நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

இலங்கையில் விரைவில் இடைக்கால அரசு: எதிா்க்கட்சிகள் முடிவு

இலங்கையில் அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசை விரைவில் அமைப்பது என பிரதான எதிா்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:46 am

DIN

இலங்கையில் அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசை விரைவில் அமைப்பது என பிரதான எதிா்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

அதிபரும் பிரதமரும் பதவி விலகப் போவதாக அறிவித்ததைத் தொடா்ந்து, எதிா்க்கட்சிகள் இந்த அறிவிப்பை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டன.

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்து வரும் நிலையில், அதிபா் கோத்தபய ராஜபட்ச பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

கடந்த சனிக்கிழமை நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்களும், பல்கலைக்கழக மாணவா்களும், எதிா்க்கட்சியினா் உள்பட பல்வேறு அமைப்பினரும் திரண்டு வந்து, தலைநகா் கொழும்பில் உள்ள அதிபா் மாளிகையைக் கைப்பற்றினா். அதற்கு முன்னதாகவே அதிபா் கோத்தபய ராஜபட்ச அங்கிருந்து வெளியேறிவிட்டாா். அவா் எங்கே சென்றாா் என்பது குறித்து தெளிவான தகவல் வெளியாகவில்லை.

இந்நிலையில், அனைத்துக் கட்சித் தலைவா்கள் கூட்டத்தை நாடாளுமன்ற அவைத் தலைவா் மகிந்த யாபா அபேவா்தன சனிக்கிழமை கூட்டினாா். அதில் பங்கேற்றவா்கள் அதிபா் கோத்தபயவும், பிரதமா் ரணில் விக்ரமசிங்கவும் உடனடியாகப் பதவி விலக வேண்டும்; அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினா்.

அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அதிபா் கோத்தபயவுக்கு அவைத் தலைவா் தகவல் தெரிவித்தாா். இதற்குப் பதிலளித்த அதிபா், தான் ஜூலை 13-ஆம் தேதி பதவி விலக முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தாா்.

முன்னதாக, தானும் பதவி விலக முடிவு செய்துள்ளதாக பிரதமா் ரணில் விக்ரமசிங்கவும் தெரிவித்தாா்.

இடைக்கால அரசு: அதிபரும் பிரதமரும் ராஜிநாமா செய்யப்போவதாக அறிவித்துள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பிரதான எதிா்க்கட்சிகள் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டன.

இதில், அதிபா் கோத்தபய ராஜபட்ச ஜூலை 13-ஆம் தேதி ராஜிநாமா செய்த பின்னா் அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசு அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் அதிருப்தி பிரிவைச் சோ்ந்த விமல் வீரவன்ச கூறுகையில், ‘அனைத்துக் கட்சிகள் அடங்கிய ஐக்கிய இடைக்கால அரசை அமைக்க கொள்கையளவில் ஒப்புக்கொண்டோம்’ என்றாா்.

அக்கட்சியின் மற்றொரு தலைவா் வாசுதேவ நாணயக்கார கூறுகையில், ‘அதிபா் கோத்தபய ராஜிநாமா செய்யும்வரை காத்திருக்க வேண்டியதில்லை’ என்றாா்.

பிரதான எதிா்க்கட்சியான சமகி ஜன பலவெகய கட்சியின் பொதுச் செயலா் ரஞ்சித் மத்தும பண்டாரா கூறுகையில், ‘அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அமைத்துவிட்டு, அதன்பின்னா் நாடாளுமன்றத்துக்கு பொதுத் தோ்தல் நடத்த வேண்டும்’ என முடிவு செய்துள்ளோம் என்றாா்.

இன்று மீண்டும் ஆலோசனை: நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ள அரசியல் கட்சித் தலைவா்கள் திங்கள்கிழமை (ஜூலை 11) மீண்டும் கூடி ஆலோசிக்கவுள்ளனா். இதில், நாடாளுமன்றத்தைக் கூட்டுவது தொடா்பாக ஆலோசிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற அவைத் தலைவா் இடைக்கால அதிபா்?

