/

திசை மாறுமா தீர்ப்பு...?

பாஜகவினர் மட்டுமல்லாது,  லிங்காயத்து சமுதாய மக்களிடையே பெரும் செல்வாக்கைப் பெற்றிருந்த எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவுக்கு

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:52 pm

ந.முத்துமணி

பாஜகவினர் மட்டுமல்லாது,  லிங்காயத்து சமுதாய மக்களிடையே பெரும் செல்வாக்கைப் பெற்றிருந்த எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவுக்கு வருணா தொகுதியில் கடைசி நேரத்தில் பாஜக வாய்ப்பு அளிக்க மறுத்ததால்,  அத் தொகுதியில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 12-ஆம் தேதி நடக்கவிருக்கும் தேர்தலில் அதிகம் விமர்சிக்கப்படுபவர் முதல்வர் சித்தராமையாதான்.  பாஜக அல்லது மஜத கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் அனைவரும் சித்தராமையாவை மையப்படுத்தியே அரசியல் விமர்சனங்களை,  பிரசாரங்களைச் செய்து வருகிறார்கள்.
கடந்த ஐந்தாண்டுகளாக காங்கிரஸ் அரசை வழிநடத்திய சித்தராமையா,  கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின் மையப்புள்ளியாக மாறியிருக்கிறார்.  சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக மக்களிடையே அலை எதுவும் பெரியளவில் தென்படவில்லை.
 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது இருந்ததை போல,  காங்கிரஸ் கட்சி மீது யாரும் வெறுப்பை உமிழவில்லை. 
வியூகம்
இந்தச் சூழலில் சித்தராமையா தலைமையில் தேர்தலைச் சந்திக்கும் காங்கிரஸ் கட்சியை தேர்தல் களத்தில் வீழ்த்துவது அவ்வளவு எளிதானதல்ல என்பதைப் புரிந்து கொண்ட பாஜகவும்,  மஜதவும், புதிய வியூகம் ஒன்றை அமைத்தன.  அதன்படி, சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டன.
மேலும்,  சித்தராமையாவின் சொந்தத் தொகுதியான வருணா தொகுதியில் போட்டியிடும் அவரது மகன் யதீந்திராவையும் தோற்கடிக்க வியூகம் அமைத்தன.  சாமுண்டீஸ்வரி,  பாதாமி (சித்தராமையா போட்டியிடும் தொகுதிகள்) வருணா ஆகிய மூன்று தொகுதிகளில் தோல்வி பயத்தை மூட்டினால் சித்தராமையாவின் கவனத்தை சிதைக்கலாம், அவரது தேர்தல் வேலைகளை முடக்கலாம். அதன் மூலம் காங்கிரஸின் தேர்தல் வெற்றி வாய்ப்புகளை சிதைக்கலாம் என்று பாஜகவும், மஜதவும் வியூகம் அமைத்தன.
விஜயேந்திராவுக்கு வாய்ப்பு
கடந்த 2 தேர்தல்களில் வென்ற பாதுகாப்பான வருணா தொகுதியில் தனது மகன் யதீந்திராவை முதல்முறையாக களமிறக்கிய சித்தராமையாவை கலங்கடிக்கும் முடிவாக எடியூரப்பாவின் இளைய மகன் விஜயேந்திராவை நிறுத்த  பாஜக முடிவெடுத்தது.
இதை வருணா தொகுதியைச் சேர்ந்த பாஜகவினர் வரவேற்றனர்.  அதுவரை சோர்ந்திருந்த வருணா தொகுதி பாஜகவினர்,  விஜயேந்திராவின் வருகையை பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர். இதைத் தொடர்ந்து,  வருணா தொகுதியில் காங்கிரஸ்-மஜதவுக்கு இடையே காணப்பட்ட போட்டி,  காங்கிரஸ்-பாஜகவுக்கு என்று மாறியது.
வன்முறை
எடியூரப்பா தனது பேச்சை முடித்து கீழே இறங்கியதும்,  மேடையில் பாய்ந்த பாஜக தொண்டர்கள் இருக்கைகள் உள்ளிட்ட அனைத்தையும் அடித்து நொறுக்கி, தங்களது ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். பாஜக அலுவலகத்தையும் சூறையாடியதோடு,  அக் கட்சியின் தலைவர்களின் படங்களையும் தீயிட்டுக் கொளுத்தினர். எடியூரப்பா தங்கியிருந்த நட்சத்திர விடுதியின் முன்பு திரண்ட ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் வன்முறையை கையில் எடுத்து,  அப் பகுதியைச் சின்னாபின்னமாக்கினர். எடியூரப்பாவின் சமாதானத்தை ஏற்க யாரும் தயாராக இல்லை.  கட்சியின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ளவும் யாரும் தயாராக இல்லை. விஜயேந்திராவைத் தவிர வேறு யாரை நிறுத்தினாலும்,  தோற்கடிப்போம் என்று பாஜகவினரே கொந்தளிக்கும் அளவுக்கு நிலைமை மோசமானது.
இத்தனைக்கும் பிறகும் விஜயேந்திராவை வேட்பாளராக அறிவிக்காமல்,  தோட்டதப்பா பசவராஜை வேட்பாளராக அறிவித்தது.  இதை பாஜக தொண்டர்கள்,  குறிப்பாக எடியூரப்பாவின் ஆதரவாளர்களால் இன்னும் நம்பமுடியவில்லை.
கர்நாடகத்தின் பெரும்பான்மை சமூகமாக இருக்கும் லிங்காயத்துகளின் பிரதிநிதியாக பார்க்கப்படும் எடியூரப்பாவை இந்த விவகாரம் பலவீனப்படுத்தியதை பாஜகவினரே ஒப்புக் கொள்கிறார்கள். மேலும் 75 வயதாகும் எடியூரப்பாவின் அரசியல் வாரிசாகக் கருதப்பட்ட விஜயேந்திராவின் எளிமை,  மக்களிடம் அணுகும் முறை,  சுறுசுறுப்பு, தேர்தல் வியூகம், பிரச்னைகளைக் கையாளும் முறை ஆகியவற்றை பெரிதும் ரசித்து கொண்டாட விரும்பிய லிங்காயத்து சமுதாயத்திற்கு பாஜகவின் முடிவு பேரதிர்ச்சியாக விழுந்துள்ளது.  தேர்தலுக்கு முன்பே எடியூரப்பாவின் பேச்சுக்கு மதிப்பில்லாவிட்டால்,  தேர்தலில் வென்றால் எடியூரப்பாவை பாஜக முதல்வராக்குமா?  என்ற சந்தேகம் லிங்காயத்து சமுதாயத்தினரிடையே பரவத் தொடங்கியுள்ளது.  
எடியூரப்பாவின் அரசியல் எதிரிகளால் நடத்தி முடிக்கப்பட்டு, முடக்கப்பட்ட விஜயேந்திராவின் தேர்தல் வாய்ப்பு,  சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு சாதகமாக அமையாது என்றும், பாஜகவின் முடிவானது,  அவலை நினைத்து உரலை இடித்த கதையாகிவிட்டதாகவும் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.


