நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

மாநிலத் தலைமை இன்றி தவிக்கும் கர்நாடக அதிமுக

கடந்த 3 மாதங்களாக மாநிலச் செயலாளர் பதவியில் யாரும் இல்லாததால் கர்நாடக அதிமுக தொண்டர்கள் தலைமை இன்றி தவித்து வருகின்றனர்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:14 pm

ந.முத்துமணி

கடந்த 3 மாதங்களாக மாநிலச் செயலாளர் பதவியில் யாரும் இல்லாததால் கர்நாடக அதிமுக தொண்டர்கள் தலைமை இன்றி தவித்து வருகின்றனர்.
திமுகவில் இருந்து பிரிந்த எம்ஜிஆர், 1972-ஆம் ஆண்டு அக்.17-ஆம் தேதி அதிமுகவை தொடங்கினார். தமிழகத்தைப்போலவே எம்.ஜி.ஆருக்கு கர்நாடகத்திலும் ஆதரவு இருந்ததால்,  உடனடியாக கர்நாடகத்திலும் அதிமுகவின் கிளை தொடங்கப்பட்டது.
அதன்பிறகு ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஒருங்கிணைந்தபோது, கர்நாடகத்திலும் இரு அணிகளும் ஒன்றிணைந்தன.  எம்ஜிஆருடன் பணியாற்றிய சம்பங்கி ராமையா, சுந்தரம்,  பி.முனியப்பா போன்றோர் கட்சியை அடிமட்டத்தில் இருந்து வளர்த்தெடுத்ததோடு,  பெங்களூரு,  மைசூரு, கோலார், சிவமொக்கா உள்ளிட்ட மாவட்டங்களில் அதிமுகவைப் பலப்படுத்தியிருந்தனர்.
பெங்களூரு மாநகராட்சி,  சிவமொக்கா நகராட்சி, கோலார் தங்கவயல் நகராட்சிகளில் அதிமுகவினர் கணிசமான எண்ணிக்கையில் மாமன்ற உறுப்பினர்களாக பதவி வகித்தனர்.
கோலார் தங்கவயல் நகராட்சியை அதிமுக பல ஆண்டு காலத்துக்கு தன் வசத்தில் வைத்திருந்தது.  பெங்களூரு மாநகராட்சியில் 60 உறுப்பினர்கள் இருந்தபோது அதிமுகவை சேர்ந்த 7 பேர் மாமன்ற உறுப்பினர்களாக வென்றிருந்தனர்.  1983-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கோலார் தங்கவயல் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக மு. பக்தவத்சலம் அறிவிக்கப்பட்டிருந்தார்.  அவருக்கு ஆதரவாக எம்ஜிஆரே கோலார் தங்கவயலுக்கு வந்து பிரசாரம் செய்தார்.
அதன் விளைவாக,  கோலார் தங்கவயல் தொகுதியில் அதிமுக முதல்முறையாக வெற்றி பெற்றது.  அதைத் தொடர்ந்து, ஜெயலலிதாவின் தலைமையில் 1989,  1999-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைப் தேர்தல்களில் கோலார் தங்கவயல் தொகுதியை அதிமுக கைப்பற்றியிருந்தது.
அதே காலக்கட்டத்தில்,  1994-ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் பெங்களூரில் உள்ள காந்திநகர் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக களமிறங்கிய பி.முனியப்பா வெற்றி பெற்றிருந்தார். 
1999-ஆம் ஆண்டுக்கு பிறகு 2004, 2008,  2013-ஆம் ஆண்டுகளில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்களில் அதிமுக வெற்றியைப் பெற முடியாவிட்டாலும்,  தொடர்ந்து தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தி வந்துள்ளது.  அதிமுக வேட்பாளர்கள் தோல்வி அடைந்தாலும்,  கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்ததால்,  கட்சியின் செயல்பாடுகள் பாதிக்கப்படாமல் இருந்து வந்தன.
அதேபோல,  கோலார் தங்கவயல் நகராட்சியிலும் அதிமுக இன்னும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.  பெங்களூரு மாநகராட்சி,  சிவமொக்கா நகராட்சி தேர்தல்களில் அதிமுக தொடர்ந்து போட்டியிட்டு வந்துள்ளது. 
2008-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காந்திநகர் தொகுதியில் கே.ஆர்.கிருஷ்ணராஜ்,  சாமராஜ்பேட் தொகுதியில் எம்.சி. தெய்வசகாயம், ராஜாஜிநகர் தொகுதியில் எஸ்.கே.ராமசாமி,  சாந்திநகர் தொகுதியில் வா.புகழேந்தி,  கோலார் தங்கவயல் தொகுதியில் ஆ.ஆனந்தராஜ், புலிகேசிநகர் தொகுதியில் டி.சாம்ராஜ்,  சிவாஜிநகர் தொகுதியில் கே.மூர்த்தி ஆகிய 7 வேட்பாளர்களை அதிமுக நிறுத்தியது.
