நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

காரைக்காலில் இருந்து கடல் வழியாக பக்கத்து மாநிலங்களுக்கு பொருள்கள் கடத்தல்?

காரைக்கால், ஏப். 9: காரைக்காலில் இருந்து தமிழகம், கேரளத்துக்கு எரிசாராயம், பெட்ரோல், டீசல் கடல் வழியாக அதிகளவு கடத்தப்படுவதாகவும், இதைத் தடுக்க வேண்டிய மத்திய, மாநில அரசுத் துறைகள் கண்டுகொள்ளாமல் இருப

News image
Updated On :27 டிசம்பர் 2023, 3:27 pm

என்.எஸ்.செல்வமுத்துக்குமாரசாமி

காரைக்கால், ஏப். 9: காரைக்காலில் இருந்து தமிழகம், கேரளத்துக்கு எரிசாராயம், பெட்ரோல், டீசல் கடல் வழியாக அதிகளவு கடத்தப்படுவதாகவும், இதைத் தடுக்க வேண்டிய மத்திய, மாநில அரசுத் துறைகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

   புதுவை யூனியன் பிரதேசத்தின் அண்டை மாநிலங்களான தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களைக் காட்டிலும்  பெட்ரோல், டீசலுக்கு இங்கு கூடுதல் வரி விதிக்கப்படாததால், அவை விலை குறைவாக விற்கப்படுகின்றன.

   இதுபோல, மது வகைகளும் அண்டை மாநிலங்களைக் காட்டிலும் புதுவையில் குறைந்த விலைக்கு விற்கப்படுவதால், தமிழக - புதுவை எல்லையில் ஏராளமான சாராய, பிராந்திக் கடைகள் நடத்தப்படுகின்றன.

   இது ஒருபுறமிருக்க, இவை யாவும் அண்டை மாநிலங்களுக்கு சாலை வழியாகவோ, கடல் வழியாகவோ கொண்டு சென்றால் உரிய அரசுத் துறைகள் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க சட்டம் உள்ளது. பொருள்களைப் பறிமுதல் செய்தல், அபராதம் விதித்தல், கைது செய்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். மது வகைகள் கடத்தினால் புதுவை மாநிலத்தில் காவல் துறை நடவடிக்கை எடுக்க அதிகாரமில்லாததால், காவல் துறையினர் பிடித்து கலால் துறையிடம் குற்றவாளிகளை ஒப்படைக்கின்றனர்.

   தங்களுக்கு அதிகாரம் இல்லாததால், காவல் துறையினர், தவறு செய்வோரைப் பிடிப்பதில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய கலால் துறையும் கண்டுகொள்வதில்லை. இதனால், சாலை வழியாக கடத்தல் பொருள்கள், குறிப்பாக, காரைக்கால் பகுதியியிலிருந்து தாராளமாக வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாகப் புகார் கூறப்படுகிறது.

    இதையெல்லாம் மீறி தற்போது காரைக்கால் மாவட்டத்திலிருந்து தமிழகத்துக்கும், கேரளத்துக்கும் கடல் வழியாக எரிசாராயம், பெட்ரோல், டீசல், தடை செய்யப்பட்ட வலம்புரி சங்கு உள்ளிட்டவை கடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.  குறிப்பாக, காரைக்கால் எல்லையான வாஞ்சூரில் இருந்து இரவு நேரத்தில் படகு மூலம் இவை கடத்தப்படுவதாகவும், இதைத் தடுக்க வேண்டிய சுங்கத் துறை, காவல் துறை, கலால் துறை உள்ளிட்டவை கண்டும் காணாமல் இருப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

   ரோந்துப் படகு பயன்படுத்தப்படுகிறதா?:    காரைக்காலில் கடலோரக் காவல் நிலையம் மற்றும் சுங்கத் துறைக்கென்று தனித்தனியாக 5 டன் எடையுள்ள குறைந்த அளவே வசதிகள் பொருத்தப்பட்ட தலா ஒரு படகு தரப்பட்டுள்ளன.    முக்கியமாக கடத்தல் தொடர்பாகப் பணியாற்ற வேண்டிய சுங்கத் துறையின் படகு சரியான வகையில் பயன்படுத்தப்படுகிறதா, தினமும் கடலுக்குள் கொண்டு செல்லப்படுகிறதா, என்னென்ன சோதனை நடைபெற்றது, நடவடிக்கை எடுக்கப்பட்ட விவரங்கள் எதுவும் வெளியிடப்படாததால், அத் துறையின் படகு உரிய முறையில் பயன்படுத்தப்படவில்லையென்றே மக்கள் கருதுகின்றனர்.

   இரு படகுகளிலும் வசதிகள் குறைவு: காரைக்காலில் இருந்து கடல் வழியாக கடத்தல் அதிகரித்திருப்பதாகக் கூறப்படும்போது, இரவு நேரத்தில், அதிக தொலைவில் உள்ளவற்றை நவீன ரேடார் கருவி மூலம் கண்டறிந்து, விரைந்து சென்று நடவடிக்கை எடுக்க தகுதியானதாக இவ்விரு படகுகளும் இல்லையென்று அத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

   12 டன் எடையுள்ள நவீன படகு தேவை: காரைக்கால் பகுதியõல் கடத்தல், ஊடுருவல் இருப்பதாகச் சந்தேகம் கொண்டே மத்திய அரசு சுங்கத் துறைக்கும், கடலோரக் காவல் நிலையத்துக்கும் 5 டன் படகை அளித்தது. ஆனால், இதுபோன்ற சர்ச்சைக்குள்ளான பகுதிக்கு 12 டன் பெரிய படகை அளித்து, நவீன ரேடார் வசதி, கடல் ஆழத்தைக் கண்டறியும் நவீன கருவிகள் உள்ளடக்கிய படகை அளித்தால் கடத்தலை தடுக்க முடியும்.   கடல் வழியான கடத்தலில் உள்ளூர்காரர்கள் பெருமளவு ஈடுபடவில்லையெனவும், வெளியூர்க்காரர்கள் தாராளமாக காரைக்கால் வந்து செல்கின்றனர் என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.  எனவே, கடத்தல் பெரும் பிரச்னையாக உருவெடுக்கும் முன்பே இதுகுறித்து அரசுத் துறைகள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.