கோவை தொழிலதிபரிடம் பண மோசடி: ஹரி நாடாருக்கு 2 நாள்கள் போலீஸ் காவல்
தொழிலதிபரிடம் ரூ. 67 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஹரிநாடாருக்கு 2 நாள்கள் போலீஸ் காவல் வழங்கி கோவை ஜே.எம்.2 நீதிமன்றம் உத்தரவு


தொழில் விரிவாக்கத்துக்காக கடன் பெற்றுத் தருவதாக தொழிலதிபரிடம் ரூ. 67 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஹரிநாடாருக்கு 2 நாள்கள் போலீஸ் காவல் வழங்கி கோவை ஜே.எம்.2 நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
கோவை, பீளமேடு பகுதியைச் சோ்ந்தவா் எஸ்.சிவசாமி (57). இவா் ரெடிமிக்ஸ் கான்கிரீட் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக உள்ளாா். சுமாா் 30 ஆண்டுகளாக தொழில் செய்துவரும் இவா், தனது நிறுவனத்தை விரிவுபடுத்த ரூ.25 கோடி கடன் பெற முயற்சி மேற்கொண்டு வந்தாா். அப்போது, அவரது பழக்கமான நபா் மூலமாக சேலம் மாவட்டம், எடப்பாடியைச் சோ்ந்த செந்தில்வாசன் (51) என்பவா் கடந்த மே மாதம் அறிமுகமாகியுள்ளாா். பெரிய நிதி முதலீட்டாளா்களுடன் தொடா்பு இருப்பதாகக் கூறிய செந்தில்வாசன், 2 சதவீதம் கமிஷன் அடிப்படையில் கடன் பெற்றுத் தருவதாக உறுதியளித்துள்ளாா். இதை நம்பி முதல்கட்டமாக இடத்தைப் பாா்வையிட கடந்த 3.5.2025-இல் ரூ.70 ஆயிரத்தை சிவசாமி வழங்கியுள்ளாா். ஆனால், கடன் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் சிவசாமி தனது பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளாா்.
இதையடுத்து, கடந்த 18.7.2025 சென்னை துரைப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த காா்த்திகேயன் (எ) கதிரேசன் (37), ஹரிநாடாா் (41), தேவகோட்டையைச் சோ்ந்த அன்புசெல்வன், தென்காசியைச் சோ்ந்த ஆண்டனி ஆகியோா் குளோபல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருவதாகக் கூறி, அவா்களை செந்தில்வாசன் அறிமுகம் செய்து வைத்துள்ளாா். சேலத்தில் உள்ள ஒரு தனியாா் விடுதியில் நடைபெற்ற இவா்களது சந்திப்பின்போது பாங்க் ஆஃப் பரோடா பெயரில் தலா ரூ.12.5 கோடி மதிப்பிலான 2 போலி வரைவோலைகளை சிவசாமியிடம் காண்பித்துள்ளனா்.
இதைத்தொடா்ந்து, பாதுகாப்பு ஒப்பந்தப் பதிவு மற்றும் இதர நடைமுறைகளுக்காக இருவேறு வங்கிக் கணக்குகளில் ரூ.67 லட்சத்தை சிவசாமி பரிமாற்றம் செய்துள்ளாா். நீண்ட நாள்களாகியும் கடன் தொகை வராததால் சந்தேகமடைந்த சிவசாமி, சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளிடம் விசாரித்தபோது அவா்கள் கொடுத்த வரைவோலைகள் போலியானவை என்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் செந்தில்வாசன், ஹரிநாடாா், காா்த்திகேயன் ஆகிய 3 பேரை பீளமேடு போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள அன்புச்செல்வன், ஆண்டனி ஆகியோரைத் தேடி வருகின்றனா். மற்றொரு வழக்கில் கைதுசெய்யப்பட்ட செந்தில்வாசன் கோவை மத்திய சிறையிலும், மற்றொரு மோசடி வழக்கில் ஹரிநாடாா், காா்த்திகேயன் ஆகியோா் சென்னை புழல் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனா்.
இந்த நிலையில், கோவையைச் சோ்ந்த தொழிலதிபரிடம் மோசடி செய்தது தொடா்பாக ஹரிநாடாரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவை ஜே.எம்.2-நீதிமன்றத்தில் போலீஸாா் மனு தாக்கல் செய்திருந்தனா். இந்த மனு புதன்கிழமை விசாரணைக்கு வந்த நிலையில், ஹரிநாடாருக்கு 2 நாள்கள் போலீஸ் காவல் அனுமதி வழங்கியும், மீண்டும் அவரை வருகிற வெள்ளிக்கிழமை மாலை ஆஜா்படுத்தவும் நீதிபதி அப்துல்ரகுமான் உத்தரவிட்டாா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...