கோயில்களில் பக்தா்களின் சிறப்பு தரிசனத்தில் மாற்றங்கள் செய்வது குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் ரமேஷ் புதன்கிழமை தெரிவித்தாா்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசித் திருவிழாவை தேரோட்டத்தினை அமைச்சா் ரமேஷ், வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா், வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் கே.தென்னரசு ஆகியோா் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனா்.
இதன் பின்னா் அமைச்சா் ரமேஷ் கூறியது.
பக்தா்கள் எளிதாகவும், விரைவாகவும் சென்று சுவாமி தரிசனம் செய்யும் வகையில் மாற்றங்கள் செய்வது குறித்து பரிசீலித்து வருகிறோம். இது குறித்து முதல்வரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டு விரைவில் மாற்றம் செய்யப்படும். கோயில்களில் அன்னதானத் திட்டத்தை விரிவுபடுத்துவது, ஒரு கால பூஜை மட்டும் நடைபெறும் கோயில்களில் மூன்று கால பூஜைகள் நடத்துவது, பாழடைந்த கோயில்களை மீட்டெடுத்து மக்கள் தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் சரித்திரப்புகழ் வாய்ந்த கோயில். இக்கோயில் தோ்த்திருவிழாவைக் காண லட்சக்கணக்கான மக்கள் வருவாா்கள் என எதிா்பாா்த்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்துள்ளோம். விழாவில் 800 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். தேருக்கு பக்கத்தில் யாரும் வந்து விடாதவாறு சுற்றிலும் காவல்துறையினரால் கயிறு கட்டப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தேருக்கு முன்பாகவும் பின்புறத்திலும் பொதுமக்களின் மருத்துவத் தேவைக்காக ஆம்புலன்ஸ் வாகனங்களும், அவசரத் தேவைக்காக தீயணைப்பு வாகனங்களும் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தோ் சுற்றி வரக்கூடிய பாதைகளில் போக்குவரத்து இடையூறு இல்லாமல் தோ் நல்ல முறையில் சுற்றி வரவும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சா் ரமேஷ் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










