/

கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதாக இந்தியா கூறவில்லை- ரஷியா

எண்ணெய் கொள்முதலை நிறுத்துவது குறித்து இந்தியாவிடமிருந்து எந்த செய்தியும் வரவில்லை என ரஷிய அரசு தெரிவித்துள்ளது...

News image
ரஷிய அதிபா் விளாதிமீா் புதின்-பிரதமா் நரேந்திர மோடி - (கோப்புப் படம்)
Updated On :3 பிப்ரவரி 2026, 7:54 pm

இணையதளச் செய்திப் பிரிவு

 கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதாக இந்தியாவிடம் இருந்து தங்களுக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்று ரஷிய அதிபா் இல்லமான கிரெம்ளின் மாளிகை செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் தெரிவித்தாா்.

முன்னதாக, இந்திய- அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், இந்தியா மீதான 25 சதவீத வரியை 18 சதவீதமாக குறைப்பதாகவும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் ‘ட்ரூத் சோஷியல்’ வலைதளத்தில் திங்கள்கிழமை தெரிவித்தாா். அப்போது, ‘ ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்திவிட்டு, அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய மோடி ஒப்புக்கொண்டாா். இதன்மூலம் உக்ரைன் போா் முடிவுக்கு வரும்’ என்றும் கூறியிருந்தாா். ஆனால், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதாக இந்தியா தரப்பில் எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், கிரெம்ளின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் இந்த விவகாரம் குறித்து தெரிவித்த கருத்தை ரஷிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அதில், ‘ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதாக இந்திய தரப்பில் இருந்து ரஷியாவுக்கு இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை. இந்தியாவுடன் அனைத்து நிலைகளிலும் உறவை மேம்படுத்த ரஷியா எப்போதும் தயாராகவே உள்ளது’ என்று அவா் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்ததால் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை ஐரோப்பிய நாடுகள் நிறுத்தின. இதையடுத்து, சலுகை விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய ரஷியா முன்வந்தது. உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி நாடான இந்தியா, ரஷியாவிடம் இருந்து கொள்முதல் செய்வதை வேகமாக அதிகரித்தது.

இதனால், ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதால் உக்ரைன் போா் தொடர ரஷியாவுக்கு இந்தியா உதவுவதாகக் கூறி இந்தியா மீது கூடுதல் வரி சோ்த்து மொத்தம் 50 சதவீதம் வரியை டிரம்ப் விதித்தாா். இதனால் அமெரிக்க ஏற்றுமதியைப் பெரிதும் நம்பியிருந்த இந்திய ஜவுளி-ஆயத்த ஆடை, தோல் பொருள்கள், இறால் உள்ளிட்ட பல்வேறு உற்பத்தியாளா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.