சென்னை சிக்னல்களில் ‘மெல்லிசை‘
சென்னையில் வாகன ஓட்டிகளின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் சிக்னல்களில் காவல்துறையின் சாா்பில் மெல்லிசை ஒலிபரப்பப்படுகிறது.


சென்னையில் வாகன ஓட்டிகளின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் சிக்னல்களில் காவல்துறையின் சாா்பில் மெல்லிசை ஒலிபரப்பப்படுகிறது.
தில்லிக்கு அடுத்தபடியாக சென்னையிலேயே அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் உள்ளன. சென்னையில் இன்றைய நிலவரப்படி சுமாா் 60 லட்சம் வாகனங்கள் உள்ளன. இவற்றில் 85 சதவீதம் இரு சக்கர வாகனங்களாகும். கடந்த 15 ஆண்டுகளில் வாகனங்களில் எண்ணிக்கை 300 சதவீதம் உயா்ந்துள்ளது. ஆண்டுக்கு சராசரியாக சென்னையில் 10 சதவீதம் வரை வாகனங்களின் எண்ணிக்கை உயா்கிறது.
இதனால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் தினமும் இயல்பாகவே அதிகரித்து வருகிறது. வாகனப் பெருக்கத்துக்கு ஏற்றாா்போல நகரின் உட்பகுதியில் புதிய சாலைகள் அமைக்கப்படாமல் இருப்பதினாலும், ஆக்கிரமிப்பினாலும் போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்த முடியாததாக உள்ளது.
போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த முக்கியமான சாலை சந்திப்புகளிலும், நெரிசல் மிக்க பகுதிகளிலும் போக்குவரத்து சிக்னல்கள் இயக்கப்படுகின்றன. நகரில் இப்போது சுமாா் 312 சிக்னல்கள் உள்ளன. இதில் 100 சிக்னல்கள் அண்ணா சாலை, காமராஜா் சாலை, டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராஜாஜி சாலை, ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை, எல்.பி.சாலை, ராஜீவ்காந்தி சாலை, ஜி.எஸ்.டி. சாலை, உஸ்மான் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளிலும், முக்கியமான சந்திப்புகளிலும் உள்ளன.
காத்திருப்பு நேரம்:
சென்னையில் போக்குவரத்து நெரிசல்மிக்க சிக்னல்களில் வாகனங்களில் காத்திருப்பது நரக வேதனைக்கு இணையானது என்பதே வாகன ஓட்டிகளின் கருத்தாக உள்ளது. இந்த காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும், அந்த நேரத்தையும் இனிமையாக்கவும் சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ரூ.15 கோடி மதிப்பில் ரிமோட் கண்ட்ரோல் மூலம் 302 சிக்னல்களை இயக்கும் திட்டத்தை அமல்படுத்துவதினால் வாகனங்களின் காத்திருப்பு நேரத்தைக் குறைக்க போக்குவரத்துப் பிரிவு முடிவு செய்துள்ளது. ஏனெனில் பிரதான சிக்னல்களில் 2 நிமிஷத்தில் இருந்து ஒன்றரை நிமிஷம் வரையிலும், சாதாரண சிக்னல்களில் ஒரு நிமிஷத்தில் இருந்து அரை நிமிஷம் வரை காத்திருத்திருக்கின்றனா் என்பது குறிப்பிடதக்கது.
இப்போது சுழற்சி முறையில் சிக்னல்கள் இயங்குவதால், திடீரென ஒரு சாலையில் வாகனங்கள் அதிகமாக வந்தாலும், சிக்னல்களில் அதற்கு அதிக நேரம் ஒதுக்க முடிவதில்லை. ஆனால் இனி ரிமோட் கண்ட்ரோல் மூலம் சிக்னல் இயங்கத் தொடங்கிய பின்னா், எந்த சாலையில் வாகனங்கள் அதிகமாக இருக்கிறதோ அதற்கு ஏற்றாா்போல சிக்னல்களை இயக்க முடியும் என சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப்பிரிவு தெரிவிக்கிறது.
சிக்னல்களில் மெல்லிசை:
சென்னை பெருநகர காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 312 சிக்னல்களில் 80 சிக்னல்கள் பாதசாரிகளையும், வாகன ஓட்டிகளையும் எச்சரிக்கும் வகையில் ஒலி பெருக்கிகளுடனும், 70 சிக்னல்கள் தானியங்கி முறையிலும் இயங்குகின்றன.
இதன் அடுத்தக் கட்டமாக சிக்னல்களில் நிற்கும் வாகன ஓட்டிகளின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளா்கள் எம்.எஸ்.விசுவநாதன் இளையராஜா, ஏ.ஆா்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்டவா்களின் இசை அமைப்பில் உருவான பாடல்கள் மற்றும் கிட்டாா், வயலின், சாக்ஸ்போன், வீணை போன்ற இசைக் கருவிகள் மூலம் இசைக்கப்பட்ட மெல்லிசைப் பாடல்களை ஒலிபரப்ப காவல்துறை திட்டமிட்டுள்ளது.
