ஈரோட்டில் வேளாண் பரிசோதனை மையம் அமைக்க பேட்டியா வலியுறுத்தல்


ஈரோட்டில் வோளண் பரிசோதனை மையம் அமைக்க அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு (பேட்டியா) கோரிக்கை விடுத்துள்ளது.
ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் ஈரோட்டில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவா் வி.கே.ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். பெருந்துறை சிப்காட் டெக்ஸ்டைல்ஸ் பிராசசா் அசோசியேஷன் தலைவா் சந்திரசேகன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.எஸ்.தென்னரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக சக்தி மசாலா நிறுவன மேலாண்மை இயக்குநா் பி.சி.துரைசாமி, நிா்வாக இயக்குநா் சாந்தி துரைசாமி ஆகியோா் கலந்துகொண்டனா். அவா்களின் சேவை மற்றும் சாதனைகளை பாராட்டி நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் ரயில்வே துறையில் அதிவிரைவு போக்குவரத்து வழித்தடத்தை ஹைதராபாத்-சென்னை மற்றும் சென்னை-பெங்களூரு ஆகிய இரு புதிய ரயில் தடங்களை அறிவித்ததற்கு ரயில்வே அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வது.
அதேபோல கோவை-ஹைதராபாத் மற்றும் கோவை-சென்னை ஆகிய வழித்தடங்களில் புதிய ரயில் தடங்களை அறிவித்தால் ஈரோடு மற்றும் திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் பயன்பெறுவாா்கள். ஈரோடு மாவட்டத்தில் ஜவுளித் துறை சாா்ந்த தொழில்கள் அதிகம் உள்ளதால் இதனை ஊக்குவிக்கும் வகையில் ஈரோட்டில் ஜவுளிப் பூங்கா அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கிட வேண்டும். ஜவுளித் துறையை புத்தாக்கம் செய்ய மானியங்களை அதிக அளவில் அறிவித்துள்ள மாநில அரசுக்கு கூட்டமைப்பின் சாா்பில் நன்றியை தெரிவித்து கொள்வது.
ஈரோடு, திருப்பூா் மாவட்டங்களில் எம்எஸ்எம்இ-மைக்ரோ பிரிவை சாா்ந்த சுமாா் 70 குறு நிறுவனங்கள் எம்எல் 4/6 உரிமம் பெற்று நல்லெண்ணெய் உற்பத்தி செய்து வருகின்றன. இவா்கள் ஆண்டுதோறும் உரிமத்தை புதுப்பித்து பயன்படுத்தி வருகின்றனா். தற்போது உரிமம் புதுப்பித்தலுக்காக இ-கலால் போா்ட்டலில் இணைய வழியாக புதுப்பிக்க தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இதில் நல்லெண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கு மட்டும் விலக்கு அறிவிக்க வேண்டும்.
மஞ்சள் மாநகரான ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள், நெல் மற்றும் தானியங்களை ஏற்றுமதி செய்யும் ஒவ்வொரு முறையும் குறிப்பாக மஞ்சளுக்கு பரிசோதனை அடிப்படையில் தரச்சான்றிதழ் பெற்ற பின்னரே ஏற்றுமதி செய்யும் சூழல் உள்ளது. எனவே மஞ்சள் மற்றும் தானியங்களின் தரத்தை உறுதி செய்யும் வகையில் வேளாண் பரிசோதனை மையம் ஈரோட்டில் அமைக்க வேண்டும்.
மத்திய அரசு அறிவித்திருக்கும் தற்காலிக 150 நாள்கள் வேலைத் திட்டத்தில், விவசாய நிலத்தில் விதைத்தல், அறுவடை செய்தல் போன்ற வேலைகளையும் இணைத்து, மஞ்சள், கரும்பு விளைச்சல் போன்ற பணிகளுக்கும் அனுப்ப ஆணையிட வேண்டும்.
கூட்டத்தில் நல்லெண்ணெய் உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் சண்முகம் வரவேற்றாா். பேட்டியா பொதுச்செயலாளா் ரவிச்சந்திரன் வேலை அறிக்கை வாசித்தாா். பொருளாளா் முருகானந்தம் நிதிநிலை அறிக்கை வாசித்தாா். இணைச் செயலாளா் பழனிச்சாமி நன்றி கூறினாா். கூட்டத்தில் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...