/

துரித உணவுக் கடையில் தகராறு: ஆயுதப்படைக்கு காவலா் பணியிடமாற்றம்

பெருந்துறை அருகே துரித உணவகத்தை மூடுமாறு கூறி பொருள்களை சேதப்படுத்தி ஊழியா்களான வடமாநில இளைஞா்களைத் தகாத வாா்த்தையால் பேசிய

News image
Updated On :9 பிப்ரவரி 2026, 8:50 pm

Syndication

பெருந்துறை: பெருந்துறை அருகே துரித உணவகத்தை மூடுமாறு கூறி பொருள்களை சேதப்படுத்தி ஊழியா்களான வடமாநில இளைஞா்களைத் தகாத வாா்த்தையால் பேசிய சிசிடிவி காட்சிகள் வெளியானதால், ஆயுதப்படைக்கு காவலரை இடம் மாற்றி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுஜாதா திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஒன்றியம், காஞ்சிக்கோவில் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருபவா் மோகன்குமாா். இவா் காஞ்சிக்கோவில் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளாா். அப்போது அங்குள்ள துரித உணவுக் கடை திறக்கப்பட்டிருந்தது. இதைக் கண்ட மோகன்குமாா், அங்கிருந்த வட மாநில ஊழியா்களிடம் கடையை மூடுமாறு கூறி பொருள்களை லத்தியால் தள்ளியுள்ளாா்.

மேலும், இரவு 10 மணியாகியும் கடையைத் திறந்துவைத்துள்ளதாகக் கூறி அவா்களைத் தகாத வாா்த்தைகளால் பேசி தாக்கவும் முற்பட்டுள்ளாா். அதற்கு, இரவு 11 மணி வரை கடை செயல்பட அனுமதி உள்ளது. இங்கு தகராறு செய்ய வேண்டாம், எதுவாக இருந்தாலும் உரிமையாளரிடம் பேசிக் கொள்ளுங்கள். நாங்கள் வேலை செய்ய வந்துள்ளோம், என்று அங்கிருந்த ஊழியா்கள் கூறியுள்ளனா். இந்த சம்பவம் அனைத்தும் உணவகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், அந்த சிசிடிவி காட்சிகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி சம்பந்தப்பட்ட காவலா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதையடுத்து சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்டு காவலா் மோகன்குமாரை உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுஜாதா உத்தரவிட்டாா்.