/

பொருநை போற்றுதும்! - 155

நேஷனல் எம்போரியத்தில், வண்ணச்சரங்கள் தொங்கவிடப்பட்டு, ஏதோ கொண்டாட்ட அறிகுறி இருப்பதைக் கண்டனர். என்ன என்று விசாரித்தபோது, கடை சிப்பந்தி ஒருவர், ""பிபின் பால் அவர்களின் விடுதலைக் கொண்டாட்டம்!''

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:47 am

டாக்டா் சுதா சேஷய்யன்

நேஷனல் எம்போரியத்தில், வண்ணச்சரங்கள் தொங்கவிடப்பட்டு, ஏதோ கொண்டாட்ட அறிகுறி இருப்பதைக் கண்டனர். என்ன என்று விசாரித்தபோது, கடை சிப்பந்தி ஒருவர், ""பிபின் பால் அவர்களின் விடுதலைக் கொண்டாட்டம்!'' என்று சொல்லிவிட்டார். 
அவ்வளவுதான், வின்ச்சுக்கு ஆத்திரம் தாங்கவில்லை; கையிலிருந்த சாட்டையைக் கொண்டு அந்தச் சிப்பந்தியின் முகத்தைப் பதம் பார்த்துவிட்டார். கூட்டத்திற்கு இது போதாதா? சாட்டை அடிக்கு பதிலாகக் கற்கள் பறந்தன. ஆஷுக்கு ரத்தம் கொதித்தது. கூட்டத்தைக் கலைந்து போகச் சொல்லிக் கூக்குரலிட்டார். கூட்டம் மறுத்தது. 
வின்ச் செய்த சட்டக் குளறுபடிக்கு முட்டுக் கொடுக்கும் அதிகாரக் குளறுபடியை இப்போது ஆஷ் செய்தார்.  கண்ட இடத்தில் சுடும்படியான தீவிர உத்தரவைப் பிறப்பித்தார். 
இரண்டு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. நெல்லையப்பர் கோயிலுக்குச் செல்லும் வழியில், ரிசர்வ் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மருத்துவமனைப் பகுதியில் மாவட்டக் காவல் படை சுட்டது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் இறந்து போயினர். ஆஷின் வெறிக் கூத்தாகவே அனைத்தும் மாறிப் போயின. 
அதிகாரம் கையில் இருக்கிறது என்னும் எண்ணத்தில், அன்றைய அதிகாரிகள் நடந்துகொண்டதுதான், பல்வேறு தொடர்ச் சம்பவங்களுக்கு வழிகோலியது என்பதை, இந்திய வரலாற்றை உணர்ந்த எவரும் ஒத்துக் கொள்வார்கள். 
இதே கூட்டம்தான், இதே மக்கள்தான், இதே சுதேசியத் தவிப்புதான்- ஆனால், இந்தக் கூட்டத்தை அமைதிப்படுத்தி, அரவணைத்து வழி நடத்தினார் வ. உ. சி. ஆனால், வழி நடத்தியவரை ஒதுக்கியபோது கலகம் வெடித்தது. 
மக்கள் கொந்தளித்துப் புறப்பட்டபோதுகூட, கட்டடங்களுக்கும் அஃறிணைப் பொருள்களுக்கும் சேதம் விளைவித்தனரேயன்றி, மனிதர்களுக்கோ, உயிர்களுக்கோ சேதம் விளைவிக்கவில்லை. ஆனால், ஆஷின் துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் மாண்டனர். 
துப்பாக்கிச் சூடு குறித்தும், நால்வர் மாண்டது குறித்தும், அப்போதைய அரசோ அதிகாரிகளோ எந்த விதக் கலக்கமும் காட்டவில்லை. நிகழ்வு குறித்து சட்ட விசாரணையோ, நேரடி விசாரணையோ நடத்தவில்லை. மக்களின் மனங்கள் காயப்பட்டுவிட்டன என்பது பற்றி, வின்ச்சோ, ஆஷோ கவலையே படவில்லை. 
துப்பாக்கிச் சூடானது இன்னமும் சினத்தைத் தோற்றுவிக்க, மக்களின் எழுச்சி பெருகியது. 
ஐரோப்பியர்கள், கிடைத்தது சாக்கு என்று பாரதத்தின் முகத்தை மாற்றிச் சித்தரிக்க முற்பட்டனர். நெல்லையில் இருந்த ஐரோப்பியர்கள், ஏதோ வானமே இடிந்து விட்டதுபோல், இரவினைக் கப்பல்களில் கழிக்கத் தலைப்பட்டனர். 
ஆங்காங்கே இருந்த இன்னும் சிலர், மாவட்ட மாஜிஸ்டிரேட்டின் பங்களாவுக்குள் பதுங்கினர்.  
