/

பொருநை போற்றுதும்! - 118

தமிழ்ப் பிரார்த்தனைப் புத்தகம் ஒன்று, லத்தீன் எழுத்துக்களில் லிஸ்பன் நகரில் அச்சிடப்பட்டது. இருப்பினும், தமிழ் எழுத்துக்களில் அச்சிடுவதே சரி என்று ஹென்ரிக்ஸ் நம்பினார்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:47 pm

டாக்டா் சுதா சேஷய்யன்

தமிழ்ப் பிரார்த்தனைப் புத்தகம் ஒன்று, லத்தீன் எழுத்துக்களில் லிஸ்பன் நகரில் அச்சிடப்பட்டது. இருப்பினும், தமிழ் எழுத்துக்களில் அச்சிடுவதே சரி என்று ஹென்ரிக்ஸ் நம்பினார். இதற்கிடையில், அச்சுக்கூடம் ஒன்றை கோவாவில் ஜெஸýயிட்கள் நிறுவியிருந்தனர். லத்தீனிலும் போர்த்துகீசிய மொழியிலும் இங்கு அச்சுப் பணிகள் நடைபெற்றன. 

தமிழ் மொழியைப் பயின்ற ஹென்ரிக்ஸ், கிறித்துவக் கொள்கைகளைத் தமிழில் நூலாக இயற்றினார். போர்த்துகீசிய மொழியில் தாம் இயற்றியிருந்த "டாக்ட்ரினா கிரிஸ்டம்' என்னும் நூலைத் "தம்பிரான் வணக்கம்' என்னும் பெயரில் தமிழில் ஆக்கினார். இதுவும், "கிரிசித்தியானி வணக்கம்' என்னும் நூலும், கொல்லத்தில் அச்சிடப்பட்டன. இருப்பினும், ஹென்ரிக்ஸ் பாதிரியாரின் பெருமுயற்சியால், ஜான்டிஃபாரியா என்னும் மற்றொரு ஜெஸýயிட் பாதிரியாரின் உதவியோடு, தமிழ் அச்சுக்கூடம் ஒன்று, 1578-இல் புன்னைக்காயலில் நிறுவப்பட்டது. கிறித்துவ அடியார்கள் பலரின் வரலாறுகளைக் கூறும் ஃப்ளாஸ் சான்க்டோரம் என்னும் நூல், அடியார் வரலாறு என்னும் பெயரில், புன்னைக்காயல் அச்சுக்கூடத்தில் 1586-இல் ஹென்ரிக்ஸ் பாதிரியாரால் அச்சிடப்பட்டது. 

தமிழ் பயின்று, தமிழ்ச் சான்றோராகப் பெருமிதம் கொண்ட முதல் ஐரோப்பியர் என்னும் பெருமை, ஹென்ரிக் ஹென்ரிக்ஸ் பாதிரியாரையே சாரும். இவருடைய முயற்சியால், தமிழ்க் கல்லூரி ஒன்றும் 1567-இல், புன்னைக்காயலில் நிறுவப்பட்டதாகத் தெரிகிறது. இவருடைய அச்சுப் பணிகளால், அச்சு வாகனம் ஏறிய முதல் அல்-ஐரோப்பிய மொழி என்னும் பெருமையைத் தமிழ் மொழி பெறுகிறது. இதனால், தமிழ் அச்சுப் பணிகளின் தந்தை என்னும் அடைமொழியும் இவருக்கு வழங்கப்படுகிறது. 1600, பிப்ரவரி 22-ஆம் தேதி, புன்னைக்காயலில் ஹென்ரிக்ஸ் பாதிரியார் காலமானபோது, கிறித்துவர்கள் மட்டுமல்லாமல், இஸ்லாமியரும் இந்துக்களும் இரண்டு நாள்கள் உபவாசம் இருந்தனர் என்பதாக ஜெஸýயிட் ஆண்டுப்பதிவு குறிப்பிடுகிறது.  

