பண்டைய தமிழ்நாட்டின் வடபகுதியிலும், ஆந்திரத்தின் தென்பகுதியிலும் அமைந்துள்ள நிலப்பரப்பு தொண்டை நாடாகும். இது பல்லவர் காலத்துக்கு முன்னரே 24 கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு இருந்தது. அதில் புழல் கோட்டத்தில் அமைந்த பகுதிதான் சென்னைக்கு அருகேயுள்ள இன்றைய மாதவரம்.
இங்குள்ள அருள்மிகு கனகவல்லித் தாயார் சமேத கரிவரதராஜப் பெருமாள் திருக்கோயிலும், அருகிலுள்ள கைலாச நாதர் கோயிலும் இரண்டாம் நந்திவர்மப் பல்லவனால் கட்டப்பட்டது.
பல்லவ மன்னர்களால், நான்கு வேதங்களை ஓதும் வேத விற்பன்னர்களுக்குத் தானமாக வழங்கப்பட்ட இவ்வூர், ஏகதீர சதுர்வேதி மங்கலம் என வழங்கப்பட்டு, பின்னர் மகாதவபுரம், மாதவபுரம், மாதவரம் என்று மருவியதாக ஊரின் பெயர்க் காரணமாகச் சொல்லப்படுகிறது.
ஊரின் மத்தியில் கோயில் அமைந்துள்ளது. கிழக்குப் பார்த்த மூன்று நிலை ராஜகோபுரம் வழியே உள்ளே நுழைகிறோம். இடப்பக்கம் சுதையாலான 21 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் வடக்குப் பார்த்து கூப்பிய கரங்களுடன் வரவேற்கிறார்.
கோயிலுக்குள் நுழைந்தால், வலப்பக்கம் கோதண்டராமர் சன்னதி, உள்ளே மூலவராக சீதா, ராமர், லட்சுமணர் நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார்கள். அவர்களுடன் தத்ரூபமான வடிவத்தில் தியாகராஜரின் உற்சவமூர்த்தியும் காணப்படுகிறது. ராமர் சன்னதிக்கு எதிரே பக்த ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது.
கொடி மரத்தையடுத்து மூலவரை நோக்கியவாறு கருடாழ்வார் எழுந்தருளியுள்ளார். மூலஸ்தானத்துக்கு வெளியே இருபுறங்களிலும் துவாரபாலகர்கள் காட்சி தர, உள்ளே மூலவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற திருக்கோலத்தில் கருணையே உருவாக சேவை சாதிக்கிறார் வேங்கட வரதன். திருமலையில் அருள்பாலிக்கும் திருவேங்கடமுடையான் திருவுருவம் போல் இவரும் எழுந்தருளியிருப்பதால் இப்பெயராம். அருகில் உற்சவர் கரிவரதராஜப்பெருமாளும் சேவை சாதிக்கிறார்.
நோய் நொடி, கடன் தொல்லை, குடும்ப கஷ்டம், கல்வித்தடை, பேச்சுக் குறைபாடு விலகுதல், மணப்பேறு, மகப்பேறு கிட்டுதல், வீடு, மனை வாங்குதல் எனப் பதினாறு பேறுகளையும் இத்தலத்துப் பெருமாள் அருள்கிறார்.
பல்வேறு அற்புதங்களையும் இவர் நிகழ்த்தியுள்ளார். ஒரு சமயம் தேனபிஷேகம் செய்யும்போது கோயில் அர்ச்சகர் சிறிது தேனை உத்தரணியில் எடுத்து பெருமாளின் வாயருகில் கொண்டு செல்லும்போது "க்ளக்' என்ற ஒலியுடன் அத்தேனை பெருமாள் ஏற்றுக்கொண்ட அதிசயம் நிகழ்ந்துள்ளதாம்.
