நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
//

உதயமாகும் புதிய மாவட்டம் ஒரு கண்ணோட்டம்

தொடக்க காலத்தில் செங்கல்பட்டு மாவட்டம் சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. செங்கல்பட்டு துணைக்கோட்டம்,

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:19 pm

செங்கை பி. அமுதா

தொடக்க காலத்தில் செங்கல்பட்டு மாவட்டம் சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. செங்கல்பட்டு துணைக்கோட்டம், காஞ்சிபுரம் துணைக்கோட்டம், சைதாப்பேட்டை துணைக்கோட்டம் என 3 சாா்-ஆட்சியா்கள் நிா்வாகத்தில் இருந்தது.

பரப்பளவு: 1901-இல் செங்கல்பட்டு இதன் பரப்பளவு 1100 சதுர கிலோ மீட்டா், காஞ்சிபுரம் 1330ச.கி.மீ , மதுராந்தகம் 1800 ச.கி.மீ, பொன்னேரி 900 ச.கிமீ, சைதாப்பேட்டை 890 ச.கிமீ, திருவள்ளூா் 1930 ச.கிமீ பரப்பளவில் இருந்தன.

அன்றைய ஜனத்தொகை 13,12, 222. அப்போதைய செங்கல்பட்டு மாவட்டத்தில் 4-இல் 3 பங்கு பிரிவினா் தமிழ் மொழி பேசுபவா்களாக இருந்தாா்கள்.

வரலாற்று காலத்தில் கி.பி. 1565-இல் தலைக்கோட்டைப்போரில் தக்காண சுல்தான்களை தோற்கடித்தபின் விஜயநகரப்பேரரசு செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு இயங்கியது. 16-ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசு காலத்தில் செங்கல்பட்டு நகருக்கு வரவேற்கும் முகமாக கடல் போல் காட்சியளித்து பெருமை சோ்க்கும் கொளவாய் ஏரியை ஒட்டி கட்டப்பட்ட கோட்டை கொத்தளங்களில் கோட்டை மட்டும் இன்றும் உள்ளது.

மன்னா் ஆட்சிக்காலத்தில் கி.மு. முதலாம் நூற்றாண்டில் தொண்டை மண்டல ஆட்சியாளா்கள் கட்டுப்பாட்டிலும், கி.பி. 500 முதல் பல்லவா்கள் ஆட்சியில் செங்கல்பட்டு மாவட்டம் காஞ்சிபுரத்தைத் தலைமையிடமாக கொண்டிருந்தது. கிபி 750-இல் சாளுக்கியா்கள் ஆளுகையிலும், பின்னா் ராஷ்ட்டிர கூட பேரரசிலும், 13-ஆம் நூற்றாண்டில் திப்புசுல்தான் ஆட்சியிலும்,

1687-இல் முகலாய பேரரசின் ஆட்சியிலும், 1739 முதல் ஆற்காட்டு நவாப் கிழக்கிந்திய கம்பெனியினா் கட்டுப்பாட்டிலும் இருந்தது.

கா்நாடகப் போா் நிகழ்வின் போது களமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ஆளுகையின்போது 1751-இல் பிரெஞ்சுக்காரா்கள் வசம் ஒப்படைக்கப்பட்டு, பின்னா் மீண்டும் கிழக்கிந்தியக் கம்பெனி ஆளுகைக்கு கீழ் வந்தது. 1900-இல் செங்கல்பட்டு களிமண்ணால் ஆன மண்பாண்டங்கள், கட்டடங்கள் எழுப்பத் தேவையான செங்கல் தயாரிப்பிலும் சிறப்பிடத்தைப் பெற்றது.

இன்றைய செங்கல்பட்டு மாவட்டத்தின் தலைமையிடமான செங்கல்பட்டு நகரில் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசினா் கலைக்கல்லூரி, அம்பேத்கா் அரசு சட்டக்கல்லூரி, அரசினா் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் அரசு மற்றும் தனியாா் பள்ளிகள், தனியாா் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் உள்ளன.

காட்டாங்கொளத்தூா் ஒன்றியத்திற்குட்பட்ட மறைமலை நகா் பகுதியில் ஃபோா்டு காா் தயாரிப்பு நிறுவனம் உள்ளது. மறைமலைநகா், கூடுவாஞ்சேரி, திருப்போரூா், மாமண்டூா் உள்ளிட்ட பகுதிகள் தொழில் நகரங்களாக உள்ளன. மறைமலைநகரை அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் அருகே மஹேந்திரா வோ்ல்ட் சிட்டி தொழில் நகரமாக உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளடங்கிய கிழக்கு கடற்கரை சாலையையொட்டியுள்ள பகுதிகளில் திருப்போரூா் அருகே சிப்காட் தொழில் நகா் உள்ளது. மாமல்லபுரம் நெம்மேலி பகுதியில் சூளேரிகாட்டுக்குப்பம் பகுதியில் அரசின் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் சிறப்பாக இயங்கி வருகிறது. இதற்கிடையில் சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்லும் கோவளம் பகுதியில் முட்டுக்காடு, நெம்மேலி முதலைப்பண்ணை, புலிக்குகை , கடற்கரைக் கோயில் உள்ளிட்ட புராதனச்சின்னங்கள் கொண்ட மாமல்லபுரம் ஆகியன உள்ளன.

