காவல் துறை அதிகாரிகள் மெத்தனம்: சுதந்திரமாக திரியும் குற்றவாளிகள்
சென்னையில் கடந்த ஒரு மாதமாக குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் யாரும் கைது செய்யப்படவில்லை. இதனால், சமூக விரோதிகள் சுதந்திரமாக குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக புகார்


சென்னையில் கடந்த ஒரு மாதமாக குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் யாரும் கைது செய்யப்படவில்லை. இதனால், சமூக விரோதிகள் சுதந்திரமாக குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.
சட்டம் -ஒழுங்கை பாதிக்கும் வகையில் தொடர்ந்து செயல்படுபவர்களையும், குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகிறவர்களையும் காவல் துறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கொலை, கொள்ளை, கூட்டுக் கொள்ளை உள்ளிட்ட பெரிய குற்றச் சம்பவங்களில் ஈடுபடுகிறவர்களை மட்டும் போலீஸார் இந்தச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆனால், அதன் பின்னர் குற்றங்களைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிய காவல் துறை, திருட்டு, வழிப்பறி, தங்கச் சங்கிலி பறிப்பு, திருட்டு சி.டி. விற்பனை, கந்துவட்டி, மோசடி போன்ற குற்றங்களிலும் தொடர்ச்சியாக ஈடுபடுகிறவர்களையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது.
இதன் விளைவாக, இந்தச் சட்டத்தின்கீழ் கடந்த 2012ஆம் ஆண்டு வரை சென்னை பெருநகர காவல் துறை ஆண்டுக்கு சுமார் 900 பேரை கைது செய்திருந்த நிலையில், 2013ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்த எண்ணிக்கை 1,200-ஐ தாண்டியது. அதேபோல், ஒவ்வொரு காவல் நிலைய ஆய்வாளருக்கும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, சமூக விரோதிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நடவடிக்கையின் காரணமாக, குற்றச் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். குற்றத்தடுப்பு நடவடிக்கையாக காவல் துறை, குண்டர் தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தியதன் காரணமாக, கடந்த மூன்று ஆண்டுகளாகவே குற்றங்களில் எண்ணிக்கை குறைந்திருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைவிடப்படும் குண்டர் சட்டம்: இச்சூழ்நிலையில், கடந்த ஒரு மாதமாக சென்னை பெருநகர காவல் துறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் யாரையும் கைது செய்யவில்லை. மேலும், குற்றவாளிகளை இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான ஆவணங்களை காவல் ஆய்வாளர்கள், அதிகாரிகள் தயார் செய்து கொடுத்தும், உயர் அதிகாரிகள் அதில் கையெழுத்திடாமல் வைத்துள்ளதாக புகார் கூறப்படுகிறது.
இவ்வாறு சுமார் 150 குற்றவாளிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்குரிய ஆவணங்கள் அதிகாரிகளின் அனுமதிக்காக, அவர்களது மேஜையில் காத்திருப்பதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக திருட்டு, வழிப்பறி, கொள்ளை, தங்கச் சங்கிலி பறிப்பு போன்ற குற்றச் சம்பவங்களில் தொடர்ச்சியாக ஈடுபடுகிறவர்களை, கைது செய்ய முடியாமல் போலீஸார் தவித்து வருகின்றனர்.
அதிகரிக்கும் குற்றங்கள்: இதன் காரணமாக, சென்னையில் கடந்த இரு வாரங்களாக தங்கச் சங்கிலி பறிப்பு, வீட்டு கதவை உடைத்து திருடுவது போன்றவை அதிகரித்து வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மேலும் குற்றவாளிகளும் சுதந்திரமாக சுற்றித் திரிவதாக போலீஸார் வேதனை தெரிவிக்கின்றனர்.
கோடை விடுமுறை காலம் தொடங்க உள்ள நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, குண்டர் தடுப்புச் சட்டத்துக்கு மீண்டும் உயிர் கொடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
ஏனெனில், வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் பிற மாதங்களை விட, விடுமுறை மாதங்களில் திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் சென்னையில் அதிகமாக நடைபெறும் என்பதால், அதற்குள் காவல் துறை உஷாராகி விரைந்து செயல்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...