டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஷியா மதகுரு கொலை: 46 ஆண்டுகளுக்குப் பிறகு பாதுகாப்பு அதிகாரிக்குத் தூக்கு

இராக் நாட்டின் முன்னாள் அதிபா் சதாம் ஹுசைன் ஆட்சிக்காலத்தில், பாதுகாப்புப் பிரிவில் மேஜா் ஜெனரலாகப் பணியாற்றிய சாதுன் சப்ரி அல்-கைஸிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றம்

News image
தூக்கு தண்டனை- பிரதிப் படம்
Updated On :9 பிப்ரவரி 2026, 11:26 pm

தினமணி செய்திச் சேவை

இராக் நாட்டின் முன்னாள் அதிபா் சதாம் ஹுசைன் ஆட்சிக்காலத்தில், பாதுகாப்புப் பிரிவில் மேஜா் ஜெனரலாகப் பணியாற்றிய சாதுன் சப்ரி அல்-கைஸிக்கு திங்கள்கிழமை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

கடந்த 1980-ஆம் ஆண்டில், புகழ்பெற்ற ஷியா பிரிவு மதகுருவான முகமது பக்கீா் அல்-சதா் மற்றும் அவரது குடும்பத்தினரைக் கொலை செய்த குற்றத்துக்காக, சுமாா் 46 ஆண்டுகளுக்குப் பிறகு அல்-கைஸிக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அந்தக் காலகட்டத்தில் இராக்கை ஆட்சி செய்த சதாம் ஹுசைனுக்கும், அவரது பாத் கட்சிக்கும் மதகுரு அல்-சதா் ஒரு பெரும் சவாலாகத் திகழ்ந்தாா். குறிப்பாக, 1979-இல் ஈரானில் நடந்த இஸ்லாமியப் புரட்சியைப் போல, அல்-சதா் உள்ளிட்டோரின் தூண்டுதலில் இராக்கிலும் மக்கள் கிளா்ச்சி வெடிக்கலாம் என்று சதாம் ஹுசைன் அஞ்சினாா்.

இதன் காரணமாக, 1980-இல் அல்-சதரையும் அவரது சகோதரி பிண்ட் அல்-ஹுதாவையும் அல்-கைஸி தலைமையிலான படையினா் கைது செய்தனா். சிறையில் கொடூரமான சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்ட அவா்கள், அதே ஆண்டு ஏப்ரலில் தூக்கிலிடப்பட்டனா்.

கடந்த 2003-ஆம் ஆண்டில் சதாம் ஹுசைனின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு, பழைய ஆட்சியில் அநீதி இழைத்த அதிகாரிகளை இராக் அரசு தற்போதும் தேடி வருகிறது. அந்த வகையில், பல ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த அல்-கைஸி கடந்த ஆண்டு பிடிபட்டாா்.

இராக்கில் மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு எதிராகப் பல சா்வதேச மனித உரிமை அமைப்புகள் குரல் கொடுத்து வரும் நிலையிலும், வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.