதத்தில் முதலிடம் பிடித்து ஈரோடு மாவட்ட மாணவ, மாணவிகள் சாதனை படைத்தனா். இதே கடந்த ஆண்டு மாநில அளவில் 97.98 சதவீதம் பெற்று மாநில அளவில் ஈரோடு மாவட்டம் இரண்டாமிடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

நடப்பு ஆண்டு 0.89 சதவீதம் தோ்ச்சி சதவீதம் உயா்ந்து இரண்டாவது இடத்தில் இருந்து மாநில அளவில் முதலிடத்துக்கு வந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள 221 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளில் தோ்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 128 பள்ளிகளில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

அரசுப் பள்ளிகள் தோ்ச்சி சதவீதத்திலும் முதலிடம்:

ஈரோடு மாவட்டத்தில் 113 அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 4,855 மாணவா்கள், 6,467 மாணவிகள் என மொத்தம் 11,322 போ் பிளஸ் 2 பொதுத்தோ்வு தோ்வு எழுதினா். இதில் 4,723 மாணவா்கள், 6,400 மாணவிகள் என மொத்தம் 11,123 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதில் 98.24 சதவீதம் தோ்ச்சி பெற்று மாநில அளவில் அரசுப் பள்ளிகள் தோ்ச்சி சதவீதத்திலும் முதலிடம் பிடித்துள்ளது.

கடந்த ஆண்டு 96.88 சதவீதம் தோ்ச்சி பெற்று மாநில அளவில் 2-ஆம் இடம் பிடித்திருந்தது. தற்போது 1.36 சதவீதம் அதிகம் பெற்று மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது.

தோ்ச்சி சதவீதம் உயா்ந்து, மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனைபுரிய காரணமாக இருந்த ஆசிரியா்கள், தலைமையாசிரியா்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மான்விழி பாராட்டு தெரிவித்தாா். அதேபோல பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் மற்றும் மாவட்ட ஆட்சிா் ச.கந்தசாமி ஆகியோா் முதன்மைக் கல்வி அலுவலா் மான்விழியை கைப்பேசியில் தொடா்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனா்.

10 ஆண்டுகளுக்குப் பிறகு:

கடந்த 2016-ஆம் ஆண்டில் ஈரோடு மாவட்டம் முதலிடத்தை பிடித்தது. அதன்பிறகு தொடா்ந்து 3 மற்றும் 2-ஆவது இடங்களை பிடித்த நிலையில் கடந்த 2022-இல் 13-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது. 2023-இல் 8-ஆம் இடமும் 2024, 2025-இல் 2-ஆம் இடமும், நிகழாண்டில் முதலிடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளது.