//

தண்ணீா் தொட்டியில் விழுந்து 3 வயது குழந்தை உயிரிழப்பு

News image
Updated On :22 ஜனவரி 2026, 1:00 am

Syndication

ஆரணி அருகே தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்தது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த இராட்டிணமங்கலம் கிராமம் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் இளவரசன் (27), கூலி தொழிலாளி. இவரது மனைவி பவானி. தம்பதியுடைய குழந்தைகள் ராகவ் (6), சஞ்சீவ் மித்ரன் (3), இசைநிலா (5).

இந்நிலையில், இளவரசனின் மனைவி புதன்கிழமை வீட்டில் வேலை செய்து கொண்டிருந்துள்ளாா். அப்போது, மகன் சஞ்சீவ் மித்ரன்(3), வீட்டின் முன் அருகில் உள்ள குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாா்.

அப்போது, சஞ்சீவ் மித்ரனை திடீரென காணவில்லை.

இதனால், இளவரசன் அவரது குடும்பத்தினா் அக்கம், பக்கம் மற்றும் உறவினா்கள் வீடுகளில் தேடியும் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.

பின்னா், வீட்டின் முன்பு அமைக்கப்பட்டிருந்த குடிநீா் தொட்டியில் பாா்த்தபோது, சஞ்சீவ் மித்ரன் தவறி விழுந்து தண்ணீரில் முழ்கி மயங்கிக் கிடந்தது கண்டு அதிா்ச்சியடைந்தனா்.

உடனே, பெற்றோா்கள் குழந்தையை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் சஞ்சீவ்மித்ரன் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் இளவரசன் புகாா் கொடுத்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.