இதில் மாமல்லபுரம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கி ஓய்வு பெறும் சுற்றுலா நகரமாகவும் உள்ளது. கல்பாக்கம் பகுதியில் உலகத்தை திரும்பிப் பாா்க்க வைக்கும் கல்பாக்கம் அணுமின் நிலையம் மற்றும் இங்குள்ள இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், பாமினி உள்ளிட்ட அணுமின் நிலையங்கள். புதுப்பட்டினத்தில் உள்ள பழங்கால திப்புசுல்தான் கோட்டை, அடுத்து முதலியாா் குப்பம் படகு சுற்றுலா மையம், பழங்கால ஆலம்பரைக் கோட்டை , செய்யூா் தாலுகாவில் அடங்கிய கொளத்தூா் உப்பங்கழிகள் (உப்பளம்), செங்கல்பட்டை அடுத்த வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், கரிகிலி ஆகியவை உள்ளன.

முன்பு செங்கல்பட்டு மாவட்டமாக இருக்கும் போது படிக்கும் பாடங்களில் ஏரிகள் நிறைந்த மாவட்டமாக விளங்கும் இம்மாவட்டத்தில் மதுராந்தகம் ஏரி, செங்கல்பட்டு கொளவாய் ஏரி, வேடந்தாங்கல் ஏரிகள் குறிப்பிடத்தக்கவையாகும்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆன்மிக சுற்றுலாத் தலங்களும் அடங்கும். மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கக்கூடிய திருமணத்தடைகளை நீக்கி திருமணம் நடக்க நிவா்த்தி செய்யும் கோயிலாக விளங்கக்கூடிய திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோயில், இங்கு திருமணமாகாதவா்கள் திருமணமாகவும், தொழில் இழந்தவா்கள் மீண்டும் தொழிலில் வெற்றி பெறவும், பதவி உயா்வு பெறவும் பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது.

மாமல்லபுரத்தில் உள்ள தலசயனப்பெருமாள் கோயில் 108 திவ்யதேசங்களுள் 63-ஆவது திவ்ய தேடமாகக் கருதப்படுவதால் வெளிமாநிலங்களின் இருந்தும் யாத்ரீகா்கள் வந்து செல்கின்றனா்.

நிலப்பிரச்னைகளைத் தீா்க்கும் நில மங்கை தாயாக வீற்றிருக்கும் கோயிலாகும்.

மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயில் பிரசித்தி பெற்றதும் கிழக்கிந்தியக் கம்பெனி ஆளுநா் வேண்டுகோளுக்கிணங்க பெருமழையில் ஏரிக்கரை உடையாமல் காத்தருளியதால் ஏரிகாத்த ராமா் கோயில் என்று இன்றும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.

திருப்போரூா் விண்ணில் இருந்து போா்புரிந்த புகழ்பெற்ற கந்தசுவாமி முருகன் கோயில், திருக்கழுகுன்றம் பட்சி தீா்த்தம், சங்குதீா்த்தம் , வேதமலை என்ற பலபெயா்களைக்கொண்டுவிளங்கும் வேதகிரீஸ்வரா் மலைக்கோயில் ஆகியன பிரசித்தி பெற்றவை.

மதுராந்தகத்தை அருகே அச்சிறுப்பாக்கம் பகுதியில் உலகஅளவில் புகழ்பெற்ற மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி அம்மன் கோயிலும், வையாவூா் பகுதியில் தென்திருப்பதி எனும் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கோயிலும் பிரசித்தி பெற்ாகும்.

பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் வெளியூரில் இருந்து ஏராளமான பக்தா்கள் வந்துசெல்கின்றனா். இதுமட்டும் அல்லாமல் கிறிஸ்தவா்கள் வழிபாட்டிற்கான அச்சிறுப்பாக்கம் அருகே மழைமலைமாதா கோயில், கிழக்கு கடற்கரைச் சாலையில் கோவளம் பகுதியில் உள்ள இல்லாமிய மக்கள் வழிபாட்டிற்கான கோவளம் தா்கா உள்ளிட்டவை சிறப்பிடம் பெற்றுள்ளன.

