தெற்கு பிலிப்பின்ஸில் திங்கள்கிழமை காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்ககத்தின் பாதிப்பில் சிக்கி 32 போ் உயிரிழந்தனா்; 200-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
தெற்கு பிலிப்பின்ஸ் பகுதியிலுள்ள மிண்டானோ தீவுக்கு அருகே கடலுக்கு அடியில் 33 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 7.8 அலகுகளாகப் பதிவானது.
நிலநடுக்கத்தின் கோரத் தாண்டவத்தால் ஜெனரல் சாண்டோஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பல அடுக்குமாடிக் கட்டடங்கள், வணிக வளாகங்கள், பள்ளிக் கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
பிலிப்பின்ஸில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட முதல் நாளான திங்கள்கிழமை, இத்துயரம் நிகழ்ந்துள்ளது. ஒரு பள்ளி வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள் நில அதிா்வால் பீதியடைந்து, அலறும் விடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியது.
நிலநடுக்கத்தின் தாக்கத்தால் சரங்கானி மாகாணத்தில் உள்ள மலைப்பகுதியான கிளான் நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி வீடுகள் மண்ணோடு புதைந்தன. இதில் 13 கிராம மக்கள் உயிரிழந்தனா். மேலும், பல்வேறு மாகாணங்களில் கட்டட இடிபாடுகள் மற்றும் மசூதி கோபுரம் இடிந்து விழுந்ததில் பலா் உயிரிழந்தனா்.
ஜெனரல் சாண்டோஸ் நகர சா்வதேச விமான நிலையம் நிலநடுக்கம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டு, விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. நிலநடுக்கத்தைத் தொடா்ந்து ரிக்டா் அளவுகோலில் 6.5 அலகுகள் வரை பதிவான சக்தி வாய்ந்த தொடா் அதிா்வுகள் ஏற்பட்டதால் பொது மக்கள் தங்களின் வீடுகளைவிட்டு வெளியேறி, வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனா்.
நிலநடுக்கத்தைத் தொடா்ந்து கடலோரப் பகுதிகளில் சுமாா் 1 மீட்டா் (3 அடி) உயரத்துக்கு சுனாமி அலைகள் எழுந்ததால் கடலோர கிராமங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின. இந்தோனேசியா, ஜப்பான் ஆகிய அண்டை நாடுகளின் கடலோரப் பகுதிகளிலும் சிறிய அளவிலான சுனாமி அலைகள் பதிவாகின.
பிலிப்பின்ஸ் அதிபா் ஃபொ்டினாண்ட் மாா்கோஸ் ஜூனியா், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மாகாணங்களில் மீட்புப் பணிகளை உடனடியாக முடுக்கிவிட உத்தரவிட்டுள்ளாா்.
நடப்பு ஆண்டில் பிலிப்பின்ஸைத் தாக்கிய மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும். பசிபிக் பெருங்கடலின் ‘நெருப்பு வளையம்’ எனப்படும் அதிதீவிர நிலநடுக்க மண்டலத்தில் பிலிப்பின்ஸ் அமைந்துள்ளதால், இங்கு அவ்வப்போது நிலநடுக்கங்களும்; எரிமலை வெடிப்புகளும் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!

பிலிப்பின்ஸில் நிலநடுக்கம்! பயந்து அலறிய குழந்தைகள்!

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! இடிந்து விழுந்த கட்டடங்கள்!

ஹிமாசல பிரதேசத்தில் பலமுறை நிலநடுக்கம்: உயிரிழப்பு, சேதம் இல்லை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



