நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

காவிரி வழக்கின் தீர்ப்பு: சித்தராமையாவுக்கு சாதகமாகுமா?

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில்,  காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு முதல்வர் சித்தராமையாவுக்கு சாதகமாக அமையுமா? என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:16 pm

ந.முத்துமணி

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில்,  காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு முதல்வர் சித்தராமையாவுக்கு சாதகமாக அமையுமா? என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.
அன்றைய மதராஸ் ராஜதானி மற்றும் மைசூரு சமஸ்தானத்திற்கும் இடையே 1892-ஆம் ஆண்டு பெரும் தலைவலியாகத் தொடங்கிய காவிரி ஆற்றுநீர்ப் பங்கீட்டு சிக்கல், 126 ஆண்டுகள் கடந்த பிறகும் உயிர்ப்போடு இருந்துவருகிறது.  1924-ஆம் ஆண்டு அன்றைய ஆங்கிலேயர் அரசுக்கும்,  மைசூரு சமஸ்தானத்தின் மகாராஜாவுக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட 50 ஆண்டுகால நீர்ப்பகிர்வு ஒப்பந்தம், 1974-ஆம் ஆண்டுகாலாவதியானதும் பிரச்னை தீவிரமடையத் தொடங்கியது.  அந்த ஆண்டில் இருந்து இரு மாநிலங்களுக்கும் இடையே அரசியல் மற்றும் சட்டப் போராட்டமாகவும் பரிணமித்துள்ளது.  இந்த பிரச்னையில் 2007-ஆம் ஆண்டு இறுதித் தீர்ப்பளித்த காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தன.  இந்த வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம்,  தனது தீர்ப்பை வெள்ளிக்கிழமை(பிப்.16) வெளியிட்டுள்ளது.
நடுவர் மன்றம் தமிழகத்திற்கு கர்நாடகம் வழங்க உத்தரவிட்டிருந்த 192 டிஎம்சி தண்ணீரில்,  தமிழகத்தில் உள்ள நிலத்தடி நீரைக் கருத்தில் கொண்டு 60 டிஎம்சி தண்ணீரை குறைக்க வேண்டுமென்று கர்நாடகம் வாதிட்டு வந்தது.  இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், தமிழகத்திற்கு கர்நாடகம் வழங்க வேண்டிய நீரில் 14.75 டிஎம்சியை குறைத்துள்ளது.  இதில் 4.75 டிஎம்சி நீரை பெங்களூரு மாநகரின் குடிநீருக்குப் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி அளித்துள்ளது.  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது என்ற கர்நாடகத்தின் வாதத்தை ஒதுக்கிவைத்துள்ள உச்ச நீதிமன்றம்,  6 வாரங்களுக்குள் வாரியத்தை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.  உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு முழுமையாக இல்லாவிட்டாலும்,  காவிரி ஆற்றுப்படுகை விவசாயிகள்,  பொதுமக்களுக்கு திருப்தியைத் தந்துள்ளது.  ஆனால் காவிரிப் பிரச்னையை வைத்து அரசியல் ஆதாயம் பெற்றுவந்த அரசியல் கட்சிகள், பொருளாதாரம் வளம்கொழித்த ஒருசில சுயநலவாதிகளுக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பேரிடியாக விழுந்துள்ளது. 
சித்தராமையாவுக்கு லாபம்
காவிரி வழக்கின் தீர்ப்பு வெளியாகியிருக்கும் காலம்,  முதல்வர் சித்தராமையாவுக்கு சாதகமாக அமைந்துள்ளது.  அடுத்த சில மாதங்களில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை எதிர்நோக்கியுள்ள முதல்வர் சித்தராமையாவுக்கு அரசியல் ரீதியாக லாபகரமாக அமையவுள்ளது.  உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி இரவோடு இரவாக தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட்டதாக முதல்வர்  சித்தராமையா மீது கோபத்தில் இருந்துவந்த விவசாயிகள்,  அவரது அரசின் திறமையான சட்டப் போராட்டத்தின் விளைவாக கூடுதலாக 14.75 டிஎம்சி கிடைத்துள்ளதாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  
அண்மையில் காவிரி நீர் கேட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எழுதியிருந்த கடிதத்திற்கு பதிலளித்த முதல்வர் சித்தராமையா,  தண்ணீர் தர இயலாது என்று கூறியிருந்தார்.  இந்தத் துணிவை விவசாயிகள் வெகுவாக பாராட்டியிருந்தனர்.  ஒருவேளை கர்நாடகத்திற்கு சாதகமாக தீர்ப்பு அமையாதிருந்தால்,  அது முதல்வர் சித்தராமையாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கும்.  2007-ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியானபோது, விவசாயிகள், கன்னட அமைப்பினரால் தொடர்ந்து 3 மாதங்களுக்கு போராட்டங்கள் நடந்தப்பட்டு வந்தன.  
தேர்தல் வேளையில் அதுபோன்றதொரு நிலைமை வராமல், ஆற்றுப்படுகை மக்களின் திருப்திக்கு தீர்ப்பு வழிவகுத்ததால் சட்டப்பேரவை தேர்தலில் அது காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமையும் என்று கருதப்படுகிறது. 
காவிரி வழக்கு தீர்ப்பை தனது அரசின் சாதனையாக சித்தராமையா பிரசாரம் செய்தால்,  அதை மக்களும் ஆமோதித்தால் பாஜக,  மஜத போன்ற அரசியல் கட்சிகளுக்குப் பாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  குடிநீர் வழங்க 4.75 டிஎம்சி ஒதுக்கப்பட்டுள்ளதால்,  சித்தராமையா அரசுக்கு பெங்களூரு மக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.  மேலும் குடிநீர்த் தட்டுப்பாடு வராது என்ற நம்பிக்கை வலுப்பெற்றால்,  அது பெங்களூரின் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் என்ற நம்பப்படுகிறது.  காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்குமாறு மத்திய அர்சுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் சித்தராமையா எதிர்த்துள்ள நிலையில்,  காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைத்தால் அது சித்தராமையாவின் அரசியல் விளையாட்டுக்கு சாதகமாக அமையும்.  
ஏற்கெனவே மகதாயி ஆற்றுநீர் பங்கீடு விவகாரத்தில் பாஜகவை குறிவைத்து சித்தராமையா தாக்கி வரும் நிலையில்,  காவிரி பிரச்னையிலும் அவருக்கு சாதகமான நிலை உருவானால் அது பாஜக,  மஜதவுக்கு தேர்தலில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றுஅரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.  
காவிரி ஆற்றுப்படுகையில் பலமான கட்சியாக விளங்கும் மஜதவை வீழ்த்த காவிரி தீர்ப்பை சித்தராமையா வலுவாகப் பயன்படுத்தக்கூடும்.  மேலும் தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி மேக்கேதாட்டு அணை திட்டத்தை நிறைவேற்ற மாநில அரசு முயன்றால்,  அதுவும் சித்தராமையாவுக்கு சாதகமாகும்.  காவிரி தீர்ப்பு அரசியல் ரீதியாக காங்கிரஸ் கட்சியின் மகிழ்ச்சிக்கு காரணமாக அமைந்தால், பாஜக, மஜதவுக்கு பாதகமாக மாறியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.