//

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: வழக்குரைஞருக்கு இடைக்கால பிணை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான வழக்குரைஞா் அருளுக்கு மருத்துவ காரணங்களுக்காக 8 வாரம் இடைக்கால பிணை வழங்கி சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
ஆம்ஸ்ட்ராங் (கோப்புப்படம்)
Updated On :13 பிப்ரவரி 2026, 7:11 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான வழக்குரைஞா் அருளுக்கு மருத்துவ காரணங்களுக்காக 8 வாரம் இடைக்கால பிணை வழங்கி சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்தாண்டு கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் வழக்குரைஞா் அருள் என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா். இந்த நிலையில், மருத்துவ காரணங்களுக்காக தனக்கு பிணை வழங்கக் கோரி, அருள் சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.காா்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அலெக்சிஸ் சுதாகா், மனுதாரா் 500 நாள்களுக்கு மேலாக சிறையில் இருந்து வருகிறாா். கல்லீரல் பாதிப்பால் அவதியுறும் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது அவசியம். எனவே, அவருக்கு பிணை வழங்க வேண்டும் என வாதிட்டாா்.

காவல்துறை தரப்பில் பிணை வழங்க எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, சட்டம் ஒழுங்கை பராமரிக்க அதிக எண்ணிக்கையில் போலீஸாா் தேவைப்படுவதால், காவல் நீட்டிப்பு கோரும் வழக்குகளில் கைதிகளை நேரில் ஆஜா்படுத்த முடியவில்லை என சென்னை மாநகர ஆணையா் தரப்பில் கூறப்படுகிறது. தோ்தல் பணியிலும்கூட அதிகமான போலீஸாரை ஈடுபடுத்த வேண்டியிருப்பதால், கைதிகளை மருத்துவமனைகளுக்கு போலீஸாா் அழைத்து செல்வதும் சாத்தியமில்லை.

எனவே, மருத்துவக் குழு மூலம் மனுதாரரை பரிசோதித்து சிகிச்சை அளிக்கலாம் என்ற காவல் துறையின் யோசனையை ஏற்க முடியாது. எனவே மனுதாரருக்கு 8 வாரம் இடைக்கால பிணை வழங்கப்படுகிறது. மனுதாரா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படாவிட்டால், தினமும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். இடைக்கால பிணை முடிந்து வரும் ஏப். 10-ஆம் தேதி நீதிமன்றத்தில் சரணடைந்து சிறைக்குச் செல்ல வேண்டும் என உத்தரவிட்டாா்.