வரவேற்பு
வருணா தொகுதியில் வாய்ப்பு கிடைக்கும் என  நம்பிக்கையில் விஜயேந்திரா, அத் தொகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார்.  இதனால் உற்சாகமடைந்த பாஜக தொண்டர்களுடன் இணைந்து வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்தார்.
இதைத் தொடர்ந்து,  யதீந்திரா-விஜயேந்திராவுக்கு இடையே போட்டி கடுமையானது. இதை அறிந்துகொண்ட முதல்வர் சித்தராமையா,  வருணா தொகுதியில் முகாமிட்டு பிரசாரம் செய்யத் தொடங்கிவிட்டார்.
பாஜக தொண்டர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உற்சாகத்துடன் தேர்தல் வேலையில் இறங்கினர்.  மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த எடியூரப்பாவின் ஆதரவாளர்கள் வருணாவில் முகாமிட்டு,  விஜயேந்திராவுக்கு ஆதரவு திரட்டினர்.  விஜயேந்திராவுக்கு மக்களிடையே வரவேற்பை கவனித்த பாஜகவினர்,  வெற்றி பெற்று விட்டதாகவே கொண்டாட்டத்தில் மிதந்தபடி இருந்தனர். இதனிடையே,  முதல் வேட்பாளர் பட்டியலைத் தொடர்ந்து 3 வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டது.


ஏமாற்றம்
பா.ஜ.க. வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியலில் விஜயேந்திராவின் பெயர் இல்லாதது கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.  வேட்புமனுத் தாக்கல் செய்ய ஏப்.24-ஆம் தேதி கடைசி நாள் என்பதால், அதற்கு முந்தைய நாள் வெளியிடப் போகும் வேட்பாளர் பட்டியலில் விஜயேந்திராவின் பெயர் இடம்பெறும் என்று எதிர்ப்பார்த்தனர். விஜயேந்திரா வேட்பு மனுத் தாக்கல் செய்ய நாள்,  நேரம் குறித்தாகிவிட்டது.
எடியூரப்பா உள்ளிட்ட பாஜகவின் முன்னணித் தலைவர்கள் மைசூரு மாவட்டத்தின் நஞ்சன்கூடில் திரண்டுவிட்டனர்.  வேட்புமனுத் தாக்கல் செய்ய ஊர்வலம் தொடங்கும்போது மேடையேறிய எடியூரப்பா, தனது மகன் விஜயேந்திரா வேட்புமனு தாக்கல் செய்யப் போவதில்லை. அவருக்குப் பதிலாக கட்சியின் சாதாரண தொண்டர் போட்டியிடுவார் என்று அறிவித்ததை,  அங்கு குவிந்திருந்த பாஜக தொண்டர்களால் நம்ப முடியவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.