பொருநை போற்றுதும்! - 109
திருச்செந்தூருக்கு அருகே இருக்கிறது மேலப்புதுக்குடி என்றொரு கிராமம். இந்தக் கிராமத்தில் வாழ்ந்த குமாரசாமி நாடார் என்பவர், முனிவர் ஒருவருடைய அருளால், மக்களுக்கு வைத்தியம் செய்து வந்தார்.


திருச்செந்தூருக்கு அருகே இருக்கிறது மேலப்புதுக்குடி என்றொரு கிராமம். இந்தக் கிராமத்தில் வாழ்ந்த குமாரசாமி நாடார் என்பவர், முனிவர் ஒருவருடைய அருளால், மக்களுக்கு வைத்தியம் செய்து வந்தார். குறிப்பாக, பாம்புக் கடி, விஷப் பூச்சிக் கடி போன்றவற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றினார். குமாரசாமி நாடாரின் பார்வை பட்டாலே விஷம் இறங்கிவிடும். இதனை இப்பகுதி மக்கள் "பார்வை பார்த்தல்' என்றே அழைத்தனர்.
சுற்று வட்டாரத்தில் பெரும் புகழோடு வாழ்ந்த குமாரசாமி நாடாரின் வம்சாவளியில் ராமசாமி நாடார் என்றொருவர்; இவருக்கும் இவருடைய மனைவி சிவனணைந்த அம்மாளுக்கும் நெடுங்காலம் பிள்ளைப்பேறு இல்லாமல் போனது. வீட்டுக்கு வந்த துறவி ஒருவர், "செட்டியா பத்து இறைவன் அருளால் பிள்ளை பிறக்கும்' என்றும் "அப்பிள்ளைக்கு அருணாசலம் என்று பெயர் சூட்டவேண்டும்' என்றும் உரைத்துச் சென்றார். அதன்படியே, சிவனணைந்த அம்மாள் கருவுற்று, 1880-ஆம் ஆண்டு அக்டோபர் 2, உத்திர நட்சத்திர நன்னாளில் ஆண் குழந்தை பிறந்தது. "அருணாசலம்' என்றும் பெயரிட்டனர்.
ஓலைச்சுவடியில் அரிச்சுவடியைத் தொடங்கி, ஆரம்பக்கல்வியை மேலப் புதுக்குடியில் கற்ற அருணாசலம், தொடர்ந்து கல்வி பயில, ஏரலில் இருந்த சிற்றப்பாவிடம் வந்து சேர்ந்தார். பண்ணைவிளையில் பயின்றார். ஆங்கிலம், தமிழ் ஆகியவற்றோடு, கிறித்துவ மற்றும் இஸ்லாமிய நூல்களையும் கற்றார். பொருநைக் கரையில் அடிக்கடிச் சென்றமர்ந்து இறைதேடலிலும் ஈடுபட்டார். மூதாதையரின் விஷக்கடி வைத்தியத்தையும் தொடர்ந்தார்.
அறிவாற்றலும், ஆங்கிலப் புலமையும், மக்கள் ஆதரவும் இருந்ததால், பிரிட்டிஷ் அரசாங்கம், சிறுதொண்டநல்லூர் கிராமத்திற்கு முன்சீஃபாக இவரை நியமித்தது. ஊர்ச்சண்டைகளைச் சிக்கலில்லாமல் தீர்த்து வைத்து, தாமதமில்லாமல் வரி வசூல் செய்து, ஏறத்தாழ 8 ஆண்டுகள் நிறைவேற்றிய இப்பணிக்குக் குந்தகம், ஒருநாள் மேலதிகாரியின் வடிவில் வந்தது. பொய் சாட்சி சொல்லும்படி அந்த அதிகாரி ஆணையிட, "அறத்தை விடுவதினும் பதவியை விடுவதே சாலச் சிறந்தது' என்று அதனைத் துறந்தார்.
இளம் வயது, அப்பழுக்கற்ற நடத்தை, ராஜ கம்பீரம், மக்கள்மீது அன்பு, நன்மை தரும் செயல்கள்-இவற்றைக் கண்ட அப்போதைய மாவட்டக் கலெக்டர், இவரை ஏரல் பஞ்சாயத்தின் சேர்மனாக நியமித்தார். தம்முடைய பணிக்காலத்தில் கல்விச்சாலைகளை அமைத்து, தெருவில் தீபவிளக்குகளைப் பராமரித்து, அவற்றுக்காகத் தக்க பணியாளர்களை நியமித்து, பாதசாரிகளின் வசதிக்காக மரக்கன்றுகளை நட்டு, கழிவுநீர் வடிகால் செப்பனிட்டுப் பற்பலவற்றையும் செயல்படுத்தினார்.
எல்லாவற்றுக்கும் இடையில், வைத்தியத்திற்காக வருபவர்களுக்கு வைத்தியம் செய்தார். பலரின் வாழ்க்கைத் துயரங்களை அதிசயமான வகைகளில் தீர்த்து வைத்தார். தீண்டிய பாம்பையே வரவழைத்து, எந்தச்சிறுவனை அது தீண்டியதோ அவனைக் காப்பாற்றினார். தடைப்பட்ட திருமணங்களை நடத்தி வைத்தார். "சேர்மன் சுவாமிகள்' என்று மக்கள் கொண்டாடத் தொடங்கினர்.
