/

நாடு காக்கும் நாட்டுப் பற்று 

நீங்காப் பிணி ஓங்கிப் பெருகாது, உறுபசியால் மக்கள் உழன்று சுழலாது, அண்டை நாடுகளின் சண்டையும் இன்றி வளம் தரும் நாடே நல்ல நாடு.  

News image
Updated On :27 ஜனவரி 2024, 8:04 pm

மு. அ. அபுல் அமீன்

நீங்காப் பிணி ஓங்கிப் பெருகாது, உறுபசியால் மக்கள் உழன்று சுழலாது, அண்டை நாடுகளின் சண்டையும் இன்றி வளம் தரும் நாடே நல்ல நாடு.  
நாட்டை வளமானதாக, வலுவானதாக பாதுகாக்க மக்கள் விழிப்புணர்வு பெற ஏப்ரல் 28-ஆம் நாள் பாதுகாப்பு விழிப்புணர்வு நாளாக நம் நாட்டில் கொண்டாடப்படுகிறது.
 கஅபாவைக் கட்டி முடித்ததும் இப்ராஹீம் நபி இறைவனிடம் -இதை அச்சமற்ற நகராக ஆக்கி அருள். அதில் வாழ்பவர்களுக்குப் பல கனி வகைகளில் உணவளி- என்று இறைஞ்சியதை இறைமறை குர்ஆனில் 2.126 ஆவது வசனம் இயம்புகிறது. மேலும் மக்காவைப் பாதுகாப்பான பட்டினமாக ஆக்கி வைக்கவும் அல்லாஹ்விடம் வேண்டியதை 14.35 ஆவது வசனம் விளம்புகிறது. 
இந்த இறைஞ்சலை முன் மாதிரியாகக் கொண்டு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் -எங்களுக்கு மக்கா மாநகரை நேசத்திற்குரியதாக ஆக்கியதைப் போன்று மதீனா மாநகரையும் எங்களின் மனதுக்கு உகந்ததாக உருவாக்கித் தருவாயாக- என்று இறைவனிடம் இறைஞ்சியதைப் புகாரி 6372 -இல் காணலாம்.
உள்ளம் நாட்டுப்பற்று ஆழமாக வேரோடி விழுது விட்டுப் பழுதின்றி பணியாற்றும் பாங்குடையதாக இருக்க வேண்டும். உள்ளத்தில் உள்ள தாய் நாட்டுப்பற்று எழுத்தில் வடிக்க முடியாத, வார்த்தைகளில் விவரிக்க முடியாத 
அர்த்தமுடையது. 
அடி மனதில் படிந்திருக்கும் தேசத்தின் பாசமும், நேசமும் பேச்சில் பிடிபடாத பேரெல்லையைத் தாண்டியது. 
ஒருவரின் நம்பகத் தன்மை அவரது நாட்டுப்பற்றில் ஊற்றெடுத்து, வற்றாது பெருகி நிற்கும். 
நிலைத்த நாடு, பொருள் உடைமைகளுக்குப் பாதுகாப்பாக அமைந்து வாழ்வில் வளம் சேர்க்கும். நாடு வலுவிழந்தால் வாழ்வாதாரம் பிடுங்கப்பட்டு இடுக்கண் உற்று இன்னலில் தவிக்கும் பரிதாப நிலை 
உருவாகும். 
நாட்டின் வளத்தை, வலிமையைப் பேணிப் பாதுகாப்பது மக்களின் மகத்தான கடமை. நாட்டின் கண்ணியத்தைக் காக்க வேண்டும். பெருமையைப் பேணி நிலைநிறுத்த வேண்டும். வளர்ச்சிக்கு உறுதுணை புரிய வேண்டும். உயர்விற்கு உடல், பொருள், ஆவியைத் தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும். 
நவீன காலத்தில் மண்ணில் மட்டுமன்றி, விண்ணிலிருந்து வரும் ஆபத்துகளையும் எதிர்கொண்டு வெல்ல, உள்ளத் துணிவுடன் உடல் வலுவும், பயிற்சியும் பெற்றவர்களாக, உற்ற துணைக்குச் சற்றும் தயங்காது தாய் நாடு காக்க ஆயத்தங்களுடன் இருக்க வேண்டும். இவ்வாறு மதீனாவைக் காக்க ஒவ்வொரு தோழரையும் வீரர்களாக்கி இளைஞர்கள் பயிற்சி பெற ஆவன செய்தார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள். 
பகைவரின் வஞ்சனையை விஞ்சி நிற்கும் படை பலமாக இருக்க வேண்டும். படைவீரர்களுக்குப் பக்க பலமாய், தக்க துணையாய் திரண்டு, விரோதிகள் விரண்டோட அஞ்சாது எதிர்க்கும் நெஞ்சுரம் உடைய நேரிய மக்கள் நிறைந்து இருக்க வேண்டும். இவ்வாறு இருந்ததால்தான் இஸ்லாத்தை அடியோடு அழித்திட முனைந்த குறைஷிகள் பத்ரு போரில் தோற்று ஓடினார்.  
நாம் வாழும் நாட்டில் நம் வாரிசுகளும் வளமாய், நலமாய், வாழ்வாங்கு வாழ வலுவான நாட்டை விட்டுச் செல்ல முடியும். பிள்ளைகளுக்கு நாட்டுப் பற்றை ஊட்டி வளர்க்க வேண்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.