ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பொருநை போற்றுதும்! - 91

மன்மதன், பெயருக்கேற்ப மிகுந்த அழகன். இடது கையில் கரும்பு வில்லைப் பிடித்திருக்கிறான். மன்மதன் கை வில் என்பதால், கரும்பும் கொள்ளை அழகாக இருக்கவேண்டும் என்று சிற்பி நினைத்திருப்பார் போலும்!

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:34 pm

டாக்டா் சுதா சேஷய்யன்

மன்மதன், பெயருக்கேற்ப மிகுந்த அழகன். இடது கையில் கரும்பு வில்லைப் பிடித்திருக்கிறான். மன்மதன் கை வில் என்பதால், கரும்பும் கொள்ளை அழகாக இருக்கவேண்டும் என்று சிற்பி நினைத்திருப்பார் போலும்!  கரும்பின் கணுக்கள்...  காணக் கண்கள் இரண்டு போதா. வலது கையில் மலரம்பு. அருகில், தோழி குடை பிடிக்க, கையில் மலர்ப்பந்தைப் பிடித்தபடி, மன்மதனையே பார்த்துக் கொண்டிருக்கும் ரதி. இன்னொரு தூணில் இருக்கும் ரதியும் நம்மைக் கவர்கிறாள். இடது கையில் கண்ணாடியும் வலது கையில் மலர்ப்பந்தையும் ஏந்திக்கொண்டு அன்னப் பறவைமீது அமர்ந்திருக்கிறாள். இவளுடைய கழுத்தில் தாலி தொங்குகிறது. உருவமற்றவனாக இருந்தாலும் ரதியின் கண்களுக்கு மட்டும் மன்மதன் தென்படுவான், அவள் என்றுமே வாழ்வரசி என்னும் புராணக் கோட்பாடுகளை நுண்ணறிவோடு சிற்பி படைத்திருக்கிறார் என்று இதனை மா. ராசமாணிக்கனார் சிலாகிக்கிறார். 

வயலில் நடவுக்கு முன்னர் ரதி மன்மதன் பூஜை செய்வது வழக்கம் என்றும் அது விளைச்சலைப் பெருக்குவதாக நம்பிக்கை என்றும் எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிடுவதை இங்கு எண்ண வேண்டும். தென்பாண்டிக் கோயில்கள் பலவற்றிலும் ரதி மன்மதன் வடிவங்கள் உண்டு. 

திருமண மண்டப இரண்டாம் மற்றும் ஆறாம் தூண்களில் காணப்படுகிற குறத்தி, குறவன் வடிவங்களுக்கு உட்பொருள் ஏதேனும் இருக்கவேண்டும். குறத்தி தன்னுடைய தோளில் அரசகுமாரனைத் தூக்கிச் செல்கிறாள். குறவனோ அரசகுமாரியைத் தூக்கிப் போகிறான். அரசகுமாரனைக் காண்பதற்குக் குதிரையில் அரசன் வருவதைப்போல் இரண்டாவது தூணின் பிற பக்கங்களிலும், அரசகுமாரி தப்பித்துக்கொள்ளும் முயற்சியில் குறவனின் குடுமியைப் பிடித்திழுப்பது போன்றும், அவளைக் காப்பாற்ற ஈட்டியோடு வீரன் வருவதைப் போலவும் ஐந்தாவது தூணின் பிற பக்கங்களிலும் கதைத் தொடர்ச்சிகள் காணப்படுகின்றன. இருந்தாலும், உட்பொருளை முழுமையாக விளங்கிக்கொள்ள முடியவில்லை. ஒரு காலத்தில் இப்பகுதிகள் குறவ மன்னர்களின் ஆளுகைப் பகுதிகளாக இருந்திருக்கக்கூடும்; கோயில்களும்கூட அவர்களின் கோயில்களாக இருந்திருக்கலாம். பின்னர் வந்த மன்னர்கள் காலத்தில், குறவர்களுக்குச் சிறப்புரிமைகள் அளிக்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் பலரும் நம்புகின்றனர். 

எப்படியாயினும், புருஷா மிருகத்தோடு சண்டையிடும் பீமன், தவக்கோலம் கொண்ட அர்ஜுனன், சாந்தமான முகத்தோடு நாகாஸ்திரம் தாங்கிய கர்ணன், கிளியோடு நிற்கும் அழகி ஆகியோரோடு கம்பீரமான குறவனும் குறத்தியும் நம் உள்ளத்திற்குள் புகுந்து இடம் பிடித்துத் தங்கிவிடுகின்றனர். 

கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில், எஞ்சியிருந்த விஜயநகர அரசின் மன்னராக இருந்தவர் சதாசிவ ராயர். இவருடைய செப்பேடுகள், கிருஷ்ணாபுரத் திருக்கோயிலுக்காக கிராமங்கள் நிவந்தம் செய்யப்பட்டதைத் தெரிவிக்கின்றன. அரியகுளம், புத்தனேரி, பொட்டுகுளம், ஆழிக்குடி போன்ற கிராமங்கள் இவ்வாறு வழங்கப்பட்டனவாம்.

கிருஷ்ணாபுரமா, கிருஷ்ணாபுரங்களா:  பாளையங்கோட்டைக்குக் கல்லெடுத்துப் போன குறிப்புகள் சிலவற்றில், இந்த ஊரை முத்துக்கிருஷ்ணாபுரம் என்று சிலர் குறிக்கின்றனர். கிருஷ்ணப்ப நாயக்கருக்கு முத்துக்கிருஷ்ணப்பன் என்றும் முத்துவீரப்பன் என்றும் இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். தந்தையின் மறைவுக்குப் பின்னர் 1573-இல் இருவரும் அரியணை ஏறியுள்ளனர். இதனால், "முத்து' என்னும் முன்னொட்டு சேர்ந்திருக்க வாய்ப்புண்டு. சங்கரன்கோவிலிலிருந்து திருநெல்வேலி செல்கிற பாதையில், முத்துக்கிருஷ்ணபுரம் என்றே சிற்றூர் ஒன்றுள்ளது. 

தென்காசிக்கும் பிரம்மதேசத்திற்கும் இடையில் ஒரு கிருஷ்ணாபுரம் இருக்கிறது. சிவசைலத்திற்கும் கடையத்திற்கும் அருகில் இருப்பதால், கடையம் கிருஷ்ணாபுரம் என்று வழங்கப்படுகிறது. 

சிற்பச் சிறப்புக்குப் பெயர்போன கிருஷ்ணாபுரத்தை (மேலே நாம் கண்ட ஊர்தான்!) நிர்மாணித்த பின்னர், அதே அழகோடு இன்னொரு ஊரை நிர்மாணிக்க எண்ணிய மயிலேறும்பெருமாள், கடையம் அருகே ஒரு கிருஷ்ணாபுரத்தை அமைத்ததாக கால்ட்வெல் பாதிரியார் குறிப்பிடுகிறார். பெயர் குழப்பத்தைத் தவிர்க்கச் "சிற்பக்கிருஷ்ணாபுரம்' என்று பெயர் சூட்டிவிடலாமோ!

(தொடரும்...)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.