கர்நாடகத் தமிழர்களை ஒருங்கிணைக்குமா திருவள்ளுவர் நாள் பேரணி?
பெங்களூரில் 9-ஆவது ஆண்டாக ஜன.28-ஆம் தேதி நடக்கவிருக்கும் திருவள்ளுவர் நாள் பேரணி கர்நாடகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் நிகழ்வாக அமைய வேண்டும் என்பதே கர்நாடக வாழ்


பெங்களூரில் 9-ஆவது ஆண்டாக ஜன.28-ஆம் தேதி நடக்கவிருக்கும் திருவள்ளுவர் நாள் பேரணி கர்நாடகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் நிகழ்வாக அமைய வேண்டும் என்பதே கர்நாடக வாழ் தமிழர்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.
40 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வாழும் பெங்களூரில் அல்சூர் ஏரி எதிரே அமைந்துள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான பூங்காவில் பொதுமறை தந்த புதுமைக்கோமான் திருவள்ளுவரின் சிலையை திறக்க பெங்களூரு தமிழ்ச் சங்கம் நீண்ட காலமாக திட்டமிட்டு, 1991-இல் அதற்கான திறப்பு விழாவை நடத்த ஏற்பாடு செய்திருந்தது.
திருவள்ளுவர் சிலையை திறக்க திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த கன்னடர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போதைய கர்நாடக முதல்வர் ஸ்.பங்காரப்பாவால் திறக்க தேதிகுறிப்பிட்டிருந்தும், அதற்கான காலம் கனியாமல் திருவள்ளுவரின் சிலை சணல் பையில் மூடி வைக்கப்பட்டிருந்தது.
திருவள்ளுவர் சிலையை திறக்க பெங்களூரு தமிழ்ச் சங்கம் சட்டப் போராட்டம் நடத்தினால், உலகத் தமிழர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் பெருமுயற்சியால் பண்ட மாற்று முறைப்படி 2009,ஆக.9-இல் கர்நாடகத்தில் திருவள்ளுவர் சிலையும், சென்னையில் கன்னடக்கவிஞர் சர்வர்ஞர் சிலையும் திறந்துவைக்கப்பட்டது.
தமிழர் எழுச்சி
அப்போதைய கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையில் அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதியால் திறந்துவைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலைதிறப்பு விழாவில் லட்சக்கணக்கில் திரண்ட கர்நாடகத் தமிழர்கள், ஜாதி, மத, அரசியல் உணர்வுகளைக் கடந்து எழுச்சிப் பொங்க கலந்து கொண்டனர்.
அன்றைக்கு வெளிப்பட்ட அந்த எழுச்சி, உற்சாகம், கொண்டாட்டம், குதூகலத்தை பெங்களூரு தமிழ்ச் சங்கத்தால் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் நடத்தப்படும் திருவள்ளுவர் நாள் பேரணியில் காண இயலவில்லை என்று கர்நாடகத் தமிழர்கள் மனம் குமுறி வருகிறார்கள்.
பெங்களூரு தமிழ்ச் சங்கத்தால் கடந்தாண்டு நடத்தப்பட்ட திருவள்ளுவர் நாள் விழா மற்றும் கன்னடர்-தமிழர் ஒற்றுமை பேரணியில் அரசியல், ஜாதி, மத, சுயநல வாடை வீசியதாக பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில், 9-ஆவது ஆண்டாக வருகிற ஜன.28-ஆம் தேதி திருவள்ளுவர் நாள் விழா மற்றும் கன்னடர்-தமிழர் ஒற்றுமை பேரணி நடத்தப்படவிருக்கிறது.
தனி அடையாளங்கள்
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்' (பிறப்பினால் அனைவரும் சமம். செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும்) என்று சொன்ன திருவள்ளுவரின் பெயரில் நடைபெறும் விழா மற்றும் பேரணியில் ஜாதி, மத அடையாளங்களோடு கலந்து கொள்வது தமிழார்வலர்களைக் கவலையடைய செய்துள்ளது.