எப்படியாயினும், வரலாற்றுச் சம்பவங்கள் பலவற்றின் நிலைக்களனாகப் புன்னைக்காயல் இருந்துள்ளது. 

மாறோக்கத்து முத்து நகர்கள்: ஆறும் கடலும் சங்கமிக்கிற பகுதியில், ஆழமில்லாத நீர்த்திட்டுகள் தோன்ற, இத்தகைய பகுதிக்கே "காயல்' என்னும் பெயர் வழங்கப்படும். அவ்வகையில்,பொருநையாளின் கடல் சங்கமத்தில், அகன்று விரிந்த பெரும்பகுதிக்கேகாயல் என்னும் பெயர் வழங்கியுள்ளது. பொருநையாள், பற்பல கிளைகளாகப் பிரிந்து பாய்ந்ததால், அகன்ற பகுதியானதுபகுக்கப்பட்டு, சிறிய சிறிய ஊர்களானது. முள்ளக்காடு, குலையங்கரிசல், புல்லாவெளி, அடைக்கலபுரம், கோவங்காடு, மஞ்சள்நீர்க்காயல், மாறமங்கலம், குருவித்துறை,  சேர்ந்த பூமங்கலம், புன்னைக்காயல், கீறனூர், ஆவரங்காடு, காயல்பட்டினம் என்னும் சிற்றூர்கள் உருவாகின. 

சண்டை பிடிக்கும் முக்காணி, சாட்சி சொல்லும் மாறமங்கலம், மண்டி போட்டு வழக்குத் தீர்க்கும் மகராசன் காயலூர்.......

........ஊரைச் சுற்றிப் புளியமரம் உலுப்பி விட்டால் கலகலக்கும் பேரைச் சுற்றிக் கூப்பிடுங்கள் பேரான காயலூரை...... 

என்றெல்லாம் இப்பகுதியைப் பற்றிய நாட்டுப்பாடல்கள் பல உள்ளன. 

ஆற்றுப் போக்கால் உருவான ஊர்கள் மட்டுமல்லாமல், அவ்வப்போது தோன்றிய "முத்து நகர்கள்' குறித்த குறிப்புகளும், 16 மற்றும் 17-ஆம் நூற்றாண்டுப் பதிவுகளில் காணப்படுகின்றன.  மார்ச்-ஏப்ரலில் தொடங்கிய முத்துக்குளிப்பு, சுமார் ஐம்பது அல்லது அறுபது நாள்களுக்கு நடைபெற்றுள்ளது. முதலில் முத்துக்குளித்தலில் சிறந்தவர்கள் சிலர்,எந்தப் பகுதியில் சிப்பிகள் அதிகமாக உள்ளன எனக் கண்டுபிடித்து வருவதற்குஅனுப்பப்படுவர். பகுதியை நிர்ணயித்தவுடன், அந்த இடத்திற்கு நேராக உள்ள கரைப் பகுதியில், கல்வீடுகள், கடைத்தெருப் பகுதி போன்றவை அமைக்கப்படும். மக்கள் தங்குவதற்கும் வணிகம் செய்வதற்கும் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். இவ்வாறு உருவாவதே "முத்துநகர்'என்பதாகும். 

முத்துக்குளிப்புக் காலம் முடிகிறவரை இந்நகர் இருக்கும். முத்துக்குளிப்புக்கான கடல் பகுதியைப் பொறுத்து, இந்த முத்து நகரானது, ஏற்கெனவே மக்கள் குடியிருப்புக் பகுதிக்கு அருகில் இருக்கலாம். அல்லது யாருமே வசிக்காத வெற்றுப்பகுதிகளிலும் இருக்கலாம். முத்துக்குளிப்பவர்கள்படகுகளில்கடலுக்குள்செல்வார்கள். குறிப்பிட்ட பகுதியில் படகு நிறுத்தப்படும். தக்க ஆயத்தத்தோடு, பெரிய கயிறொன்றின் முனையில் கல் கட்டப்பட்டுக்கடலுக்குள் வீசப்படும். உடல் முழுவதும் எண்ணெய் பூசிக்கொண்டு,இடது தோளில் கூடையைத் தொங்கவிட்டுக் கொண்டு அந்தக் கயிற்றைப் பிடித்துக்கொண்டு கடலுக்குள் இறங்குவார். எவ்வளவு சிப்பிகளை எவ்வளவு வேகமாக எடுக்கமுடியுமோ அவ்வளவு சிப்பிகளை எடுத்துக் கூடையில் போட்டுக்கொள்வார். கூடை நிரம்பியவுடன்,கயிற்றை ஆட்டுவார். படகில் இருப்பவர்கள் கயிற்றை மேலே இழுத்து அவரையும் தூக்குவார்கள். இவ்வாறு ஒவ்வொருவராகக் கடலில் இறங்கி, முத்துச்சிப்பிகளைச் சேகரிப்பார்கள். 

