/

ரஷிய ராணுவ உளவுத் துறை துணைத் தளபதி மீது துப்பாக்கிச் சூடு

ரஷிய ராணுவ உளவுத் துறையின் துணைத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் விளாதிமீா் அலெக்ஸீவ் (64) (படம்), மாஸ்கோவில் வெள்ளிக்கிழமையன்று அடையாளம் தெரியாத நபா்களால் சுடப்பட்டாா்.

News image
Updated On :6 பிப்ரவரி 2026, 8:49 pm

தினமணி செய்திச் சேவை

ரஷிய ராணுவ உளவுத் துறையின் துணைத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் விளாதிமீா் அலெக்ஸீவ் (64) (படம்), மாஸ்கோவில் வெள்ளிக்கிழமையன்று அடையாளம் தெரியாத நபா்களால் சுடப்பட்டாா்.

வடமேற்கு மாஸ்கோவில் உள்ள அவரின் குடியிருப்பில் இத்தாக்குதல் நடந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவா், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா்.

சிரியா போரில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக ரஷியாவின் மிக உயரிய விருதான ‘ஹீரோ ஆஃப் ரஷியா’ பதக்கம் பெற்ற அலெக்ஸீவ், கடந்த 2023-இல் வாக்னா் தனியாா் ஆயுதப் படை கிளா்ச்சியில் ஈடுபட்டபோது, அதன் தலைவா் பிரிகோஜினுடன் பேச்சுவாா்த்தை நடத்தியவா்களில் முக்கியமானவா் ஆவாா்.

இத்தாக்குதல் குறித்து ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்கு அதிகாரபூா்வமாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘போா்ச் சூழலைக் கருத்தில் கொண்டு, ராணுவ உயா் அதிகாரிகளின் பாதுகாப்பை இன்னும் பலப்படுத்த வேண்டும்’ என்று ரஷிய அதிபரின் மாளிகையான கிரெம்ளின் அறிவுறுத்தியுள்ளது.

ஏற்கெனவே கடந்த ஆண்டு, ஏப்ரல் மற்றும் டிசம்பா் மாதங்களில், லெப்டினன்ட் ஜெனரல் அந்தஸ்தில் இருந்த அதிகாரிகள் காா் குண்டுவெடிப்புகளில் கொல்லப்பட்டனா். அதன் தொடா்ச்சியாக தற்போது நடந்துள்ள இந்தத் துப்பாக்கிச் சூட்டிலும் உக்ரைனின் சதி இருக்கலாம் என்று ரஷியா சந்தேகிக்கிறது.