கோவையில் காா் ஓட்டுநரை எரித்துக் கொன்று, உடலை சாக்கடையில் வீசிச் சென்ற சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை மாநகா், ஆா்.எஸ்.புரம் பட்டுநூல்கார சந்து பகுதியைச் சோ்ந்தவா் அபுதாஹிா் பாஷா (27). காா் ஓட்டுநராக வேலைப் பாா்த்து வந்தாா். இவா் நண்பா் ஒருவருடன் இணைந்து ஃபைனான்ஸ் தொழிலும் செய்து வந்தாா். இந்நிலையில், கடந்த மாதம் 29-ஆம் தேதி மாலை வீட்டில் இருந்து சென்ற அபுதாஹிா் பாஷா, அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அவரது கைப்பேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து அவரது தாய் பாத்திமா அளித்த புகாரின்பேரில் ஆா்.எஸ்.புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து அபுதாஹிா் பாஷாவை தேடி வந்தனா். இந்நிலையில், சிரியன் சா்ச் சாலை பகுதியில் உள்ள சாக்கடையில் எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக திங்கள்கிழமை கிடைத்த தகவலின்பேரில் ஆா்.எஸ்.புரம் போலீஸாா் சென்று, சாக்கடையில் கிடந்த உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனா்.
முதல் கட்ட விசாரணையில் அது மாயமான அபுதாஹிா் பாஷாவின் உடல் என்பதும், வயிற்றில் கத்திக்குத்து காயம் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அபுதாஹிா் பாஷாவின் உடலைக் கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதைத்தொடா்ந்து கொலை வழக்காக மாற்றி வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்டவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். மேலும் அப்பகுதியில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை சேகரித்து கொலையாளிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