ஒவ்வொரு படகின் குழுவினரும், தாங்கள் சேகரித்த முத்துக்களை, முத்துநகரின் மணல்வெளியில் கொட்டுவர். ஒவ்வொரு குழுவுக்கும் ஓரிடம் குறிக்கப்பட்டிருக்கும். கடற்கரையில் இவை வரிசையாகக் காட்சியளிக்கும். சிப்பிகளைக் கொண்டுவந்து கொட்டுவதோடு சரி, முத்துக்குளிப்பு முடியும்வரை யாரும் அவற்றைத் தொடமாட்டார்கள். முத்துக்குளிப்புநிறைவடைந்தவுடன், அந்தந்தக் குழுவினர், அந்தந்தக் குவியலுக்கு  அருகில் அமர்ந்து, சிப்பிகளைத் திறப்பர். உள்ளிருக்கும் பூச்சிகள் இதற்குள்ளாக இறந்து போயிருக்கும். சிப்பிகளிலிருந்து முத்துக்களை எடுத்த பின்னர், அவற்றைத் தரம் பிரித்து, வகை பிரித்து விற்பனைக்கு ஆயத்தமாவர். இப்படிப்பட்ட முத்து நகர்களில் சில, காலப்போக்கில், நிரந்தரச் சிற்றூர்களாக மாறியதாகவும் தெரிகிறது. 

முத்துக்குளிப்பு போன்றேசங்குக்குளிப்பும்நிகழ்ந்துள்ளது. ஒரு வகைக்கடல்பூச்சியின்மேல்கூடுதான் சங்கு என்பதாகும். கடலுக்கடியில்இருக்கக்கூடியசங்குகளை, கடலடியில் இறங்கி முத்தைச்சேகரிப்பதுபோன்றேசேகரிப்பர். அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரையானகாலகட்டத்தில்தான்சங்குக்குளிப்பு நடந்துள்ளது. காயல் பகுதியில் சங்குத் தொழிற்சாலை இருந்ததாம். பண்டைக்காலத்தில்,தனிமனிதர்கள் அமர்ந்து சங்குகளைக்கீரியறுத்துவளையல்கள் போன்ற அணிமணிகளைச் செய்தனர். 

அகன்றிருக்கும்சங்கினைஅரிந்தால்,வட்டவட்டமானதுண்டுகள்கிட்டும்.

இத்தகைய வட்டத்துண்டுகளையேவளையல்களாக மக்கள் பயன்படுத்தினர். சங்கதனைக்கீர்கீர் என அரியும்கீரனோ என் பாட்டில் குறை காண்பவன்? என்னும் சிவனார்வினாவும்,சங்கறுப்பது எங்கள் குலம்சங்கரனார்க்கு ஏது குலம் என்னும் நக்கீரரின்எதிர்வினாவும்,சங்குகள் அரிந்து அறுக்கப்பட்டதன்வரலாற்றைப்புலப்படுத்துவன. சங்குகளைக் கொண்டு வளையல்கள்செய்யப்பட்டதாலேயே, வளையல்களுக்குச் சங்கம் என்றொருபெயருண்டு. சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்ப என்று திருவெம்பாவை பேசுகிறது. 

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.