17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

27 கருடசேவை... 18 நவநீத சேவை!

பறவைகளின் அரசனான கருடன் வேதங்களின் வடிவமாகப் போற்றப்படுகின்றார்.

News image

கருடசேவை

Updated On :5 ஜூன் 2026, 3:46 pm IST

பறவைகளின் அரசனான கருடன் வேதங்களின் வடிவமாகப் போற்றப்படுகின்றார். அவர் பெருமாளின் பிரதான பக்தராகவும், முதன்மை வாகனருமாகவும் விளங்குகிறார். கருடன் மீது பெருமாள் ஆரோகணித்தபடி காட்சியருளும் நிகழ்வே

கருடசேவை எனப்படுகிறது. இது பெருமாள் திருத்தலங்களில் நிகழ்த்தப்படும் முக்கியமான விழாக்களுள் ஒன்று.

"ஆதி மூலமே' என்று ஓலமிட்ட யானைக்கும், பாண்டிய மன்னன் சபையில் பெரியாழ்வாருக்கும் கருட வாகனத்தில் பிரத்யேகமாக பெருமாள் தரிசனம் அளித்த வரலாற்றுக் கதைகள் புகழ்பெற்றவை.

தன்னையே கதி என்று சரணடைந்த பக்தர்களைக் காத்திட வேண்டிய சமயங்களில் பெருமாளானவர் கருட வாகனத்தில் விரைந்து வந்து காட்சியருளுவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

கருடசேவை தரிசனம் மங்களகரமானது. மனதைரியம், ஆயுள் வழங்கிடச் செய்வது. சர்ப்ப தோஷங்களை போக்கிட வல்லது. மனப்பயம், நடுக்கம் போன்றவற்றை நீக்கிடும் சக்தி படைத்தது.

ஒரு கருடசேவை தரிசனமே அதீதமான பலன்களை அளிக்கவல்லது என்றால், ஒரே சமயத்தில் இருபத்தியேழு கருடசேவைக் காட்சிகளைத் தரிசித்தால், புண்ணிய பலன்கள் பல மடங்காகத்தானே இருக்கும்!

பாரம்பரியமிக்கதும், தொன்மை வாய்ந்ததும், புகழ் பெற்றதுமாக விளங்கும் தஞ்சாவூர் கருடசேவையைப் பார்ப்போம்.

ஒரு சமயம் தண்டகாரண்யத்தில் கடுந்தவம் இயற்றிய பராசர முனிவரின் விண்ணப்பத்துக்கிணங்கி, நல்லதொரு வைகாசித் திருவோண தினத்தில் தாயார் சமேதரராக கருடவாகனத்தில் பெருமாள் காட்சியருளினார். இது நிகழ்ந்த தண்டகாரண்யம்தான் தற்போதைய தஞ்சாவூராக அறியப்படுகிறது. பிறகு மற்றொரு சமயம் இதே தலத்தில் மங்களாசாசனம் செய்து பாடிய திருமங்கையாழ்வாருக்கும் கருடசேவைக் காட்சியளித்து மகிழ்வித்துள்ளார் பெருமாள்.

இந்த ஐதீகங்களைப் போற்றிடும் வகையில் வருடந்தோறும் கருடசேவை விழாவானது தஞ்சாவூரில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த கருட

சேவையைத் தொடர்ந்து அடுத்தநாள் நவநீதசேவை எனப்படும் வெண்ணெய்த்தாழி உற்சவம் நிகழ்த்தப்படுவது கூடுதல் சிறப்பு. மூன்றாவது தினம் இந்த உற்சவத்தை விடையாற்றியுடன் நிறைவு செய்வது நடைமுறையாக உள்ளது.

தொன்மையான பாரம்பரியப் பெருமை வாய்ந்த இந்நிகழ்வு தஞ்சை பள்ளியக்ரஹாரம் ஆர்.வி.வி. நாராயணசாமி ராவ் என்பவரால் 1906}ஆம் ஆண்டு பன்னிரு கருடசேவை நிகழ்வாகத் தொடங்கப்பெற்றது. அதனாலேயே இவருக்கு துவாதசி கருடாழ்வார் தாசர் என்ற பெயரும் வழங்கப்பட்டது. இடையில் நான்கு வருடங்கள் தடை ஏற்பட்டதற்குப் பின்னர் 1935}ஆம் ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்டது.

அன்று முதல் ஒருவருடம் கூட தடையின்றி நிகழ்த்தப்பட்டு வருகிற இவ்விழாவுக்கு இவ்வருடம் 92}ஆவது ஆண்டாகும். முதல்முறையாக இவ்வருடத்திலிருந்து 27 கருட சேவை புறப்பாடு நடைபெறவிருப்பதும் கூடுதல் சிறப்பு. மிக கோலாகலமாக நடத்தப்பெறும் இந்த கருடசேவை வைபவத்தில் தஞ்சையைச் சுற்றியுள்ள இருபத்தியேழு பெருமாள் கோயில்கள் பங்கேற்கின்றன.

ஜூன் 5 (வெள்ளிக்கிழமை) அன்று தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை திவ்வியதேசமாகிய ஸ்ரீ நரசிம்மப் பெருமாள் கோயில் சந்நிதியில் முதல் வைபவமாக திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்வதுடன் இந்த விழா தொடங்குகிறது.

தொடர்ந்து ஜூன் 6 (சனிக்கிழமை) அன்று ஹம்சவாகனத்தில் எழுந்தருளும் திருமங்கையாழ்வார் முன்னே வர, அவரைத் தொடர்ந்து 27 கோயில் பெருமாள்களும் கருடசேவை காட்சி அளித்தபடி, தஞ்சையின் நான்கு முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா காண்பார்கள். இந்நிகழ்வை தரிசனம் செய்வது அஸ்வமேத யாகம் செய்வதற்குச் சமமான பலன் தரவல்லது என்பது பெரியோர் வாக்கு.

அதுபோலவே ஜூன் 7 (ஞாயிறு) அன்று நிகழ்த்தப்படும் நவநீதசேவையில் 18 கோயில்களைச் சேர்ந்த பெருமாள்கள் சேவை சாதித்து திருவீதியுலா காண்பார்கள். பக்தர்கள் சுவாமிக்கு வெண்ணெய் சமர்ப்பித்து வணங்குவது இவ்விழாவின் முக்கியமான அம்சம்.

இந்நிகழ்வை தரிசனம் செய்வதுடன், பிரசாதமாக அளிக்கப்படும் சாற்று வெண்ணெய்யை உட்கொள்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்திடும் என்பது நம்பிக்கை. இப்படிப் பலன் அடைந்தவர்கள் அடுத்த வருடம் மேலவீதி நவநீத

கிருஷ்ணர் கோயிலில் துலாபார நேர்ச்சை செய்து காணிக்கையாக்குவதும் வழக்கம். இவ்வாலயம் தஞ்சையின் குருவாயூர் என்று புகழப்படும் சிறப்பு வாய்ந்த கிருஷ்ணர் கோயில்களுள் ஒன்றாகும். இறுதியாக ஜூன் 8 (திங்கள்) அன்று விடையாற்றி நிகழ்வுடன் இந்த உற்சவமானது இனிதே நிறைவு பெற உள்ளது.

இதுபோன்று முதல் தினம் கருடசேவையும், அதற்கடுத்த தினம் நவநீத சேவையும் நடைபெறுவது அரிய நிகழ்வாகும்.

- சுஜாதா மாலி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.