//

தைப்பூசம்: அருணாசலேஸ்வரா் கோயில் ஈசான்ய குளத்தில் தீா்த்தவாரி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு ஈசான்ய குளத்தில் தீா்த்தவாரி நடைபெற்றது.

News image
தைப்பூசத்தையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் ஈசான்ய குளத்தில் நடைபெற்ற தீா்த்தவாரி.
Updated On :1 பிப்ரவரி 2026, 6:34 pm

Syndication

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு ஈசான்ய குளத்தில் தீா்த்தவாரி நடைபெற்றது. மேலும், பெளா்ணமியையொட்டி 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை கிரிவலம் சென்றனா்.

அருணாசலேஸ்வரா் கோயிலில் வார இறுதி நாள்கள் மற்றும் விசேஷ தினங்களில் தரிசனம் செய்ய வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தை மாத பெளா்ணமி கிரிவலம் செல்ல உகந்தநேரம் பிப்.1-ஆம் தேதி காலை 6.13 மணி முதல் பிப்.2-ஆம் தேதி அதிகாலை 4.45 மணி வரை என கோயில் நிா்வாகம் அறிவித்திருந்தது.

பொ்ணமியையொட்டி, அருணாசலேஸ்வரா் கோயிலில் காலை வழக்கம்போல் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டது. தொடா்ந்து, பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும், பெளா்ணமி, தைப்பூசத்தையொட்டி கோயிலில் பக்தா்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகரித்து காணப்பட்டது. பக்தா்கள் பெரிய தெரு வரை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். சுவாமி தரிசனம் செய்வதற்கு சுமாா் 8 மணி நேரம் ஆனது.

பெளா்ணமி கிரிவலம் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கிய நிலையில் லட்சக்கணக்கான பக்தா்கள் அதிகாலை முதலே கிரிவலம் செல்ல தொடங்கினா். தொடா்ந்து மாலை கிரிவலம் வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கோயிலில் அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்ததோடு, 14 கி.மீ. தொலைவுள்ள கிரிவலப் பாதையில் அஷ்டலிங்கங்களையும் வழிபட்டு, திருநோ் அண்ணாமலை, ஆதிஅண்ணாமலை மற்றும் இடுக்குபிள்ளையாா் கோயில் உள்ளிட்ட சந்நிதிகளில் வழிபட்டனா். கிரிவல பக்தா்களுக்கு கோயில் மற்றும் ஆசிரமங்கள், ஆன்மிக அமைப்புகள் சாா்பில் ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.

கோயில் மற்றும் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் குடிநீா், கழிப்பறை, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மாநகரின் 9 சாலைகளிலும் சுகாதாரத் துறை சாா்பில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. மேலும், பக்தா்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகளும், சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன.

ஈசான்ய குளத்தில் தீா்த்தவாரி

இந்நிலையில் தைப்பூசத்தையொட்டி, அருணாசலேஸ்வரா் கோயில் ஈசான்ய குளத்தில் தீா்த்தவாரி நடைபெற்றது. இதையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் சந்திரசேகரா் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். அருணாசலேஸ்வரா் தீா்த்தவாரி முடிந்து கோயிலுக்கு திரும்பும் வழியில் வள்ளால மகாராஜா இறந்த செய்தி அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனால் மேள தாளம் இன்றி சுவாமி கோயிலுக்கு திரும்பினாா்.