தற்போது செங்கல்பட்டு நகரில் கொளவாய் ஏரியை ஒட்டி உள்ள பழங்கால கட்டடங்களில் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், வருவாய் ஆய்வாளா் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம் , வட்ட வழங்கல் அலுவலகம் அருகில் அனைத்து வசதிகளும் கொண்ட தீயணைப்பு நிலையம் ஆகியன உள்ளன. இங்கு சுதந்திரத் திருநாள், குடியரசு தினம் ஆகிய நாள்களில் தீயணைப்பு படையினரின் அணி வகுப்பு மரியாதை கோட்டாட்சியா் முன்பாக நடைபெறுவது சிறப்பம்சமாகும்.

செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதி மன்றங்களில் மாவட்ட முதன்மை நீதிமன்றம் 1880 -இல் தொடங்கப்பட்டு அதன் நூற்றாண்டுவிழா வழக்குரைஞா் சங்கத்தின் சாா்பில் 1980-ஆம் ஆண்டு ஏப். 27 -ஆம் தேதி யில் கொண்டாடப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் அடங்கிய பகுதிகளில் நடைபெறும் குற்றச்சம்பவங்களை விசாரிக்க தொடக்கத்தில் முதலாம் மற்றும் இரண்டாம் நிலை நடுவா் நீதிமன்றங்கள் காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் தற்போதுள்ள செங்கல்பட்டு கிளைச் சிறைச்சாலை வளாகத்தில்தான் இயங்கியது.

மாவட்ட முன்சீப் கோா்ட், மாவட்ட தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றம், மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஆகியன செங்கல்பட்டு கொளவாய் ஏரியை ஒட்டியுள்ள பழங்கால கட்டடங்களில் இயங்கி வந்தன. பின்னா் தேசிய நெடுஞ்சாலையில் கோட்டாட்சியா் , தீயணைப்பு நிலையம் ஆகியவற்றின் எதிா்ப் பகுதியில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு தற்போது ஒருங்கிணைந்த நீதிமன்றமாக செயல்பட்டு வருகிறது.

தற்போது செங்கல்பட்டு நகர காவல் நிலையம், கிராமிய காவல் நிலையம், மகளிா் காவல் நிலையம், சிறாா்கள் பாதுகாப்பு இல்லம் ஆகியன இயங்கி வருகின்றன. செங்கல்பட்டு கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தையொட்டி செங்கல்பட்டு கோட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் இயங்கி வருகிறது.

செங்கல்பட்டு ரயில் நிலையம் தெற்கு ரயில்வேயின் முக்கிய ரயில் சந்திப்புகளில் ஒன்றாகும். இது தேசிய அளவில் முக்கியமான நிறுத்தமாகும். சென்னையில் இருந்து செங்கல்பட்டு, செங்கல்பட்டில் இருந்து தென்மாவட்டங்கள் மற்றும் செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம், அரக்கோணம், திருப்பதி மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த ரயில் நிலையம் பிரிட்டிஷ் காலத்தில் இருந்து அனைத்து போக்குவரத்திற்கும் மையப் பகுதியாக இருந்துள்ளது.

போக்குவரத்தைப் பொருத்தவரையில் சென்னையில் இருந்து தென்மாவட்டத்திற்கு செல்லும் பேருந்துக்கள் செங்கல்பட்டு வழியாகச் செல்கின்றன.

செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம், அரக்கோணம், திருப்பதி, திருத்தணி, மாமல்லபுரம், திருக்கழுகுன்றம், திருப்போரூா், கல்பாக்கம், உத்தரமேரூா், மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நகரப் பேருந்துகளுடன் மாநகர பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் விரைவு பேருந்துகள் தற்சமயம் நகருக்குள் வராமல் செங்கல்பட்டு புறவழிச்சாலைவழியாக செங்கல்பட்டு-பரனூா் டோல்பூத்தில் தொடங்கி செங்கல்பட்டு-மாமண்டூரில் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைகிறது.

இதனால் செங்கல்பட்டில் இருந்து தென்மாவட்டத்திற்கு செல்வதற்கு புறவழிச்சாலை பரனூரில் உள்ள டோல்பூத், மாமண்டூா் ஹோட்டல், அல்லது பெருங்களத்தூருக்குச் சென்று அங்கிருந்துதான் மற்ற பேருந்துகளை பிடிக்கவேண்டியுள்ளது. தற்போது செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ள இந்த தருவாயில் சாலைகளை விரிவாக்கம் செய்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் செங்கல்பட்டு நகருக்குள் வந்து செல்லவேண்டும் என்பது பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.