பொருநை போற்றுதும்! - 92
இங்குமொரு தில்லைத் தலம் கிருஷ்ணாபுரத்திலிருந்து திரும்பும் பொழுது, செய்துங்கநல்லூர் ஸ்ரீபதஞ்சலி வியாக்ரபாதீச்வரர் அழைப்பது தெரிய, ஊருக்குள் நுழைந்துவிடுகிறோம். பொருநைக்கரைச் சிவபெருமான்களில்


இங்குமொரு தில்லைத் தலம் கிருஷ்ணாபுரத்திலிருந்து திரும்பும் பொழுது, செய்துங்கநல்லூர் ஸ்ரீபதஞ்சலி வியாக்ரபாதீச்வரர் அழைப்பது தெரிய, ஊருக்குள் நுழைந்துவிடுகிறோம். பொருநைக்கரைச் சிவபெருமான்களில் இவரும் ஒருவர்.
புலிக்கால் முனிவரான வியாக்ரபாதீச்வரரும் ஆதிசேஷ அவதாரமான பதஞ்சலியும், சிவனாரின் நடனத் திருக்கோலம் காணவேண்டுமென்று தவம் செய்தார்கள். அத்திருக்காட்சியைத் தில்லைச் சிதம்பரத்தில் காட்டுவதாக வாக்குக் கொடுத்து, தை மாச குரு பூசத் திருநாளில் நிறைவேற்றினார். இதே இருவருக்கு, இதே திருக்காட்சியை செய்துங்கநல்லூரிலும் காட்டியதாகக் கூறப்படுகிறது. பதஞ்சலியும் வியாக்ரபாதரும் வழிபட்டதால், இந்தச் சிவனார் அருள்மிகு பதஞ்சலி வியாக்ரபாதீச்வரர் ஆகிவிட்டார். ஊரும்கூட, தென் தில்லை என்று போற்றப்படுகிறது.
சிதம்பரத்திற்குப் புலீச்வரம் (வியாக்ரம்=புலி) என்ற பெயர் வழங்கப்படுவதுபோல், இந்த ஊருக்கும் திருப்புலீச்வரம் என்னும் பெயர் உண்டு. நாட்டியம் ஆடுவதென்றால் அரங்கத்தில்தானே ஆடமுடியும் –ஆகவே, திருவரங்கேச்வரம் என்றும் ஒரு பெயர். அம்பிகைக்கு சிவகாமி அம்மையார், பெரிய நாச்சியார் என்று திருநாமங்கள். இங்கெழுந்தருளியிருக்கும் தக்ஷிணாமூர்த்தி, யோக தக்ஷிணாமூர்த்தியாகக் காட்சி தருகிறார். மோன நிலையிலேயே பதஞ்சலிக்கும் வியாக்ரபாதருக்கும் இவர் உபதேசித்துக் கொண்டிருக்கிறாராம். கல்வியில் சிறப்பதற்கு தக்ஷிணாமூர்த்தியையும் நோய்களிலிருந்து மீள்வதற்கு பதஞ்சலி வியாக்ரபாதீச்வரரையும் வழிபட்டுப் பலன் பெறுவது இந்த வட்டாரத்தின் வழக்கம்.
தில்லைச் சிதம்பரத்தில் சிவபெருமான் ஆடற்காட்சி கொடுத்ததை அறிந்த ஜெயதுங்க பாண்டிய மன்னர், தனக்கும் அதேபோன்று ஆடற்காட்சி வேண்டினார் என்றும், அவ்வாறு ஆடற்காட்சி நல்கிய ஊர் இதுவென்றும் குறிப்புகள் சில காட்டுகின்றன. ஜெயதுங்க நல்லூர் என்பதுவே செய்துங்கநல்லூர் ஆகியிருக்கக்கூடும்.
செய்துங்கநல்லூர், கீழத்தூதுக்குழி, கருங்குளம் ஆகிய பகுதிகளில், வடக்கிலிருந்து தெற்கு முகமாக, தக்ஷிண கங்கை என்னும் பெயரோடு பாய்கிறாள் பொருநையாள். இந்தப் பகுதிகளில் இவளின் வேகம் குறைந்து கம்பீரம் கூடியிருக்கிறது. "பாபநாசத்துப் பரணி, செய்துங்கநல்லூருக்குப் பின் தளர்வதைப் போல்' என்று இந்த வேகக் குறைச்சலைப் பற்றிக் குறிப்பிடுகிறார் மூத்த எழுத்தாளர் மாலன் நாராயணன்.
