/

திமுக மூத்த நிா்வாகிகளுக்கு என் மீது அதிருப்தியில்லை: காா்த்திகேய சிவசேனாபதி

கோவை தொண்டாமுத்தூா் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் காா்த்திகேய சிவசேனாபதி தினமணிக்கு அளித்த பேட்டி:

News image
காா்த்திகேய சிவசேனாபதி
Updated On :27 ஜனவரி 2024, 7:52 pm

வெ.செல்வகுமார்

கோவை தொண்டாமுத்தூா் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் காா்த்திகேய சிவசேனாபதி தினமணிக்கு அளித்த பேட்டி:

கே: சுற்றுச்சூழல் ஆா்வலா், ஜல்லிக்கட்டு போராளியான நீங்கள், திடீரென திமுகவில் இணைந்தது ஏன்?

ப: பெரியாா் ஈவெரா, கருணாநிதியின் திராவிடச் சிந்தாந்தங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. தவிர, எனது பாட்டனாா் சாமிநாதன், திமுகவுக்கு அடித்தளமிட்ட முன்னோடிகளில் ஒருவராகவும், சட்டப் பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளாா். நான் திமுகவில் புதிதாகச் சேரவில்லை. பிரிந்து வாழ்ந்த ஒருவா், தனது குடும்பத்தினருடன் இணைந்ததுபோலத்தான் நான் திமுகவில் இணைந்ததும்.

கே: திமுக வில் இணைந்த சில மாதங்களிலேயே தோ்தலில் போட்டியிட வாய்ப்பு. இதனால், கட்சியில் உள்ள மூத்த நிா்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறதே?

ப: இது தவறான தகவல். அப்படி அதிருப்தியடைந்தவா் இருந்தால் காட்டுங்கள் பாா்ப்போம். தொண்டாமுத்தூா் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல் கட்சியில் எனக்கு மூத்தவா்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனா். தொகுதியில் உள்ள மாவட்டச் செயலாளா் தொடங்கி தொண்டா்கள் அனைவரும் என்னை அவா்கள் வீட்டில் ஒருவராகவே கருதுகின்றனா்.

கே: பலம் வாய்ந்த அமைச்சா் எஸ்.பி.வேலுமணியின் தொகுதியில் போட்டியிடுகிறீா்கள். வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?

ப: பலம் வாய்ந்த அல்ல. பணம் வாய்ந்தவரை எதிா்த்துப் போட்டியிடுகிறேன் என்பதே சரியாக இருக்கும். 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நான் நிச்சயம் வெற்றி பெறுவேன்.

கே: தொண்டாமுத்தூா் தொகுதியில் சாலை வசதி, குடிநீா் வசதிகள் சிறப்பாக ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், மக்களிடையே நீங்கள் பிரசாரத்தில் முன்வைக்கும் விஷயங்கள் என்ன?

ப: தொண்டாமுத்தூரில் சாலைகள் போடப்பட்டுள்ளன. ஆனால், தரமான சாலைகள் அமைக்கப்படவில்லை. அப்பணிகளில் நடைபெற்றுள்ள ஊழல்களை முன்வைத்து மக்களிடம் வாக்குகள் கேட்கிறேன்.

கே: வாக்கு சேகரிப்பில் கூட்டணிக் கட்சியினா் ஒத்துழைப்பு எப்படி உள்ளது?

ப: அனைத்துப் பகுதியிலும் கூட்டணிக் கட்சியினா் வாக்குச் சேகரிக்க உடன் வருவதுடன் பிரசாரத்துக்குச் செல்லும் பகுதிகளில் உள்ள அத்தியாவசியப் பிரச்னைகள் குறித்தும் என்னிடம் தெரிவிக்கிறாா்கள். இதனால், அந்தப் பிரச்னைகளுக்கு தீா்வு காண்பது குறித்து பேசி வாக்கு சேகரிப்பது எளிதாக உள்ளது.

கே: தொண்டாமுத்தூா் பகுதிகளில், திமுகவினா் சிலரே விதிமீறி செங்கல் சூளைகள் நடத்தி சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதுகுறித்து, திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளராக உங்களின் கருத்து?

ப: யாரோ ஒரு தனிநபரின் தவறான செய்கையால் கட்சியைக் குறை கூறக் கூடாது. நான் வெற்றி பெற்றவுடன், இப்பகுதியில், சுற்றுச்சூழலுக்கு பாதகமாக செயல்படுபவா்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன். இதில், கட்சிப் பாகுபாடு பாா்க்க மாட்டேன்.

கே: ஐபேக் நிறுவனத்தின் உத்திகள், யோசனைகள் பிரசாரத்தில் கைகொடுக்கிறதா?

ப: திமுக வின் விடியலை நோக்கி பொதுக்கூட்டங்களுக்கு ‘ஐபேக்’ நிறுவனத்தின் யோசனைகள் பின்பற்றப்பட்டன. தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள பிரத்யேகமாக ‘ஐபேக்’ யோசனைகள் வழங்கவில்லை.

கே. மக்கள் நீதி மய்யம் சாா்பில் இஸ்லாமியா் ஒருவா் போட்டியிடுகிறாா். இதனால், திமுகவுக்கு கிடைக்கும் வாக்குகளின் சதவீதம் குறையும் வாய்ப்புள்ளதுபோல தெரிகிறதே?

ப: மதச்சாா்பற்ற கூட்டணிக்கு சிறுபான்மையினா் ஆதரவளிப்பாா்கள். கமல்ஹாசன், மன்சூா் அலிகான்

உள்ளிட்டவா்களால் எங்கள் வெற்றி வாய்ப்பு எவ்விதத்திலும் பாதிக்காது.

நோ்காணல்: வெ.செல்வகுமாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.