சென்னையிலுள்ள சுமார் 15 கோயில் திருக்குளங்களில் மழை நீரை சேமிப்பதற்கான சிறப்புத் திட்டத்தை ரூ. 2.28 கோடி செலவில் நிறைவேற்ற சென்னை மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இத்திட்டத்தின்படி திருவொற்றியூர் தியாகராஜர் திருக்கோயில் மற்றும் காலடிப்பேட்டை வரதராஜப் பெருமாள் கோயில் திருக்குளங்களில் மழைநீரை சேகரிக்க சுமார் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
சென்னை என்பது தொடக்கத்தில் திருவான்மியூர், திருமயிலை, திருவல்லிக்கேணி, சென்னப்பட்டனம், ராயபுரம், வண்ணையம்பதி உள்ளிட்டவற்றை மட்டுமே அடங்கியதாக இருந்தது. பின்னர் தொடர்ச்சியாக ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக சென்னை மாநகரத்தில் தற்போது சுமார் ஒரு கோடி பேர் வசிக்கின்றனர். 176 ச.கி.மீட்டராக இருந்த சென்னை மாநகரம் புறநகர் பகுதிகள் இணைப்புக்குப் பிறகு 426 ச.கி.மீ. பரப்பளவாக உயர்ந்துள்ளது. மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப குடிநீர் உள்ளிட்ட தேவைகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பருவ மழை குறைவாகப் பெய்யும் காலங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. மேலும் புயல் காரணமாக அதிக மழை பெய்யும் காலங்களில் மழை நீர் பெருக்கெடுத்து கடலில் கலந்துவிடும் நிலையும் தொடர்கிறது. இந்த ஆண்டு சராசரி மழைகூட பெய்யாததால் சீரான குடிநீர் விநியோகம் என்பது பெரும் சவாலாக உள்ளது. மேலும் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாகக் குறைந்து அபாய கட்டத்தை எட்டியுள்ளது. எனவே நிலத்தடி நீரை அதிகரிக்கும் சிறப்புத் திட்டங்களில் தமிழக அரசு கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.
கோயில் குளங்களில் மழை நீரை சேகரிக்கும் திட்டம்: இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள், நீர்நிலைகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் மழைநீரை சேகரிக்கும் பணியில் பொதுப்பணித்துறை ஈடுபட்டு வருகிறது. சென்னை மாநகரத்தில் உள்ள திருக்கோயில் குளங்களின் எண்ணிக்கை 52 ஆகும். இவையனைத்தும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. ஆனால் இக்குளங்களுக்கு வரும் மழைநீர் வடிகால் அனைத்தும் மாநகராட்சி நிர்வாகம் வசம் உள்ளன. இதனால் இரு துறைகளும் இணைந்து சிறப்புத் திட்டத்தை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
இதன்படி முதற்கட்டமாக முழுமையாக நீர்வரத்து இல்லாத 15 குளங்களைத் தேர்வு செய்து மழை நீரை சேகரிக்கும் திட்டத்தை ரூ. 2.28 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதன்படி திருவொற்றியூர் மண்டலத்தில் தியாகராஜசுவாமி திருக்கோயில் குளம், காலடிப்பேட்டை வரதராஜப் பெருமாள் உட்பிரகாரக்குளம் உள்ளிட்டவற்றில் மழைநீரை சேகரிக்கும் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுதவிர புரசைவாக்கம் காங்காதீஸ்வரர் கோயில், மயிலாப்பூர் விருப்பாச்சீஸ்வரர் கோயில், செளகார்பேட்டை கந்தசாமி கோயில், தங்கசாலை ஏகாம்பரேஸ்வரர் கோயில், மண்ணடி மல்லிகேஸ்வரர் கோயில் உள்ளிட்ட 12 கோயில்களில் உள்ள குளங்களில் மழைநீரை சேகரிக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நிலத்தடி நீர்மட்டம் உயரும்: இது குறித்து சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் எல்.நந்தகுமார் கூறியது,
அறநிலையத்துறையின் கீழ் உள்ள 52 திருக்கோயில் குளங்களில் 15 குளங்களில் மட்டும் இச்சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். மீதம் உள்ள 37 குளங்களை அறநிலையத் துறையே மழைநீரைச் சேகரிக்கும் திட்டத்தை ஏற்கெனவே செயல்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின் படி கட்டடங்களின் கூரைகளிலிருந்து வெளியேறும் மழைநீரை ஆங்காங்கு தொட்டிகளை அமைத்து முடிந்த அளவு முழுமையாகச் சேகரித்து குழாய்கள் மூலம் நேரடியாக குளத்திற்கு கொண்டு செல்லும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி குறைந்த அளவு மழை பெய்தாலும் கூட மழைநீர் குளத்திற்கு வந்தடையும் நிலை ஏற்படும். செயல்பாட்டைப் பொருத்து இத்திட்டம் மீதம் உள்ள குளங்களில் செயல்படுத்தப்படும் என்றார் நந்தகுமார்.