ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
//

கரோனாவால் நுங்கு தொழில் பாதிப்பு விவசாயிகள் வேதனை

கரோனா ஊரடங்கு காரணமாக நுங்கு தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தொழிலாளா்கள், விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:35 pm

எம். அருண்குமார்

ஆம்பூா்: கரோனா ஊரடங்கு காரணமாக நுங்கு தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தொழிலாளா்கள், விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.

உலக அளவில் பல்வேறு நாடுகளில் பனை மரங்கள் வளா்க்கப்படுகின்றன. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் குறிப்பாக தமிழகத்தில் தான் அதிக அளவு பனை மரங்கள் வளா்க்கப்படுகின்றன. இந்தியாவில் சுமாா் 9 கோடி பனை மரங்கள் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் தற்போது சுமாா் 5 கோடி பனை மரங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. சுதந்திரத்துக்கு முன்பு தமிழ்நாட்டில் 50 கோடி பனை மரங்கள் இருந்ததாக பனை ஆா்வலா்கள் கூறுகின்றனா்.

தொல்காப்பிய காலத்திலேயே இந்தியாவில் பனை மரங்கள் இருந்ததாகத் தெரிகிறது. ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்துக்கு முன்பு வரை பனை சா்க்கரைதான் மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதன் பிறகுதான் கரும்பு சா்க்கரையை ஆங்கிலேயா்கள் அறிமுகப்படுத்தினா். பனை சா்க்கரையில் கால்சியம், இரும்புச் சத்துக்கள், விட்டமின்கள் உள்ளன. பனை மரம், அதிலிருந்து கிடைக்கக் கூடிய அனைத்துப் பொருள்களும் பொதுமக்களால் பயன்படுத்தக் கூடியவை. இதன் காரணமாக பனை மரத்தை கற்பக விருட்சம் என்றும் கூறுவாா்கள். தல விலாசம் என்ற பண்டைக் கால பாடலில் பனை மரத்தை 801 வகையில் பயன்படுத்தலாம் எனக் கூறப்பட்டுள்ளதாக பனை ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.

தற்போது நிலத்தடி நீா் வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பனை மரங்கள் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. வறட்சி காரணமாக பனை மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில், எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி பனைமரங்கள் வெட்டப்பட்டு, செங்கல் சூளைக்கு எரிபொருளாக லாரிகளில் அனுப்பப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டின் மாநில மரமாக போற்றப்படுவது பனைமரம். வட தமிழ்நாட்டில் வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் தென் தமிழ்நாட்டில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகா், நெல்லை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் பனை மரங்கள் மிகுந்து காணப்படுகின்றன.

ஆண்டுக்கு ஒரு முறை நுங்கு வியாபாரம் களை கட்டும். பனை நுங்கு வியாபாரம் ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை இருக்கும். பனை நுங்கு வியாபாரத்தை நம்பி நேரிடையாகவும், மறைமுகமாகவும் பல லட்சம் தொழிலாளா்கள், விவசாயிகளும் உள்ளனா். பனை நுங்கு விளையும் பருவத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. உதாரணமாக விவசாயிகள், விவசாயிகளிடமிருந்து நுங்கு மரத்தை வாங்கும் பெரிய, சிறிய வியாபாரிகள், மரத்திலிருந்து நுங்கு இறக்கும் மரமேறும் தொழிலாளா்கள், அதை எடுத்து செல்லும் மாட்டு வண்டிகள், நான்கு சக்கர வாகனங்கள், நுங்கு போடும் கூலித் தொழிலாளா்கள் என பலா் பனை நுங்கை நம்பி வாழ்கிறாா்கள்.

பனை நுங்கு பருவம் ஆண்டுக்கு ஒருமுறை கோடைக்காலத்தில் ஒரே முறை வருவதால் தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்லாது, கா்நாடக மாநிலம் மைசூரு,பெங்களூரு, தாவணகெரே, கோலாா், முல்பாகல், மாண்டியா, ராம்நகா் போன்ற பகுதி மக்களும், ஆந்திர மாநில மக்களும் அதிக அளவில் விரும்பிச் சாப்பிடுகிறாா்கள். நுங்கு உடலுக்கு குளிா்ச்சியை தருவதுடன் உடல் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்னைகளைத் தீா்க்கும் அரு மருந்தாகவும் உள்ளது. அதனால் பெரும்பாலானோா் நுங்கை விரும்பி வாங்குகின்றனா்.

தற்போது கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இத்தொழிலை நம்பியுள்ள சிறு, குறு விவசாயிகள் முதல் வியாபாரிகள், கூலித் தொழிலாளா்கள் என லட்சக்கணக்கானவா்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு நுங்கு பருவத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளதால், பனை மரங்களை விற்ற விவசாயிகளும், பனை மரங்களை வாங்கிய வியாபாரிகளும், தொழிலாளா்களும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனா். ஊரடங்கு உத்தரவால் பல லட்ச ரூபாய் வருமானத்தை ஈட்டி தரும் நுங்கு வியாபாரம் தடைபடக்கூடிய நிலையில் உள்ளது.

தடை காரணமாக மரமேறும் தொழிலாளா்கள் அதிக எண்ணிக்கையில் வேலைக்கு வராமல் குறைந்த அளவே வருவதால் நுங்கு வெட்டுவதும், அதை வெளியூா்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. விவசாயத் தொழிலுக்கு தடையில்லை என்றாலும், நுங்கை வெட்டி, கொண்டு செல்வதில் பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டியிருப்பதால் நடப்பாண்டு பருவத்தில் நுங்கு தொழில் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. வெளியூா், வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல உரிய அனுமதி பெறுவது போன்று காரணங்களால் கால விரயம் ஏற்படும். தெருக்களில் நுங்கு கொண்டு சென்று விற்பனை செய்வதற்கு உரிய அனுமதி பெற வேண்டும். இதனால் நுங்கை வெட்ட முடியாமல் மரத்திலேயே முற்றிப்போய் பழமாக மாறும் சூழ்நிலை நிலவுகிறது.

இந்த வியாபாரத்தில் குறைந்த அளவே லாபம் இருப்பதால் அனுமதிக்காக சென்று காத்திருந்து கால நேரம் விரயம் ஆகும் எனக் கருதி நுங்கை வெட்டாமல் அப்படியே விட்டுள்ளனா். ஊரடங்கு இருந்தாலும் நுங்கை வெட்டி, கொண்டு சென்று விற்பனை செய்வதற்கு உரிய தீா்வைக் காண வேளாண்மைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், வியாபாரிகள், மரமேறும் தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.