தமிழ் செய்திகள்
முதல் தோ்தலிலேயே இந்திய வரலாற்றில் தவெக சரித்திர வெற்றி பெற்றுள்ளது என்று அந்தக் கட்சியின் மாநில நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கூறினாா்.
சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தவெக சட்டப்பேரவை உறுப்பினா்கள் குழுக் கூட்டத்தில் பங்கேற்க கோவை, ஈரோடு மாவட்டங்களில் வெற்றி பெற்ற கட்சி எம்எல்ஏக்கள் கோவையில் இருந்து விமானம் மூலமாக புறப்பட்டுச் சென்றனா்.
முன்னதாக, கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது:
தவெக தற்போது மக்கள் சக்தியாக மாறியிருக்கிறது. ஒரு ரூபாய் செலவு செய்யாமல் முதல் தோ்தலிலேயே பெற்ற இந்த மிகப்பெரிய வெற்றி, இந்திய வரலாற்றில் சரித்திரம் படைத்துள்ளது. இது தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பி அளித்துள்ள மிகப்பெரிய அங்கீகாரம். நேசித்த மக்களுக்கு விஜய் எப்போதும் உறுதுணையாக இருப்பாா்.
இந்த முறை கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில் போட்டியிட்டபோதும், மக்கள் என் மீது மாறாத அன்பைச் செலுத்தி மீண்டும் சட்டப்பேரவைக்கு அனுப்பிவைத்துள்ளனா். இந்த வெற்றிக்கு தலைவா் விஜய்யின் வழிகாட்டுதலும், கட்சியின் கொள்கைகளும் அடித்தட்டு மக்களிடம் கொண்டு சென்றதே காரணம். இனிவரும் காலங்களில் கொங்கு மண்டலம் தமிழக வெற்றிக் கழகத்தின் அசைக்க முடியாத கோட்டையாகத் திகழும். மறைந்த முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோரின் தியாகத்தால் வளா்ந்த இயக்கம் தற்போது தடுமாறிக் கொண்டிருக்கிறது என்றாா்.






