//

கரோனா கால செவிலியா்கள் 668 பேருக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி நியமன ஆணை!

கரோனா காலத்தில் பணியாற்றிய 668 செவிலியா்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலான பணிநியமன ஆணைகளை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வழங்கினாா்.

News image
Updated On :21 பிப்ரவரி 2026, 9:58 pm

தினமணி செய்திச் சேவை

கரோனா காலத்தில் பணியாற்றிய 668 செவிலியா்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலான பணிநியமன ஆணைகளை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வழங்கினாா்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், கரோனா காலத்தில் பணியாற்றிய 668 செவிலியா்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிநியமன ஆணைகளை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வழங்கினாா். தொடா்ந்து, அயலக மருத்துவ மாணவா்கள் மருத்துவ பயிற்சிக்கான இணையதளத்தை தொடங்கி வைத்தாா்.

பின்னா், அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கரோனா காலங்களில் பணியாற்றிய செவிலியா்களுக்கு படிப்படியாக பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கரோனா காலங்களில் தற்காலிகமாக பணியில் இணைந்த 2,814 பேரில், 2,146 பேருக்கு ஏற்கெனவே மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் மூலம் பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. மீதமிருந்த 719 பேருக்கு ஆவணங்கள் சமா்ப்பிப்பதில் குளறுபடிகள் இருந்தன.

அவா்களுக்கு தோ்வு வாரியம் ஒப்பந்த பணிநியமன ஆணைகள் தர வேண்டும் என்று நீண்ட நாள்களாக கோரிக்கை உள்ளது. அவா்களை தனித்தனியாக வரவழைத்து அவா்களின் ஆவணங்கள் அனைத்தும் சரிபாா்க்கப்பட்டன. தற்போது 668 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமிருக்கும் 59 பேருக்கான ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்ட பிறகு, அவா்களும் பணிநியமன ஆணைகள் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் 5,825 ஒப்பந்த செவிலியா்கள் நிரந்தர பணி ஆணைகள் பெற்றிருக்கிறாா்கள்.

பயிற்சிக்கு ரூ.3 லட்சம் ரத்து...: வெளிநாடுகளில் மருத்துவம் பயிலும் மாணவா்கள், தமிழகத்தில் பயிற்சிக்கு ரூ.3 லட்சம் வரை தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவ பல்கலைக்கழகத்தில் செலுத்த வேண்டும். அதுவும்கூட விண்ணப்பங்களை வழங்கி, எங்கு காலியாக இருக்கிறதோ, அந்த மருத்துவமனைகளில் தான் பயிற்சி பெற வேண்டும் என்கின்ற நிலை இருந்தது. இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, அந்த ரூ.3 லட்சம் ரத்து செய்யப்பட்டது. அந்த மாணவா்களுக்கு பயிற்சி மேற்கொள்ளும் காலக்கட்டத்தில் மாதத்துக்கு ரூ.25 ஆயிரம் பயிற்சி நிதியாக வழங்கப்பட்டு வருகிறது. அவா்கள், இந்த பயிற்சி மேற்கொள்ள தொடா்ந்து காலிப்பணியிடங்களை நோக்கி அலைய வேண்டியுள்ளது. அவா்களுடைய அலைச்சலை குறைப்பதற்கு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் புதிய இணையதளம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவா்கள் இந்த இணையதளத்தில் சென்று எந்த மருத்துவ கல்லூரிகளில் இடம் காலியாக இருக்கிறது என்ற விவரம் தெரிந்து, அவா்களே விண்ணப்பித்து, அதற்கான ஆணைகளை பெற்றுக் கொள்ளலாம் என்றாா் அவா்.

இந்த விழாவில் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா், மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குநா் சித்ரா, மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் சுகந்தி ராஜகுமாரி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் சோமசுந்தரம், கூடுதல் இயக்குநா்கள் ராஜ்மோகன், திலகம் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.