சென்னை, ஜூன் 23: 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு முடித்து செல்லும் மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழில் தவறுகள் ஏற்படாதிருக்க பள்ளிக் கல்வித் துறை புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.
இதற்காக துவக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு முடித்துவிட்டு, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு சேரும் மாணவர்களின் விவரங்களை கவனத்துடன் பதிவு செய்யும்படி அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பெருமாள்சாமி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
தமிழகத்தில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்து செல்லும் மாணவர்களின் மாற்றுச் சான்றிதழில் பெயர், பிறந்த தேதி, சாதி ஆகிய விவரங்கள் தவறாகப் பதியப்பட்டுள்ளதாகப் பல்வேறு புகார்கள் வந்தன.
இந்தப் புகார்களை பரிசீலிக்கும்போது, துவக்கப் பள்ளிகளில் வழங்கப்படும் பதிவுத்தாள்களில் உள்ள விவரங்களுக்கு மாறாக, 6-ம் வகுப்பில் மாணவர் சேர்க்கைப் பதிவேடுகளில் தவறு இருப்பது தெரியவந்தது.
இதில் பெயர், பிறந்த தேதி, தந்தையின் பெயர் மற்றும் இனிஷியல், சாதி- இனம் ஆகிய விவரங்கள் தவறாக இருப்பது தெரியவந்தது. இந்த விவரங்கள் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்குப் பிறகு தவறாக மதிப்பெண் பட்டியலில் பதிவாகி இருப்பதும், 10-ம் வகுப்புக்குப் பிறகு 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலிலும் தவறாகப் பதிவாகி இருப்பதும் தெரிந்தது.
இந்த தவறுகளைக் களைய சில மாணவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடுத்தனர்.
சான்றிதழில் திருத்தம் செய்ய முடியாது: இடைநிலைக் கல்வி விதி எண் 5-ன்படி இடைநிலைக் கல்வியைப் பயின்று பள்ளியை விட்டு வெளியேறிய பிறகு பள்ளி மற்றும் மதிப்பெண் சான்றிதழில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ள இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசால் நிவர்த்தி செய்ய முடியாத நிலை: மேலும், 6-ம் வகுப்பில் தவறாக விவரங்களைப் பதிவு செய்வதால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளானது தெரியவந்தது. இத்துடன் மாணவர்களின் கோரிக்கை நியாயமானதாக இருந்தும், அரசால் நிவர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.
எனவே 6-ம் வகுப்பு மாணவர் சேர்க்கையின்போது, மாணவர்களின் விவரங்களை மிகவும் கவனத்துடன் பதிவு செய்ய அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.