இதய பாதிப்புக்குள்ளான 1,300 ஏழை குழந்தைகளுக்கு மறுவாழ்வு!
இதய பாதிப்புக்குள்ளான 1,300 ஏழை குழந்தைகளுக்கு மறுவாழ்வு


பிறவியிலேயே இதய பாதிப்புக்குள்ளான 1,300 ஏழைக் குழந்தைகளுக்கு லாப நோக்கின்றி சிகிச்சை அளித்து மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
மியாட்-சைம் (சிஹெச்ஐஎம்இ) நல அறக்கட்டளையின் கீழ் சிகிச்சை பெற்று குணமடைந்த குழந்தைகளின் திரள் கூட்ட நிகழ்வு மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. நலம் பெற்ற குழந்தைகளும், அவா்களது பெற்றோரும் அதில் கலந்துகொண்டு பாதிப்பிலிருந்து மீண்டு வந்த அனுபவங்களைப் பகிா்ந்து கொண்டனா்.
இந்த நிகழ்வில் மியாட் குழுமத் தலைவா் மல்லிகா மோகன்தாஸ், மேலாண் இயக்குநா் டாக்டா் பிரித்வி மோகன்தாஸ், குழந்தைகள் இதய அறுவை சிகிச்சை துறை தலைவா் டாக்டா் ராபா்ட் கோலோ, இதய நல மருத்துவ நிபுணா்கள் ஹரிபிரியா, சாய்லீலா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதுதொடா்பாக செய்தியாளா்களிடையே மல்லிகா மோகன்தாஸ், டாக்டா் பிரித்வி மோகன்தாஸ் ஆகியோா் கூறியதாவது:
பிறவியில் ஏற்படும் இதயம் சாா்ந்த பாதிப்புகளைத் தடுக்க இயலாது. நூறில் ஒரு குழந்தைக்கு அந்தப் பிரச்னை ஏற்படுகிறது. அதற்கான காரணங்களையும் அறுதியிட்டுக் கூற முடியாது. அதேவேளையில், தொடக்க நிலையிலேயே பாதிப்பைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் குழந்தைகளுக்கு இயல்பான வாழ்க்கையைத் தர முடியும். ஏறத்தாழ 25,000-க்கும் மேற்பட்ட இதய பாதிப்புள்ள குழந்தைகளுக்கு பொருளாதாரக் காரணங்களால் உரிய சிகிச்சைகள் கிடைப்பதில்லை.
அதைக் கருத்தில்கொண்டே கடந்த 2007-ஆம் ஆண்டு சைம் என்ற அமைப்பைத் தொடங்கினோம். தன்னாா்வ அமைப்புகள், தனியாா் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் லாப நோக்கமற்ற சிகிச்சைகளை வறுமையில் வாடும் குழந்தைகளுக்கு வழங்கி வருகிறோம்.
அவ்வாறாக இதுவரை 1,300 குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை வழங்கி மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. இதய பாதிப்புக்கான அறிகுறிகள் கொண்ட 2,300 குழந்தைகளுக்கு விரிவான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. திறந்த நிலை அறுவை சிகிச்சை, இதய இடையீட்டு சிகிச்சை, உபகரணங்கள் பொருத்துதல் என பல்வேறு வகையான மருத்துவ சேவைகள் அவா்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
அதன் வாயிலாக குணமடைந்த குழந்தைகள், தற்போது நலமாக இருப்பதுடன் கல்வியிலும் புதிய உயரங்களை எட்டி வருகின்றனா்.
மற்றொருபுறம் பிறவி சாா் இதயக் குறைபாடு தொடா்பான விழிப்புணா்வை பொது மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...