"ஐரோப்பியர்களுக்கு ஆபத்து' என்பது போன்ற தோற்றம், இதனால் உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயச் சார்பு கொண்ட இதழ்கள், இந்த "ஆபத்து' எல்லை மீறிவிட்டதாக எழுதியது. 
"இதுவரை காணாத கலகம்; திருநெல்வேலியில் மட்டுமன்று; குற்றத்திற்குப் பெருஞ்சாதனை கொண்ட மதராஸ் முழுவதும் கலகம். ராவல் பிண்டியும், ராஜமுந்திரியும், கொக்கநாடாவும் (காக்கிநாடா),  அரசியல் ரீதியான கலகங்களை நமக்குக் காட்டியுள்ளன. 
ஆனால், கட்டுக் கடங்கா வன்முறையிலும், பயங்கரவாதத்திலும் டின்னவேலி அனைத்துச் சாதனைகளையும் முறியடித்துவிட்டது'- இது இந்தியன் டெய்லி நியூஸ் பத்திரிகையில் வந்த கட்டுரை. 
ஆனால், இவற்றுக்கெல்லாம் அடிப்படை, குற்றவியல் சட்டப் பிரிவு 108 வழக்கை, 107 வழக்கு என்று மாற்றிய சிறுபிள்ளைத்தனம்தான்! ஏன் இவ்வாறு செய்யப்பட்டது?
வ. உ. சி-யும், சிவாவும் ஆற்றிய உரைகளில் ராஜ துரோகமோ, காழ்ப்புச் சிந்தனைகளோ இருக்கவில்லை. சுதேசியம், தம்மைத் தாமே வழிநடத்திக் கொள்ளவேண்டிய தார்மீகம் குறித்துத்தான் இவர்கள் உரையாற்றினர். 
ஸ்வராஜ்யம், அந்நிய பகிஷ்கரிப்பு, வந்தே மாதர கோஷம் ஆகியவைதாம் இவர்களின் பிரதான குறிக்கோள்கள். எனவே, இவற்றைக் கொண்டு இவர்களைச் சிறையில் அடைப்பது என்பதோ, வழக்கிற்குள் சிக்க வைப்பது என்பதோ நடக்காது என்பது அதிகாரிகளுக்குப் புரிந்து போனது. 
ஆனாலும், இவர்களை எப்படியாவது அப்புறப்படுத்த வேண்டும். என்ன செய்வது? பலவிதமான முயற்சிகளை முன்னதாகச் செய்து பார்த்தனர். வ. உ. சி. அவற்றையெல்லாம் முறியடித்தார். 
தேசியவாதிகளுக்கு எதிராகத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தவும் முனைந்தனர். ஏதாவது சண்டையிழுக்க முற்பட்டனர். ஆனால், அமலில் இருந்த சட்டங்களின்படி கைது செய்யக்கூடிய எதையும் தேசியவாதிகள் உரைக்கவில்லை. 
மதராஸ், திருச்சி போன்ற இடங்களிலிருந்து துப்பறிவாளர்களை வரவழைத்து முடி திருத்துபவர்களாகவும், செருப்புத் தைப்பவர்களாகவும், பிச்சைக்காரர்களாகவும் நடமாட விட்டனர். அவர்களைக் கொண்டு சிக்கல் எழுப்பத் தலைப்பட்டனர். 
ஆனால், அப்படிப்பட்டவர்களின் நடமாட்டத்தைக் கண்காணித்து, "இது துப்பறிவாளர்களின் உறைவிடம்' என்று கரித்தூளில் எழுதச் செய்தனர் தேசிய வாதிகள். 
அனைத்து முயற்சிகளும் பிசு பிசுத்துப் போன நிலையில்தான், வசமாகச் சிக்கினார்கள் என்னும் கணக்குப் போட்டு, மூன்று பெருமக்களையும் கைது செய்தார் வின்ச். இத்தகைய வழக்குகளில் ஜாமீன் கொடுப்பதுதான் வழக்கம் என்றாலும், மூவருக்கும் இதனை மறுத்தார். 
விளைவு..? திருநெல்வேலி எழுச்சி பிறந்தது. 
மூவரின் கைதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களை அப்போதைய அரசாங்கம், "கலகம்' என்றுதான் பதிவு செய்தது. அப்போதைய உளவுத் துறை தயாரித்த குறிப்பேட்டிலும் (நோட் ஆன் டின்னவேலி ரயட்ஸ் அண்ட் டூட்டுகொரின் இன் மார்ச் 1908 - Note on Tinnevelly Riots and Tuticorin in March 1908), பின்னர் வெளிவந்த அரசாணையிலும் (G.O. No. 1542 Judicial & Confidential dated 3.10.1911), "கலகம்' என்றே குறிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.