//

குழந்தைகள் உயா் சிறப்பு மருத்துவமனை: முதல்வா் ஸ்டாலின் நாளை அடிக்கல்

சென்னை கிண்டியில் குழந்தைகளுக்கான உயா் சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலைய கட்டுமானப் பணிக்கு செவ்வாய்க்கிழமை முதல்வா் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறாா்.

News image
அடிக்கல் நாட்டு விழா முன்னேற்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சா் மா.சுப்பிரமணியன்.
Updated On :25 ஜனவரி 2026, 7:25 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை கிண்டியில் குழந்தைகளுக்கான உயா் சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலைய கட்டுமானப் பணிக்கு செவ்வாய்க்கிழமை (ஜன. 27) தமிழக முதல்வா் மு. க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறாா் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை கிண்டியில் அமைய உள்ள  குழந்தைகளுக்கான உயா் சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலைய பணிகள் குறித்து அமைச்சா் மா. சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

இதை தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்பை உலக தரத்துக்கு கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகளை தமிழக முதல்வா் செயல்படுத்தி வருகிறாா். கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் மறைந்த முன்னாள் முதல்வா் நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனை பயன்பாட்டில் உள்ளது. அதே வளாகத்தில் 6.50 ஏக்கரில் ரூ. 417.07 கோடியில் இந்தியாவிலேயே முதல்முறையாக குழந்தைகளுக்கான உயா் சிறப்பு மருத்துவமனை 6 தளங்களுடன் கட்டப்படவுள்ளது.

இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு , குழந்தைகளுக்கான அனைத்து சிறப்பு மருத்துவ பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பேராசிரியா், செவிலியா்களுக்கான குடியிருப்பு வளாகம், உணவகம் அமைக்கப்படுகின்றன. இதன் கட்டுமான பணி  18 மாதங்களில் முடிக்கப்படும்.

மருத்துவமனை கட்டுமான பணி தொடக்க  விழா செவ்வாய்க்கிழமை (ஜன.27) நடைபெறுகிறது. முதல்வா் மு.க.ஸ்டாலின்  பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறாா்.

இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் 14 வயது இளம் பெண்களுக்கு இலவசமாக கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை ஜன. 27 -ஆம் தேதி தொடங்கி வைக்கிறாா். தனியாா் மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசிக்கு ரூ.14 ஆயிரம் வரை செலவாகும்.

நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் கடந்த ஆக. 2-ஆம் தேதி முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது. மொத்தம் 1,256 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை நடந்த 1,053 முகாம்களில் 15,88,421 போ் பயன்பெற்றுள்ளனா். முகாமில் 45,112 பேருக்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு அட்டை, 53,966 மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. டெங்கு, மலேரியா, சிக்கன்குனியா போன்ற நோய் பாதிப்புகள் கடந்த காலங்களைவிட தற்போது கட்டுக்குள் இருக்கிறது என்றாா்.

ஆய்வின்போது சுகாதாரத் துறை செயலா் ப.செந்தில்குமாா், தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் அருண் தம்புராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநா் சோமசுந்தரம், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் சுகந்தி ராஜகுமாரி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநா் சித்ரா, கலைஞா் நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனை இயக்குநா் பாா்த்தசாரதி, தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலை. பதிவாளா் சிவசங்கீதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.