மகாமண்டபத்தில் தெற்கு நோக்கி தனி சந்நிதியில் ராமானுஜர் மூலவர், உற்சவர் திருமேனியும், அடுத்து ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் உற்சவத் திருமேனியும் தனித்தனி சந்நிதிகளில் உள்ளன. தவிர முன்மண்டபத்தில் சேனை முதலிகள், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், வேதாந்த தேசிகர் ஆகியோர் கல்திருமேனியராக தனி சந்நிதியில் அருள்காட்சியளிக்கின்றனர்.
மூலவருக்கு வலப்பக்கத்தில் தனி சந்நிதியில் கருணைக்கடலாக விளங்கும் பெருந்தேவித் தாயாரும், அருகிலேயே உற்சவர் கனகவல்லித் தாயாரும் எழுந்தருளியுள்ளனர்.
சில வருடங்களுக்கு முன்னர் சோகத்துடன் கோயிலுக்கு வந்த பெண்மணி ஒருவர், "என் மகன் காணாமல் போய்விட்டான். நீங்கள்தான் அவன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துத் தரவேண்டும்' என இங்குள்ள தாயாரிடம் மனமுருகி வேண்டிக் கொண்டு சென்றாராம்.
சிறிது நேரத்திலேயே அந்தப் பெண்மணியின் கைப்பேசிக்கு ஓர் அழைப்பு வர, அதில் மறுமுனையில் இருந்து, ""அம்மா! நான் திருச்சானூர் தாயார் சந்நிதியில் பத்திரமாக இருக்கிறேன். என்னை வந்து அழைத்துச் செல்லுங்கள்'' என்று காணாமல் போன மகன் பேச, அவன் மீண்டும் குடும்பத்துடன் சேர்ந்த அற்புதமும் நிகழ்ந்திருக்கிறது.
மூலவர் சந்நிதிக்கு இடப்பக்கத்தில் லஷ்மி ஹயக்ரீவர் சந்நிதி உள்ளது. அருகில் உற்சவர்களாக லஷ்மி வராகரும், லஷ்மி நாராயணரும் சேவை சாதிக்கின்றனர். அடுத்து கிழக்கு நோக்கியுள்ள ஆண்டாளை தனி சந்நிதியில் தரிசிக்கலாம்.
விஸ்தாரமான யாகசாலை மண்டபத்தையும் பரமபத வாசலையும் கடந்து வந்தால் எதிர்ப்படுவது சக்கரத்தாழ்வார் சந்நிதி. இவரது மூலவர், உற்சவர் திருமேனியில் மூல மந்திரம் பொறிக்கப்பட்டுள்ளதும், ஒரே பீடத்தில் மூலவர் சக்கரத்தாழ்வாரும், யோக நரசிம்மரும் ஆதிசேஷனுடன் தனித்தனியாக சேவை சாதிப்பதும் சிறப்பு.
தாயார் சந்நிதிக்கு எதிரே நூதன அஷ்ட கோண கண்ணாடி அறையும், கோயிலின் அக்னி மூலையில் மடப்பள்ளியும் அமைக்கப்பட்டுள்ளது. உள்ளே மடப்பள்ளி நாச்சியார் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.
வைணவ கோயிலில் நடைபெறும் உற்சவங்கள் அனைத்தும் இங்கும் நடைபெறுகின்றன. பெரிய உற்சவமாக வைகாசியில் பத்துநாள் பிரம்மோற்சவம் நடைபெறும்.
காலை 7 மணி முதல் 11 வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 வரையும் தரிசனத்துக்காகத் திறந்திருக்கும் இந்தப் பெருமாள் கோயில், மாதவரம் ஊரில் உள்ள பேருந்து நிலையத்துக்கு அருகிலும், மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
- மு.வெங்கடேசன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின்

தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம்!

பரிமள ரெங்கநாதா் கோயிலில் லட்ச தீபத் திருவிழா

ஆந்திரத்தின் தலைநகராக அமராவதி: இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