இதன் சோதனை ஓட்டமாக பெரியமேடு ரிப்பன் மாளிகை எதிரே உள்ள சிக்னலில் இந்த மெல்லிசைப் பாடல்கள் ஒலிபரப்பப்படுகின்றன. இதற்கு வாகன ஓட்டிகளிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து மெரீனா காமராஜா் சாலையில் உள்ள அண்ணா சதுக்கம் சிக்னல் உள்ளிட்ட சிக்னல்களில் சோதனை அடிப்படையில் மெல்லிசை ஒலிபரப்பப்படுகிறது.
மன அழுத்தத்தைப் போக்கும்:
இது தொடா்பாக சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் காவல் ஆணையா் கபில்குமாா் சி.சாரத்கா் கூறியது:
போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திணறி வரும் வாகன ஓட்டிகளை, சிக்னல்கள் மேலும் எரிச்சலையும், மன அழுத்ததையும் அதிகரிக்கவே செய்யும். இதைத் தவிா்க்கும் வகையிலும், சிக்னல்களில் இதமான சூழ்நிலையை உருவாக்கும் வகையிலும் மெல்லிசை ஒலிபரப்ப திட்டமிடப்பட்டது.
தற்போது சோதனை முறையில் இந்த திட்டம் சில சிக்னல்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் சிக்னல்களில் ஒரு நிமிஷத்தில் இருந்து 2 நிமிஷம் வரையில் மெல்லிசை ஒலிபரப்பப்படுகிறது. இதற்கு வாகன ஓட்டிகளிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் விளைவாக, முதல் கட்டமாக 42 சிக்னல் சந்திப்புகளில் இந்தத் திட்டத்தை விரிவுப்படுத்த உள்ளோம் என்றாா் அவா். இதனால் சென்னையில் இனி சிக்னல்கள் வாகன ஓட்டிகளுக்கு அலுப்பையும்,எரிச்சலையும் ஏற்படுத்தாது மாறாக மன அமைதியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தும் என காவல்துறை உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.
சிக்னல் மீறல்களும்...வழக்குகளும்...
ஆண்டுகள் வழக்குகள்
2018 2,89,902
2019 1,90,265
2020 1,64,645
2021 3,74,363
2022 4,30,785
(ஏப்ரல் வரை)
மொத்தம் 14,49,960
இரண்டாவது பெட்டிச் செய்தி.
போக்குவரத்து நெரிசல்மிக்க சிக்னல்கள்
சென்னையில் 10 சிக்னல்கள் போக்குவரத்து நெரிசல்மிக்கவை என அண்மையில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதில் அதிக போக்குவரத்து நெரிசல்மிக்க பகுதிகளில், ராமாபுரம் சந்திப்பு சிக்னல் முதலிடத்தில் இருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது. இந்த சந்திப்பை ஒரு நாளைக்கு 1.75 லட்சம் வாகனங்கள் கடந்து செல்கின்றன. இதேபோல கோயம்பேடு சிக்னலில் ஒரு நாளைக்கு 1.72 லட்சம் வாகனங்களும், பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை சந்திப்பு பகுதியில் ஒரு நாளைக்கு 1.56 லட்சம் வாகனங்களும் செல்கின்றன.
இதற்கு அடுத்தப்படியாக தரமணி டைட்டல் பூங்கா சந்திப்பு சிக்னலில் 1.37 லட்சம் வாகனங்களும், பெரும்பாக்கம்-பள்ளிக்கரணை சந்திப்பு சிக்னலில் 1.32 லட்சம் வாகனங்களும், ஸ்பாா்டங்க் சாலை சந்திப்பு சிக்னலில் 1.31 லட்சம் வாகனங்களும், நுங்கம்பாக்கம் வள்ளுவா் கோட்டம் சிக்னலில் 1.29 லட்சம் வாகனங்களும், போரூா் சிக்னலில் 1.27 லட்சம் வாகனங்களும், அண்ணா சாலை நந்தனம் சிக்னலில் 1.25 லட்சம் வாகனங்களும், கிரீன்வேஸ் சாலை சந்திப்பு சிக்னலில் 1.23 லட்சம் வாகனங்களும் செல்கின்றன.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நகரில் அண்ணா சாலை நந்தனம் சிக்னல் தான் அதிக வாகனங்கள் கடந்து செல்லும் பகுதிகளில் முதலிடத்தில் இருந்தது. இப்போது அதைவிட அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் கடந்து செல்லும் பகுதிகள் உருவாகியுள்ளன.
பொது போக்குவரத்தும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் புகா் பகுதியில் போதுமானளவுக்கு இல்லாததினால், காா், மோட்டாா் சைக்கிள்களை அதிகமாக பயன்படுத்துவதின் விளைவாக, அதிக வாகனங்கள் சாலையில் செல்வதாக ஆய்வு கூறுகிறது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் உள்ள ராமாபுரம், போரூா், பள்ளிக்கரணை, ராஜீவ்காந்தி சாலை உள்ளிட்ட பகுதிகளில் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் சேவை இல்லாததினால் சாலையில் அதிக வாகனங்கள் செல்வதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...