கர்நாடகத்தில் பல்வேறுஜாதி, மதம், அரசியல் பின்னணி கொண்ட தமிழர்கள் வாழ்ந்துவந்தாலும், அந்த அடையாளங்களை தமிழ்ச் சங்கத்துக்கு உள்ளே கொண்டு வரக் கூடாது என்பதுதானே நியாயமான அணுகுமுறையாக இருக்க முடியும்.
தமிழர்களாக ஒன்றிணைவோம்
தமிழ்மொழியால் ஒன்றுபடும் தமிழ்ச் சங்கத்தில் ஜாதி,மதம், அரசியல் அடையாளங்கள் புதைக்கப்பட்ட தமிழர்கள் என்ற சமத்துவ சிந்தனையே மேலோங்க வேண்டும் என்பதே தமிழார்வலர்களின் விருப்பமாகும்.
கர்நாடகத் தமிழர்களின் அரசியல் விடியலுக்காக திருவள்ளுவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக்கூடாது. தமிழர்கள் எந்த ஜாதி, மதம், அரசியல் சார்புநிலையைக் கொண்டிருந்தாலும், தமிழ்ச்சங்கம் நடத்தும் நிகழ்ச்சிகளில் 'தமிழர்' என்ற அடையாளத்தோடுதான் பங்கேற்க வேண்டும்.
திருவள்ளுவர்நாள் பேரணியை தமிழர்களின் பலத்தை காட்டுவதற்காக நடத்துவதாக வாதிட்டுக்கொண்டு, அரசியல் கட்சிகளைபோல ஆட்களைச் சேர்க்கும் மலிவானமுறையை தமிழ்ச் சங்கம் கைவிட வேண்டும் என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பாகும்.
திருவள்ளுவர் நாள் பேரணியில் ஜாதி,மதம்,அரசியல் அடையாளங்கள் இல்லாமல் பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்களாகப் பங்கேற்பது எதிர்காலத்தில் தமிழர்களின் நலனை கட்டிக்காக்க உதவும். திருவள்ளுவரின் பெருமையைக் கட்டிக்காப்பதை விட, திருக்குறளின் சிந்தனைகளை தமிழர்களுக்கும், பிறமொழியினருக்கும் வாரி வழங்குவதே பேரணியின் அடிப்படை நோக்கமாக இருக்க வேண்டும்.
பேரணியில் திருவள்ளுவரின் புகைப்படம் தவிர வேறு யாருடைய புகைப்படங்களும் இடம் பெறக்கூடாது. திருக்குறள் பொறிக்கப்பட்ட பதாகைகள், தட்டிகள் மட்டுமே ஏந்தப்பட வேண்டும். குழந்தைகள், இளைஞர்களிடையே திருக்குறளை கொண்டுசேர்க்கும் வகையில் விழாவை அமைத்துக்கொள்வது எதிர்கால சந்ததிக்கு பயனுள்ளதாக அமையும்.
தமிழர் எதிர்பார்ப்பு
விழாவில் அரசியல் தலைவர்களை அழைத்து, அவர்களுக்கு மரியாதை செய்வதை முழுமையாக தவிர்க்க வேண்டும். அரசியல் தலைவர்கள் பங்கேற்பதால் தமிழர்கள் அரசியல் ரீதியாக பிரிக்கப்படுகிறார்கள்.கடந்த 8 ஆண்டுகளாக நடந்த திருவள்ளுவர் நாள் பேரணியின் உற்சாகம் படிப்படியாக வீழ்ச்சி அடைந்துவருவதற்கும், ஜாதி, மதம், அரசியல் அடையாளங்களை விரும்பாத தமிழர்கள் விழாவுக்கு வராமல் இருப்பதற்கும் வெளிப்படையான காரணங்கள் தெரிகின்றன.
ஒன்றிணைவோம்
நிகழ் ஆண்டில் நடக்கவிருக்கும் திருவள்ளுவர் நாள் விழா மற்றும் பேரணி, தமிழர்கள் என்ற அடையாளத்தை முன்வைத்து நடத்தப்படவேண்டும் என்று கர்நாடகத் தமிழர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். இது கடைப்பிடிக்கப்படாமல் இருந்தால் அடுத்த 10 ஆண்டுகளில் கர்நாடகத்தில் தமிழர்களைத் தேடி கண்டுபிடிக்க நேரிடும் என்பதை மறுக்க இயலாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...