/

பொள்ளாச்சி வட்டாரத்தில் மூடப்படும் நார்த் தொழிற்சாலைகள்

பொள்ளாச்சி வட்டாரத்தில் கடும் வறட்சி காரணமாக தென்னை மரங்கள் காய்வதால், தேங்காய் உரிமட்டைகளுக்கு

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:15 am

ஆர். வேல்முருகன்

பொள்ளாச்சி வட்டாரத்தில் கடும் வறட்சி காரணமாக தென்னை மரங்கள் காய்வதால், தேங்காய் உரிமட்டைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில மாதங்களில் சுமார் 200-க்கு மேற்பட்ட தென்னை நார்த் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

  பொள்ளாச்சி வட்டாரத்தில் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தென்னை மரங்கள் அதிகம் இருப்பதால் இங்கு 600-க்கு மேற்பட்ட தென்னை நார்த் தொழிற்சாலைகள் உள்ளன.

  தேங்காய் மட்டையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் நாரின் பெரும்பகுதி கேரளம் உள்ளிட்ட நாட்டின் பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் தென்னை நார் ஏற்றுமதியாகிறது.

பொள்ளாச்சி பகுதியில் மொத்தமுள்ள 600 தென்னை நார்த் தொழிற்சாலைகளில் 200-க்கு மேற்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. இவற்றில் வேலை செய்து வந்த சுமார் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

  பொள்ளாச்சி பகுதியில் இருந்து தினமும் சுமார் ரூ. 70 லட்சம் மதிப்புள்ள தென்னை நார் மற்றும் நார்க்கழிவுத் துகள் கட்டிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. ஆனால் இப்போது தேவை அதிகம் இருந்தாலும், தேங்காய் மட்டைக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

  தென்னை நார்த் தொழிற்சாலைகளுக்கு தினசரி சராசரியாக 40 ஆயிரம் மட்டைகள் தேவை. ஆனால் பொள்ளாச்சியில் வறட்சி காரணமாகப் போதிய உரிமட்டைகள் கிடைப்பதில்லை.

கர்நாடகத்தில் தென்னை இருக்கும் அளவுக்கு தென்னை நார்த் தொழிற்சாலைகள் இல்லை. இதனால் பல வியாபாரிகள் கர்நாடகத்தில் இருந்து பொள்ளாச்சி நார்த் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மட்டைகளைக் கொண்டுவந்து தருகின்றனர். பற்றாக்குறையைச் சமாளிக்க கேரள மாநிலத்தில் இருந்தும் தேங்காய் மட்டை பொள்ளாச்சிக்குக் கொண்டு வரப்படுகிறது.

  கடுமையான பற்றாக்குறை நிலவுவதால், தேங்காய் மட்டையின் விலை கடந்த சில மாதங்களில் 50 பைசாவில் இருந்து ரூ. 2 ஆக உயர்ந்துள்ளது. மூலப்பொருளான தேங்காய் மட்டையின் விலை கடுமையாக உயர்ந்ததால், தென்னை நாரின் விலையும்  உயர்ந்துள்ளது. தென்னை நாரின் விலை, மட்டை விலையேற்றத்துக்கு முன் கிலோ ரூ. 8 ஆக இருந்தது. விலையேற்றத்துக்குப் பின் இப்போது கிலோ ரூ. 30 ஆக உயர்ந்துள்ளது.

பொள்ளாச்சியில் இருந்து ரூ. 150 கோடி ஏற்றுமதி

பொள்ளாச்சி பகுதியில் இருந்து மட்டும் தென்னை நார், நார்க் கழிவுத் துகள் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களின் ஏற்றுமதி, ரூ. 150 கோடிக்கு மேல் உள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பொள்ளாச்சியில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் நார்க்கழிவுத் துகள் கட்டிகள் மற்றும் தென்னை நாரைப் பயன்படுத்தி விவசாயம் செய்யப்படுகிறது.

நார்க்கழிவுத் துகள்களைப் பயன்படுத்தி இப்போது வறட்சியால் வாடும் தென்னை மரங்களைக் காப்பாற்ற விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் வெளிநாட்டில் மட்டுமல்லாது உள்நாட்டிலும் நார்க்கழிவுத் துகள்களுக்குத் தேவை அதிகரித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.