தென்னைய வச்சாலும் கண்ணீரு..!
கோவை, செப்.30: "பிள்ளையப் பெத்தா கண்ணீரு; தென்னைய வச்சா இளநீரு' என்பார்கள். ஆனால், "தென்னையும் கண்ணீரை வரவழைக்கும்' என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர் விவசாயிகள். கடந்த சில மாதங்களாக தேங்காய் விலை கட


கோவை, செப்.30: "பிள்ளையப் பெத்தா கண்ணீரு; தென்னைய வச்சா இளநீரு' என்பார்கள். ஆனால், "தென்னையும் கண்ணீரை வரவழைக்கும்' என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர் விவசாயிகள்.
கடந்த சில மாதங்களாக தேங்காய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து வருவதால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த விலையில் ஒரு தேங்காய் ரூ.3-க்கு விற்கிறது என்கின்றனர் விவசாயிகள்.
நமது உணவு வகைகளில் முக்கிய அம்சங்களில் இருக்கும் தேங்காய், விவசாயிகளின் சாகுபடி பயிர்களில் முக்கியமானது. குறிப்பாக கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் அதிகளவில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது.
அதிகரிக்கும் சாகுபடி...: ஈரியோபைட், வாடல், செஞ்சாறு வடிதல் என வகை வகையாக நோய்கள் தென்னையைத் தாக்கினாலும், அதையும் மீறி சாகுபடி தற்போது அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் தென்னை சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது தான்.
விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக பெரும்பாலான விவசாயிகள் தென்னைக்கு மாறிவிட்டனர். மற்ற பயிர்களுக்கான பராமரிப்பு அதிகம் என்பதால் விவசாயத் தொழிலாளர்கள் அதிகம் தேவைப்படுகின்றனர். ஆனால், கோவை போன்ற தொழில்கள் நிறைந்த மாவட்டங்களில் விவசாயத் தொழிலாளர்கள் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை.
கொப்பரை கொள்முதல் விலை வீழ்ச்சி: கோவை மாவட்டத்தில் ஏறத்தாழ ஒரு லட்சம் ஹெக்டேரில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு சராசரியாக 2-லிருந்து 3 சதவீதம் சாகுபடி பரப்பு அதிகரித்து வருகிறது. தேங்காய் விலை வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம் என்கின்றனர் வேளாண் துறையினர்.
முக்கியமாக, வெளிச்சந்தையில் கொப்பரை கொள்முதல் விலை கணிசமாகக் குறைந்துவிட்டது. இதனால் தேங்காய் விலை வீழ்ச்சியடைந்துவிட்டது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆதார விலை, ஆதரவாக இல்லை: கொப்பரைக்கு ஆதார விலை அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதைப் பெறுவதில் விவசாயிகளுக்கு பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன என்கிறார், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் வழுக்குப்பாறை பாலு. இதுகுறித்து அவர் கூறியது:
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. இருப்பினும் சில மாதங்களாக விலை கடுமையாகக் குறைந்துவிட்டது. வெளிச்சந்தையில் கொப்பரை கொள்முதல் செய்யும்போது விவசாயிகளுக்கு சற்று ஆறுதலாக இருந்தது. ஆனால், வெளிச்சந்தை விலை கிலோ ரூ.34-லிருந்து ரூ.28 ஆக தற்போது சரிந்துவிட்டது.
அரசின் ஆதார விலை ரூ.44.50 என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதைப் பெறுவதற்கான ஈரப்பதம் உள்ளிட்ட வரைமுறைகளால் பெரும்பாலான விவசாயிகளுக்கு இது பொருத்தமானதாக இல்லை.
கைக்கு கிடைப்பது சொற்ப தொகையே...: கொப்பரை எடுப்பதற்காக அதற்கான தளங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். போக்குவரத்துச் செலவைக் கணக்கிட்டால் ஆதார விலையும் கட்டுப்படியானதாக இல்லை. இதனால், விவசாயிகள் கொப்பரை போடுவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். தேங்காய் வரத்து அதிகமாகி விடுகிறது.
சாகுபடி செலவு போக மிகச் சொற்ப தொகை தான் விவசாயிக்கு கிடைக்கிறது. ஆகவே, தேங்காய் கொள்முதல் செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாமாயில் இறக்குமதியைக் கட்டுப்படுத்தி தேங்காய் எண்ணெய் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும் என்கிறார்.
முன்னுரிமை அடிப்படையில் தாராளமாக கொள்முதல்: நியாயமான காரணங்கள் இல்லாமல் கொப்பரை கொள்முதல் செய்யாமல் நிராகரித்தால் புகார் செய்யலாம் என்று கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
"அரசின் ஆதாரவிலையைக் காட்டிலும் வெளிச்சந்தை விலை குறைவாக இருக்கும்போது கொப்பரை கொள்முதல் நிலையங்களுக்கு வர விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2009 ஏப்ரலில் இருந்து செப்டம்பர் 23 வரை ரூ.27.25 கோடி மதிப்புள்ள 6 ஆயிரத்து 122 மெட்ரிக் டன் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொப்பரை கொள்முதல் செய்கிறோம்.
கொள்முதல் நிலையங்களில் முன்பதிவு செய்துள்ள அடிப்படையில், கொப்பரையை விவசாயிகள் கொண்டுவரலாம் என்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...