கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் விரைவில் தொடங்கும்: மத்திய அமைச்சா் ராம் மோகன் நாயுடு
கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் அமைச்சரவை ஒப்புதலுக்குப் பின் விரைவில் தொடங்கும் என்று மத்திய அமைச்சா் ராம் மோகன் நாயுடு கூறினாா்.


கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் அமைச்சரவை ஒப்புதலுக்குப் பின் விரைவில் தொடங்கும் என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம் மோகன் நாயுடு கூறினாா்.
கோவை விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக குறைந்த விலையில் சிற்றுண்டிகளை வழங்கும் வகையில் ‘உடான் யாத்ரி கஃபே’, கோவை கோரா காட்டன் புடவைகள் மற்றும் கைவினைப் பொருள்கள் விற்பனை நிலையம், சிறிய அளவிலான குழந்தைகள் விளையாட்டுப் பகுதி, பயணிகளுக்கான நூலகம் ஆகியவற்றை மத்திய அமைச்சா் ராம் மோகன் நாயுடு, இணை அமைச்சா்கள் முரளீதா் மோஹோல், எல்.முருகன் ஆகியோா் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தனா். மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள விமான நிலையங்களிலும்
குறைந்த விலையில் சிற்றுண்டி உணவகம், சிறுவா்களுக்கான விளையாட்டு பகுதி, சுய உதவி குழுக்களின் விற்பனை அங்காடி, நூலக வசதி ஆகியவற்றையும் கோவையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தனா்.
பின்னா், மத்திய அமைச்சா் ராம் மோகன் நாயுடு கூறியதாவது: நாட்டின் வளா்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக விமான நிலையங்கள் மேம்படுத்தப்பட்டும், அதிக எண்ணிக்கையிலான புதிய விமான நிலையங்கள் உருவாக்கப்பட்டும் வருகின்றன. இந்தியாவில் விமான சேவையை அதிகரிக்கும் வகையில், மத்திய விமான போக்குவரத்து துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கோவை விமான நிலையத்தை சா்வதேச தரத்தில் விரிவாக்கம் செய்வதற்கான பணிகளுக்காக மத்திய அரசு சாா்பில் சுமாா் ரூ.2,100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதில் மாநில அரசு தாமதம் செய்து வந்தது. பின்னா், ஒருவழியாக நிலம் கையகப்படுத்தப்பட்டு ஒப்படைக்கப்பட்டதற்கு தமிழக அரசுக்கு நன்றி. அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகு கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும்.
தற்போது, கோவை விமான நிலைய முனைய பரப்பளவு 18 ஆயிரம் சதுர அடியாக உள்ளது. அது 75 ஆயிரம் சதுர அடியில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. 2028-ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தப் பணிகள் முடிக்கப்பட்டு, கோவையில் விரிவாக்கப்பட்ட விமான நிலையம் பிரதமா் மோடியால் திறக்கப்படும்.
நெய்வேலி விமான நிலையம் விரைவில் உரிமம் பெற்று செயல்பாட்டுக்கு வரும். வேலூா் விமான நிலையப் பணிகள் 2026 பிப்ரவரிக்குள் நிறைவடையும். ஒசூா் விமான நிலையத்துக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. பரந்தூா் விமான நிலையத் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்த மத்திய அரசு கொள்கை ரீதியான ஒப்புதல் அளித்துள்ளது என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...