 2013-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வேட்பாளர்களாக வா. புகழேந்தி  (காந்திநகர் தொகுதி),  கே.முனிசாமி(ராஜாஜி நகர் தொகுதி), மு.அன்பு (கோலார் தங்கவயல் தொகுதி), பி. ரவீந்திரகுமார் (நரசிம்ம ராஜா  தொகுதி), எம்.ரவி (ஹனூர் தொகுதி) ஆகியோர் போட்டியிட்டனர்.
ஆனால்,  தற்போது கர்நாடக சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறவுள்ளது.  ஆனால் அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் திடீர் மரணத்துக்குப்பின் கட்சியில் ஏற்பட்ட குழப்பங்களால் கர்நாடக மாநில அதிமுக நிலை குலைந்துள்ளது.
 ஊழல் வழக்கில் 4 ஆண்டு காலம் சிறைத் தண்டனை பெற்று கடந்த ஆண்டு பிப்.15-ஆம் தேதி பெங்களூரில் உள்ள மத்திய சிறையில் சசிகலா அடைக்கப்பட்டார். அதுவரை சசிகலாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த கர்நாடக மாநிலச் செயலாளராக வா.புகழேந்தி,  அவரால் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட டிடிவி தினகரனுக்கு ஆதரவாகச் செயல்படத் தொடங்கினார்.
எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் அணிகள் இணைந்து விட்டதால்,  டி.டி.வி. தினகரன் ஆதரவாளராகச் செயல்பட்ட கர்நாடக மாநில அதிமுக செயலாளர் வா. புகழேந்தி, கடந்த ஆண்டு டிச.25-ஆம் தேதி அப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதைத் தொடந்து,  கர்நாடக அதிமுகவுக்கு தலைமை இல்லாத நிலை உருவாகியுள்ளது.  கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கட்சிக்குத் தலைமை இல்லாததால் தொண்டர்கள் வேதனை அடைந்துள்ளனர்.  சட்டப்பேரவைத் தேர்தலில் எப்படி செயல்பட வேண்டும்,  வேட்பாளராக யாரை நிறுத்துவது,  பிரசார திட்டங்களை செயல்படுத்துவது யார்?  போன்ற தொண்டர்களின் கேள்விக்கு விடையளிக்க யாரும் இல்லை.  கட்சியின் முன்னணியினரான எஸ்.டி.குமார்,  ஆர்.கிருஷ்ணராஜ், மு.அன்பு,  எம்.பி.யுவராஜ்  உள்ளிட்டோர் கர்நாடக மாநில அதிமுக செயலாளர் பதவியைக் கைப்பற்ற அவ்வப்போது சென்னையில் முகாமிட்டு,  தலைவர்களைச் சந்தித்து வருகின்றனராம்.
1972-ஆம் ஆண்டுக்குப் பிறகு கர்நாடகத்தில் நடந்த எல்லா தேர்தல்களிலும் அதிமுக போட்டியிட்டு வந்துள்ளது.  இந் நிலையில்,  கர்நாடக மாநில அதிமுகவுக்கு யாரும் தலைமை வகிக்காததால்,  வருகிற சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக போட்டியிடுமா? என்ற கேள்வி தொண்டர்களிடையே எழுந்துள்ளது.
எம்ஜிஆர்,  ஜெயலலிதா வழியில் சட்டப்பேரவை தேர்தல்களில் அதிமுக வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்று கோரும் தொண்டர்கள்,   உடனடியாக கட்சியின் மாநிலச் செயலாளரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.
இதற்கு  தமிழக தலைமை செவி சாய்க்குமா?  என்பது தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் அணிகள் இணைந்து விட்டதால்,  டி.டி.வி. தினகரன் ஆதரவாளராகச் செயல்பட்ட கர்நாடக மாநில அதிமுக செயலாளர் வா. புகழேந்தி, கடந்த ஆண்டு டிச.25-ஆம் தேதி அப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். 
இதைத் தொடந்து,  கர்நாடக அதிமுகவுக்கு தலைமை இல்லாத நிலை உருவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.