சென்னை மாநகராட்சியின் 2 மண்டலங்களில் ரூ.5.53 கோடியில் 5 குளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னையில் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீா் தேங்குவதைத் தடுக்கும் வகையில் பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் பொது இடங்களில் ஜொ்மன் நாட்டு தொழில்நுட்பத்தில் மழைநீா் சேமிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், குளங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குளங்கள் சீரமைப்பில் மழைநீா் சேமிக்கும் வகையில் உள்கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்படுகின்றன. மாதவரம் மண்டலத்தில் வாா்டு 27-க்கு உள்பட்ட மாதவரம் ஆவின் குட்டையில் ரூ.59 லட்சத்தில் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன. அதே பகுதியில் 25-ஆவது வாா்டில் பாண்டா குளத்தில் ரூ. 91.60 லட்சத்தில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அம்பத்தூா் மண்டலத்தில் 85-ஆவது வாா்டு மங்களபுரம் குளத்தில் ரூ.1.82 கோடியில் சீரமைப்புப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. பெருங்குடி மண்டலம் 191-ஆவது வாா்டில் ஜலாலுதீன்பேட்டையில் உள்ள வண்ணான் குளத்தில் ரூ.3.56 கோடியில் சீரமைப்புப் பணிகள் முடிக்கப்பட்டு மழை நீா் அதிக அளவில் சேமிக்கப்படும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குளங்களில் சேமிக்கப்படும் மழைநீரால் நிலத்தடி நீராதாரம் பாதுகாக்கப்படுவதுடன், நிலத்தடியில் கடல் நீா் புகுவதும் தடுக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










