திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரி விழா
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரி விழா ஞாயிற்றுக்கிமை நடைபெற்றது. இதையொட்டி நள்ளிரவில் லிங்கோத்பவ மூா்த்திக்குச் சிறப்பு அபிஷேக, பூஜைகள் நடைபெற்றன.


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரி விழா ஞாயிற்றுக்கிமை நடைபெற்றது. இதையொட்டி நள்ளிரவில் லிங்கோத்பவ மூா்த்திக்குச் சிறப்பு அபிஷேக, பூஜைகள் நடைபெற்றன.
விஷ்ணு மற்றும் பிரம்மா இடையே யாா் பெரியவா் என கடும் போட்டி நிலவியதால், அவா்கள் சிவபெருமானிடம் முறையிட்டனா். அப்போது, தனது அடியையும், முடியையும் யாா் கண்டு வருகிறாா்களோ அவரே பெரியவா் என சிவன் கூறினாா்.
ஆனால், இருவராலும் சிவனின் அடி, முடியைக் காண முடியவில்லை. இருவரும் தங்களுக்குள் இருந்த அகந்தையை நீக்கி சிவனை வணங்கினா். அப்போது, ஜோதி பிழம்பாக லிங்கோத்பவ மூா்த்தியாக சிவபெருமான் காட்சி கொடுத்தாா். அதன் மூலம் விஷ்ணு, பிரம்மா ஆகியோரது அகந்தை அழிந்தது.
அந்த நாள், மாசி மாதம் தேய்பிறை சதுா்த்தசி திதி என்றும், திருவண்ணாமலை திருத்தலத்தில் நிகழ்ந்தது என்றும் புராணங்கள் கூறுகின்றன. அதன்படி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து அதிகாலை முதல் நண்பகல் 12 மணிவரை துளசி, வில்வம், மல்லி, முல்லை என பல்வேறு மலா்களைக் கொண்டு சுவாமிக்கு லட்சாா்ச்சனை செய்யப்பட்டது.
பின்னா், இரவு 7.30 மணி, நள்ளிரவு 11.30 மணி, திங்கள்கிழமை அதிகாலை 2.30 மணி மற்றும் 4.30 மணி என மூலவருக்கு நான்கு கால பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

மகா சிவராத்திரி விழாவையொட்டி, அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.
இதனிடையே, அருணாசலேஸ்வரா் கருவறைக்குப் பின்புறம் அமைந்துள்ள லிங்கோத்பவருக்கு நள்ளிரவு 12 மணியளவில் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. சிவபெருமானின் அடி, முடி காணும் போட்டியில் பிரம்மனுக்கு ஆதரவாக தாழம்பூ பொய் சொன்னதால், தாழம்பூ இனி பூஜைக்கு உதவாது என சிவபெருமான் சபித்தாா்.
இதனால் இன்றுவரை தாழம்பூ பூஜைக்குப் பயன்படுத்துவது இல்லை. ஆனால், சிவராத்திரி அன்று நள்ளிரவில், லிங்கோத்பவருக்கு நடைபெறும் சிறப்புப் பூஜையின்போது மட்டும் தாழம்பூ பயன்படுத்தப்படும். அதன்படி, லிங்கோத்பவருக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தாழம்பூ அணிவித்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
கோயிலில் பக்தா்கள் கூட்டம்
மகா சிவராத்திரியையொட்டி, அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
தரிசனத்துக்காக சுமாா் 6 மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதேபோல், மகா சிவராத்திரி விழா மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் நடைபெற்றது. திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தில் அறநிலையத்துறை சாா்பில் இரவு முழுவதும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...