/

நற் குர்ஆன் நவிலும் நட்பு!

உலக நட்பு நாள் ஜூலை 30-இல் கொண்டாடப்படுகிறது. உலக நாடுகளின் ஆட்சியாளர்கள், அதிகாரிகள், பல்துறை வல்லுநர்கள் ஒரு நாட்டிலிருந்து பிற நாடுகளுக்குப் பரஸ்பரம் நட்பு பயணம் மேற்கொள்வதும், உரையாடி

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:47 am

மு. அ. அபுல் அமீன்

உலக நட்பு நாள் ஜூலை 30-இல் கொண்டாடப்படுகிறது. உலக நாடுகளின் ஆட்சியாளர்கள், அதிகாரிகள், பல்துறை வல்லுநர்கள் ஒரு நாட்டிலிருந்து பிற நாடுகளுக்குப் பரஸ்பரம் நட்பு பயணம் மேற்கொள்வதும், உரையாடி உடன்படிக்கைகள் உருவாக்கி, கையெழுத்திட்டு களிப்பதும் நடைமுறைப் பழக்கமாகி நாடுகளிடையே நட்பை வளர்க்கின்றன. 
அதே வேளையில் பக்கத்து நாடுகளுக்குள் எல்லைப் பிரச்னை, நீர்ப் பங்கிடுவதில் தீராத தகராறு ஒரு புறம். வளர்ந்த நாடுகள், வளரும் வளமான நாடுகளைச் சுரண்ட, சூறையாட பாதுகாப்பிற்குப் படைகளை அனுப்பி, உள்நாட்டுச் சண்டைகளை உருவாக்கி, உலகில் அமைதி இன்மையை ஏற்படுத்துவது இன்னொரு புறம். 
ஏவுகணை வேவு பார்த்து எண்ணற்றத் தொல்லைகள் தருவதும் வழக்கமாகி விட்டதையும் ஒப்பிட்டுப் பார்க்கும் பரிதாப நிலையும் நிலவுகிறது.
மாண்புமிக்க மனித நேய உறவிற்கு நட்பு அடித்தளம் அமைக்கிறது. நட்பின் தன்மையை விவரிக்கும் "நட்பு' என்னும் சொல் நற் குர்ஆனில் தொன்னூறுக்கு மேற்பட்ட வசனங்களில் இடம் பெற்றுள்ளது. 
அவை நட்பின் அவசியத்தையும், சிறந்த வாழ்வியல் முறைக்கு அதன் பங்களிப்பையும் பறை சாற்றுகிறது. 
ஒரு மனிதன் சக மனிதனை நேசித்து நட்பு கொள்ள வேண்டும். அழகிய முறையில், அக்கறையோடும் நல்லிணக்கத்தோடும் பழகவேண்டும்.
இவ்வுலகில் பெற்றோர்களுக்கு உதவி செய்து நேசிக்க இயம்புகிறது இறை மறை குர்ஆனின் 31-15 ஆவது வசனம். நட்பைப் பெற்றோரிடம் கற்க ஏவுகிறது இந்த வசனம். "உன் பெற்றோரை நேசி' என்பது பெற்றோரிடம் நட்போடும், உண்மையாகவும் பழகுவது.
பெற்றோருக்குக் கீழ்ப் படிந்து நடப்பது, அவர்களுக்குப் பணிவிடை செய்வது, அவர்களோடு எப்பொழுதும் தொடர்பில் இருப்பது என்று விளக்கம் தருகிறது தப்ஸீர் அல்பககி 288/6. 
இக்கால அலைபேசி அறிவிப்பு போல தொடர்பு எல்லைக்கு அப்பால் புறக்கணித்துச் செல்லக் கூடாது. 
இறைத் தூதர் நபி (ஸல்) அவர்களிடம், அழகிய முறையில் உண்மையாக நெருங்கிப் பழகுவதற்கு மிகவும் அருகதையானவர் யார் என்று கேட்கப்பட்ட பொழுது "தாய்' என்று பதில் கூறினர்கள். 
மீண்டும் இருமுறை கேட்ட பொழுதும் அதே பதிலைக் கூறினார்கள். நான்காம் முறை கேட்டபொழுது, அடுத்து இடம் பெறுபவர் தந்தை என்று பதில் உரைத்தார்கள். 
மனைவியோடு நட்பு பேணுவது இல்லறத்தை இனிமையாக்கும். குழந்தைகளிடம் காட்டும் நட்பு குடும்பத்தில் குதூகலத்தைப் பெருக்கும்.
குடும்பத்திலிருந்து தொடங்கும் நட்பு, குவலயம் முழுவதும் பரவி உலக நட்பு உருவாகட்டும். உலக மக்கள் ஒன்றிணையட்டும்..!

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.