கண்ணைக் கட்டும் இவளின் கம்பீரத்தைப் பார்த்துக் கொண்டே ஆதிச்சநல்லூரை அடைந்துவிடுகிறோம். பொருநைக்கரைக்காரர்களுக்கு இந்தப் பெயரைக் கேட்டவுடனேயே தனி உற்சாகம் பிறந்துவிடும்.
ஆதித் தமிழரின் அழகு அடையாளம் திருநெல்வேலி - பாளையங்கோட்டை – திருச்செந்தூர் பாதையில், பொருநையாளின் தென்கரையில் ஆதிச்சநல்லூர் இருக்கிறது. சீவலப்பேரி, மருதூர் பகுதியில் தெற்கு முகமாகத் திரும்புகிற பொருநையாள், கொங்கராயக் குறிச்சியைத் தாண்டியபின்னர், மீண்டும் கிழக்குமுகமாக வளைகிறாள். இந்த வளைவின் தென்பகுதியில்தான், ஆதிச்சநல்லூர். ஆதித்தன்நல்லூர் என்னும் பெயர் ஆதிச்சநல்லூர் என்று சிதைந்ததாக மா.ராசமாணிக்கனார் விவரிக்கிறார். நம்முடைய முன்னோர் வாழ்க்கையைப் பற்றிய விவரங்களை நமக்குத் தரும் ஊர் என்பதால், ஆதி அச்சன் நல்லூர் (அச்சன்=தந்தை) என்றும் கூறலாம்.
ஆதிச்சநல்லூர் பற்றிய பதிவுகளில், வி.ஆர்.ராமச்சந்திர தீக்ஷிதரின் உரைகளைத் தொகுத்து, "வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய தென்னிந்தியா' என்னும் பெயரில் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட நூலும், சாத்தன்குளம் அ.ராகவன் எழுதியுள்ள "ஆதித்தநல்லூரும் பொருநைவெளி நாகரிகமும்' என்னும் நூலும் முக்கியமானவையாகும்.
பொருநைக் கரைப் பகுதிகள் பலவற்றில், பண்டைக்காலப் பொருட்கள் பல புதையுண்டு கிடப்பது, 19 -ஆம் நூற்றாண்டில் தெரிய வந்தது. அடச்சாணி, சேரன்மாதேவி, பாளையங்கோட்டை, முறப்பநாடு, கிருஷ்ணாபுரம், விட்டலாபுரம், ஆதிச்சநல்லூர், கொங்கராயக்குறிச்சி, கருங்குளம், ஸ்ரீ வைகுண்டம், புதுக்குடி, திருப்புளியங்குடி, ஆழ்வார் திருநகரி, திருக்கோளூர், அப்பன் கோயில், தென் திருப்பேரை, மாறமங்கலம், கொற்கை போன்ற இடங்களைக் குறிப்பாகச் சுட்டலாம்.
1876-இல், ஃபிரடெரிக் ஜகோர் என்னும் ஜெர்மானியர் ஒருவரால், ஆதிச்சநல்லூர் அகழ்பொருள்கள் வெளிச்சத்துக்கு வந்தன. யார் இந்த ஜகோர்? இவருக்கு ஏன் ஆதிச்சநல்லூர்மீது ஆசை? எந்த நகரத்தின் அருங்காட்சியகங்களில் வெவ்வேறு ஊர்களின் பொருட்கள் உள்ளனவோ, அந்த நகரத்தின் கெளரவம் கூடுதலானது என்பதான எண்ணம் ஜெர்மானியர்களிடம் காணப்பட்டது. பெர்லின் நகரக்காரரான ஜகோருக்கும் இப்படியொரு எண்ணம் இருந்தது போலும்! கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் வழியாகத் தென்னிந்தியாவில் காணப்பட்ட புதைபொருட்கள் பற்றித் தெரிந்துகொண்ட ஜகோர், 1876-இல் திருநெல்வேலி வந்துள்ளார். சொல்லப்போனால், 1860 முதல் 1890 வரையான முப்பதாண்டுகளில், ஆசிய நாடுகளுக்கு மும்முறை ஜகோர் விஜயம் செய்துள்ளார். இரண்டாவது முறைதான், இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு வந்து, மாட்டு வண்டிப் பயணங்களை மேற்கொண்டு, நிறைவாகத் திருநெல்வேலியை அடைந்துள்ளார். அப்போதைய திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு ஆட்சியர் ஸ்டுவர்ட் என்பாரையும் மாவட்டப் பொறியாளரையும் அழைத்துக் கொண்டு ஆதிச்சநல்லூருக்கு வந்துள்ளார்.
(தொடரும்...)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...