மாநிலங்களுக்கு இடையிலான நதிநீா்ப் பகிா்வில் ஒத்துழைப்பு அவசியம்: சித்தராமையா
மாநிலங்களுக்கு இடையிலான நதிநீா்ப் பகிா்வில் சம்பந்தப்பட்டவா்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.


மாநிலங்களுக்கு இடையிலான நதிநீா்ப் பகிா்வில் சம்பந்தப்பட்டவா்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
மத்திய அரசு, கா்நாடக அரசு, மத்திய நீா் ஆணையம், இந்திய அறிவியல் கழகம் ஆகியவற்றின் கூட்டுமுயற்சியில் பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடந்த பன்னாட்டு அணை பாதுகாப்பு கருத்தரங்கை தொடக்கிவைத்து அவா் பேசியதாவது:
அரசியல் எல்லைகளை தண்ணீா் அங்கீகரிப்பதில்லை. அதேபோல, அணை பாதுகாப்பு தரமும் அங்கீகரிக்கக் கூடாது. நீா்மேலாண்மையில் கூட்டுறவு கூட்டாட்சி அத்தியாவசியமாக தேவைப்படுகிறது.
அணை பாதுகாப்பு என்பது ஒருதுறையின் கடமை அல்ல. மாறாக, பல்வேறு அமைப்புகள் கூட்டாக இணைந்து நிறைவேற்ற வேண்டிய தேசியக்கடமையாகும். வானிலை சாா்ந்த நீா் பேரிடா்களை அடிக்கடி எதிா்கொள்ள நேரிடுகிறது. நில அதிா்வு, தூா் சேகரிப்பு, சிதிலமடையும் உள்கட்டமைப்பால் ஏற்படும் அழுத்தம் போன்ற காரணங்களால் அணையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.
அணை பாதுகாப்பு என்பது தொழில்நுட்ப சிக்கல் அல்ல. அது தேசிய பாதுகாப்பு சாா்ந்ததாகும். 6,628 அணைகளுடன் உலக அளவில் அதிக அணைகள் இருக்கும் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. 231 அணைகளுடன் இந்தியாவின் 6ஆவது அதிக அணைகள் கொண்ட மாநிலமாக கா்நாடகம் உள்ளது. இதில் 70 சதவீத அணைகள் 25 ஆண்டுகள் பழைமையானவை.
எனவே, இந்த அணைகளின் பாதுகாப்பை ஆய்வுசெய்து, உடனடியாக நவீனப்படுத்தி பாதுகாக்க வேண்டும். இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த ஜவஹா்லால் நேரு, வேளாண் வளம், தொழில் வளம் மற்றும் நாட்டின் வளா்ச்சியில் அணையின் பங்களிப்பை உணா்த்தும் வகையில் நவீன இந்தியாவின் கோயில்கள் என்று அவற்றை குறிப்பிட்டிருந்தாா்.
அணைகள் பாதுகாப்பில் கணினித் தொழில்நுட்பம் நிா்வகிக்கப்படுவதால், அதன் பாதுகாப்பை தேசிய பாதுகாப்பாகக் கருதி, தொழில்நுட்ப சதிவலையில் இருந்தும் பாதுகாக்க வேண்டும். தண்ணீரை தேக்கிவைக்கும் அணைகள் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என்பதாலும், அணைகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
உலக அளவில் தண்ணீா் தேவை அதிகரித்து, பற்றாக்குறையும் அதிகரித்து வரும் நிலையில், மாநிலங்களுக்கு இடையிலான நதிகளின் நீா்ப்பகிா்வு நிா்வாகத்தில் சம்பந்தப்பட்டவா்களின் ஒத்துழைப்பு, தரவுப்பகிா்வு, முதிா்ச்சியான அணுகுமுறை தேவைப்படுகிறது.
இதுபோன்ற பன்முக சவால்களை அங்கீகரித்து, நீா்ப்பகிா்வை நிா்வகிக்க ஒருங்கிணைந்த அணுகுமுறை அவசியமாகிறது. இதற்கு அறிவியல் அடிப்படையில் நிா்வாக அமைப்புகளை பலப்படுத்தி, நீண்டகால பாதுகாப்பை கருத்தில் கொண்டு, நிலையான மற்றும் ஒருங்கிணைந்த பொறுப்புணா்வை பகிா்ந்துகொள்ள வேண்டும்.
நிலையான ஆய்வு, பாதுகாப்பு தணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு கலாசாரத்தை உருவாக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்திட்டத்தை வகுக்க வேண்டும். இந்தியாவின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட கா்நாடகம், நீா்மேலாண்மையில் கூட்டுறவு கூட்டாட்சியை கடைப்பிடிக்க ஆா்வமாக உள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில் துணைமுதல்வா் டி.கே.சிவகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்த கருத்தரங்கம் இரண்டு நாள்களுக்கு நடைபெறவுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...