ஒருநாள்... தம்முடைய தம்பியை அழைத்த சேர்மன், 1908-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் நாள் (தம்பியிடம் பேசியதிலிருந்து எட்டாம் நாள்) உச்சிப்பொழுதில் தாம் இறைவனோடு கலக்கப்போவதாகவும், தம்முடைய உடலை எரியூட்ட வேண்டாம் என்றும், அமர்ந்த நிலையில் புதைத்து மண்ணையும் மலர்களையும் கொண்டு மூடிவிடும்படியும் கூறினார். குறிப்பிட்ட நாளில் இதன்படியே செய்தனர்.
இதன் பின்னர்தான்... சேர்மன் சுவாமிகளின் முழுமையான அருளும் பொழியத் தொடங்கியது. நோய் தீரவில்லையே என்று இவருடைய இடத்திற்கு வருபவர்களுக்கு நோய் தீர்ந்தது. பிள்ளை வரம் கேட்டவர்களுக்கு மகப்பேறு கிட்டியது.
இந்த இடத்தைப் பற்றிய நிலத் தகராறு ஒன்றும் ஏற்பட்டது. அதைப் பற்றி விசாரிக்க, அப்போதைய பிஷப்ஆர்தர்வில்லியம் அவர்களும் ஆட்சியர் டேவிட்சன் அவர்களும் குதிரைகளின் மீது பயணித்து இவ்விடத்தை அடைந்தனர். இருவரும் உள்ளே வந்தபோது, கணக்கெழுதுவதுபோன்று சாய்வு மேஜையில் கையூன்றி அமர்ந்திருந்த சுவாமிகளைக் கண்டனர்.
காலமாகிப் புதைக்கப்பட்ட ஒருவர் எவ்வாறு இப்படி அமர்ந்திருக்கிறார் என்று வியந்தனர். நில ஆர்ஜிதம் பற்றியும் சேர்மன் அவர்களோடு உரையாடினார். தவித்துப்போனவர்கள், உடனடியாக அலுவலகம் சென்று நிலப் பட்டாவுக்கு ஏற்பாடு செய்தனர். இன்றளவும் அரசு ஆவணப்பதிவுகளில் இச்சம்பவத்தின் நிகழ்வு காணப்படுகிறது.
நவகைலாயங்கள்
பொருநையாளின் கரம்பற்றிப் பயணிக்கும் இப்பயணத்தில், நவதிருப்பதிகளைப் போலவே, நவகைலாயத் திருத்தலங்களையும் தரிசிக்கிறோம்.
மேல் கைலாயத் தலங்களான பாபநாசம், சேரன் மாதேவி, கோடகநல்லூர் ஆகியவற்றையும் நடுக் கைலாயத் தலங்களான குன்னத்தூர், முறப்பநாடு, ஸ்ரீ வைகுண்டம் ஆகியவற்றையும் ஏற்கெனவே தரிசித்துவிட்டோம்.
நவதிருப்பதித் தலமான ஸ்ரீ வைகுண்டம் நவகைலாயமாகவும் திகழ்வதைப் போன்றே, தென்திருப்பேரையும் நவதிருப்பதியாகவும் நவகைலாயமாகவும் விளங்குகிறது.
இவ்வூரின் சிவன் கோயிலில், அருள்மிகு கைலாயநாதரும் அருள்மிகு அழகிய பொன்னம்மையும் எழுந்தருளி அருள்கின்றனர். நவகோள்களில் புதனுக்கான தலமாகத் திகழும் இத்தலத்தில், சூரியனும் சந்திரனும் குருவும் சுக்கிரனும் குதிரை வாகனங்களில் ஆரோகணித்து உள்ளனர்.
மேல் கைலாயம் என்று மூன்று தலங்களும், நடுக்கைலாயம் என்று மூன்று தலங்களும் வகைப்படுத்தப்பட்டிருப்பது போன்று, தென் திருப்பேரை, ராஜபதி, சேர்ந்த பூமங்கலம் ஆகிய மூன்றும் கீழ்க்கைலாயத் தலங்களாகும்.
தென் திருப்பேரைக்குக் கிழக்காகச் சுமார் 1 கி.மீ. தொலைவிலும், ஏரலுக்கு எதிர்க்கரையிலும் (அதாவது, பொருநையாளின் தென் கரையில்) இருக்கிறது ராஜபதி. நவகைலாயத் தலங்களில் இது எட்டாவது தலம். அருள்மிகு செளந்தரநாயகி உடனாய அருள்மிகு கைலாயநாதர் எழுந்தருளியிருக்கும் ஊர்.
உரோமச முனிவரால் தோற்றுவிக்கப்பட்ட இத்தலத்தில், பெருமானுக்கும் பிராட்டிக்கும் சிறப்பானதொரு திருக்கோயிலை, பாண்டிய மன்னர்கள் அமைத்திருந்தனர்.
இருப்பினும், 1648-ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தில் இக்கோயில் சிதைவுற்றது. அது மட்டுமல்லாமல், கோயிலின் சிலாரூபங்கள் பலவும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்தச் சிலைகளில் சில, ஆங்காங்கே கரையொதுங்க, அவ்வவ்வூர் மக்கள், அவற்றையெடுத்துத் தத்தம் ஊர்களில் வழிபட்டனர். இவ்வகையில், ஒட்டப்பிடாரம் உலகம்மைத் திருக்கோயிலில் உள்ள நந்தீச்வரர், ராஜபதியின் நந்தீச்வரர் என்றே நம்பப்படுகிறது.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...