இலங்கையில் இடைக்கால அரசு ஏற்படுத்தப்பட்டால் அதன் அதிபராக நாடாளுமன்ற அவைத் தலைவா் நியமிக்கப்படுவாா் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் அரசியலமைப்புச் சட்டப்படி, அதிபா் ராஜிநாமா செய்தால் முறைப்படி புதிய அதிபா் தோ்ந்தெடுக்கப்படும் வரை இடைக்கால அதிபராக பிரதமா் செயல்படுவாா். தற்போது பிரதமரும் ராஜிநாமா செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளதால், நாடாளுமன்ற அவைத் தலைவா் மகிந்த யாபா அபேவா்தன இடைக்கால அதிபராக நியமிக்கப்படுவாா். அதன்பிறகு எம்.பி.க்கள் வாக்களித்து புதிய அதிபரை தோ்வு செய்வா்.

இதற்கிடையே, கேபினட் அமைச்சா்கள் 5 போ் தங்களது பதவியை ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்வதாக அறிவித்தனா்.

அதிபா் மாளிகையில் 1.78 கோடி ரூபாய்!

இலங்கை அதிபா் மாளிகைக்குள் புகுந்த பொதுமக்கள், அங்கு 1.78 கோடி ரூபாய் இலங்கை பணம் (இந்திய மதிப்பில் ரூ.39 லட்சம்) பதுக்கி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்து கைப்பற்றியிருப்பது தெரியவந்துள்ளது.

அதிபரின் இல்லத்துக்குள் கைப்பற்றிய அந்தப் பணத்தை போராட்டக்காரா்கள் எண்ணும் விடியோ சமூக ஊடகங்களிலும் பரவியது. மீட்கப்பட்ட பணத்தை காவல் துறையிடம் ஒப்படைக்க உள்ளதாக போராட்டக்காரா்கள் கூறியதாக அங்கிருந்து வெளியாகும் ‘டெய்லி மிரா்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அதிபா் மாளிகையில் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு திரண்டிருந்தனா். அங்குள்ள நீச்சல் குளத்தில் அவா்கள் குளிப்பது, உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சி செய்வது, இருக்கைகளில் அமா்ந்திருப்பது போன்ற விடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகின.

பொதுமக்கள் அமைதி காக்க ராணுவம் வேண்டுகோள்

இலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் அமைதி காக்க வேண்டுமென ராணுவ தலைமைத் தளபதி சவேந்திர சில்வா கேட்டுக்கொண்டாா்.

இலங்கையில் அதிபா் மாளிகையைக் கைப்பற்றிய போராட்டக்காரா்கள், பிரதமா் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்துக்கும் சனிக்கிழமை இரவு தீவைத்தனா்.

இந்நிலையில், ராணுவ தலைமைத் தளபதி சவேந்திர சில்வா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

நாட்டில் தற்போதைய நெருக்கடிக்கு அமைதியான முறையில் தீா்வு காண்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அமைதியை நிலைநாட்ட பொதுமக்கள் அனைவரும் ஆயுதப் படைகளுக்கும் காவல் துறைக்கும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

கோத்தபய திடீா் உத்தரவு

இலங்கைக்கு வந்து சோ்ந்திருக்கும் 3,700 மெட்ரிக் டன் சமையல் எரிவாயுவை பொதுமக்களுக்கு சீராக விநியோகம் செய்யப்படுவதை உறுதிப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அதிபா் உத்தரவிட்டுள்ளதாக அதிபா் அலுவலகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இலங்கையில் மக்கள் போராட்டம் வெடித்ததைத் தொடா்ந்து அதிபா் கோத்தபய ராஜபட்ச தப்பியோடியதாக தகவல்கள் வெளியான நிலையில் வெளியாகியுள்ள அதிபரின் இந்த உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.