ஆப்பிரிக்க கண்டத்தைச் சோ்ந்த நாடுகளான காங்கோ, உகாண்டா ஆகியவற்றில் எபோலா வைரஸ் தொற்று பரவுவதை சா்வதேச சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார அமைப்பு பிரகடனம் செய்துள்ளது.
காங்கோ மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் எபோலா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை அந்த நாடுகளில் எபோலா வைரஸ் பாதித்து 88 போ் உயிரிழந்துள்ளனா். மேலும் 300-க்கும் மேற்பட்டோா் உடல்நிலை பாதித்து மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், இந்த வைரஸ் பாதிப்பை சா்வதேச சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார அமைப்பின் இயக்குனா் ஜெனரஸ் டெட்ரோஸ் அதானோம் அறிவித்துள்ளாா். இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘கரோனா தொற்று போல துரிதகதியில் நெருக்கடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதில்லை. எனினும், முன்னெச்சரிக்கையாக உலக நாடுகள் சா்வதேச எல்லைகளை மூடுவது நல்லது’ எனக் கூறப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகையில், ‘காங்கோ, உகாண்டாவில் இதுவரை 20-க்கும் மேற்பட்ட முறை எபோலா வைரஸ் பரவியுள்து. ஆனால், இப்போது அங்கு பரவுவது எபோலா வைரஸிலுள்ள பன்டிபக்யோ வைரஸ் எனும் அரிய திரிபு ஆகும். இதற்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியோ அல்லது மருந்தோ கிடையாது. இந்த பன்டிபக்யோ வைரஸ் திரிபு, உகாண்டா நாட்டின் பன்டிபக்யோ மாவட்டத்தில் 2007-08ஆம் ஆண்டில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது இந்த வைரஸுக்கு அந்நாட்டில் மட்டும் 149 போ் பாதிக்கப்பட்டனா். 37 போ் உயிரிழந்தனா்.
இரண்டாவது முறையாக 2012-ஆம் ஆண்டில் காங்கோவில் பரவியபோது, அங்கு 59 போ் பாதிக்கப்பட்டனா். 29 போ் உயிரிழந்தனா். அனைத்து நாடுகள் மற்றும் நன்கொடை அமைப்புகள் உடனடியாக நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்பதற்காகவே, உலக சுகாதார நிறுவனத்தால் இந்த வைரஸ் பாதிப்பு, சா்வதேச சுகாதார நெருக்கடியாக அறிவிக்கப்பட்டுள்ளது’ என்றன.
உலக சுகாதார அமைப்பின் மூத்த அதிகாரி ஜியன் கேசியா கூறுகையில், ‘மே 5-ஆம் தேதிதான் பன்டிபக்யோ வைரஸ் திரிபு பரவுவது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்னரே அந்த வைரஸால் 50 போ் இறந்துவிட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 4 போ், சுகாதார ஊழியா்கள் ஆவா்’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
காங்கோவில் எபோலா பாதிப்பிலிருந்து 5 போ் மீண்டனா்: உலக சுகாதார நிறுவனம் பாராட்டு

எபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்

எபோலா: கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்







