/

வாழ்க்கைப் போராட்டத்தில் உதகை ஹெச்பிஎப் தொழிற்சாலை

உதகை, பிப். 9: உதகையிலுள்ள ஹெச்பிஎப் தொழிற்சாலையின் மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசின் செயலர்கள் கூட்டம் தில்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இத்தொழிற்சாலை குறித்து எடுக்கப்படும் முடிவுக்கா

News image
Updated On :2 ஜனவரி 2024, 4:09 pm

ஏ. பேட்ரிக்

உதகை, பிப். 9: உதகையிலுள்ள ஹெச்பிஎப் தொழிற்சாலையின் மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசின் செயலர்கள் கூட்டம் தில்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இத்தொழிற்சாலை குறித்து எடுக்கப்படும் முடிவுக்காக தொழிலாளர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

÷தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரே பிலிம் தொழிற்சாலையான ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் (ஹெச்பிஎப்) தொழிற்சாலை மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமாகும். கடந்த 1991ம் ஆண்டு வரை நல்ல லாபத்தில் இயங்கி வந்த இந்தத் தொழிற்சாலை, பின்னர் தொடர் நஷ்டத்தைச் சந்தித்ததால் நலிவடைந்த நிலைக்குத் தள்ளப்பட்டது.

÷1992ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கையால், பிலிம் தயாரிப்பிலிருந்த வெளிநாட்டு நிறுவனங்களான அக்பா, கொடாக் போன்றவை இந்தியாவில் நுழைந்தன. இந்நிறுவனங்களுக்கு வரிச்சலுகை உள்ளிட்ட அனைத்துச் சலுகைகளும் அளிக்கப்பட்ட நேரத்தில், ஹெச்பிஎப் தொழிற்சாலைக்கு மட்டும் கூடுதல் வரி விதிக்கப்பட்டது.

÷வெளிநாட்டு நிறுவனங்கள் குறைந்த விலைக்கு பிலிம்களை இந்தியாவில் விற்ற அதே நேரத்தில், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்து பிலிமின் விலை கூடுதலாக இருந்ததால் சந்தையில் இதன் விற்பனையும் மதிப்பும் குறையத் தொடங்கியது.

÷இத்தொழிற்சாலையில் 4,800 தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்; தற்போது 292 அதிகாரிகள் உள்பட 723 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். அத்துடன் இத்தொழிற்சாலை ஊழியர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஊதிய உயர்வு ஏதுமின்றி பழைய ஊதிய ஊதியத்தையே பெற்று வருகின்றனர்.

÷இத்தொழிற்சாலையில் கடந்த 1988ம் ஆண்டு புதிதாகத் தொடங்கப்பட்ட பாலியஸ்டர் எக்ஸ்ரே பிலிம் தயாரிப்புக்கான பணிகள் 1996ம் ஆண்டில் முடிவடைந்து உற்பத்தி தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், குறித்த காலத்தில் பணி முடியாததால், ரூ. 288 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட இத்திட்டம் ரூ. 680 கோடிக்கும் அதிகமாக உயர்ந்தது.

÷எனவே வங்கிகளிடமிருந்து பெற்ற கடனோடு, தொழிற்சாலையின் இருப்புத் தொகையும் முற்றிலும் செலவழிந்தது. இதனால், இத்தொழிற்சாலை தற்போது மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ளது.÷பிலிம் தயாரிப்புக்கான முக்கிய மூலப்பொருளான வெள்ளியின் விலையில் ஏற்பட்ட உயர்வு காரணமாக அதிக அளவில் இண்டஸ்டிரியல் மற்றும் மருத்துவ எக்ஸ்ரே பிலிம்களை இங்கு தயாரிக்க முடியவில்லை.

÷எனவே, மருத்துவமனைகளுக்குக் கொடுக்க வேண்டிய மருத்துவ எக்ஸ்ரே பிலிம்களை கொடுக்க முடியாத சூழலால், இந்நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் சேர்த்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

  இதன் காரணமாக தமிழகத்தில் மருத்துவ எக்ஸ்ரே பிலிம்களுக்கான டெண்டரில் இத்தொழிற்சாலை பங்கெடுக்க முடியாத நிலை உள்ளது.

÷இத்தொழிற்சாலையின் புனரமைப்புக்காக கடந்த 2010ம் ஆண்டில் பொதுத்துறை நிறுவனங்களுக்கான மறுசீரமைப்பு வாரியக் கூட்டத்தில் ரூ. 302 கோடி நிதி ஒதுக்கபரிந்துரைக்கப்பட்டதில், தொழிற்சாலை உற்பத்தி மூலதனமாக ரூ. 30 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால், அதைத் தொடர்ந்து கொடுக்கப்பட வேண்டிய தொகை இதுவரையிலும் வழங்கப்படவில்லை.

÷இதுதொடர்பாக மத்திய அரசின் செயலர்கள் நிலையிலான கூட்டமும் குறிப்பிட்ட நாட்களில் நடக்காமல் ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இறுதியாக இக்கூட்டம் இம்மாதம் 10ம் தேதி (இன்று) நடப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

÷இக்கூட்டத்தில் ஹெச்பிஎப் தொழிற்சாலை புனரமைப்புக்காக எஞ்சியுள்ள தொகை ரூ. 272 கோடியை வழங்குவது குறித்தும், தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்தும் விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

÷பிலிம் தயாரிப்புக்கு ஏற்ற அனைத்து அடிப்படை வசதிகளுடனும், தொழில் திறமையுடனும், தொழிலாளர்களுடனும் இத்தொழிற்சாலை இருந்தாலும், உற்பத்தி மூலதனம் இல்லாததாலும், மத்திய அரசின் பாராமுகத்தாலும் நலிவடைந்த நிலையில் இருக்கிறது.

÷தில்லியில் இன்று நடைபெறும் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளைப் பொறுத்தே இத்தொழிற்சாலைக்கு வாழ்வா சாவா என்பது தெரியவரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.