ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

நல்லியல்புகளால் நன்மையுறும் நல்லடியார்கள்

இன்பம் துன்பம் இரண்டையும் தருபவன் அல்லாஹ். இன்பத்தில் மகிழ்ந்து துன்பத்தில் துவண்டு துடித்து, வெந்து நொந்து மடிவது நல்லடியார் இயல்பல்ல.இனியன நிகழும் பொழுது இறைவனுக்கு நன்றி செலுத்தி,

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:45 pm

மு. அ. அபுல் அமீன்

இன்பம் துன்பம் இரண்டையும் தருபவன் அல்லாஹ். இன்பத்தில் மகிழ்ந்து துன்பத்தில் துவண்டு துடித்து, வெந்து நொந்து மடிவது நல்லடியார் இயல்பல்ல.
இனியன நிகழும் பொழுது இறைவனுக்கு நன்றி செலுத்தி, துன்பம் சூழும் போது இன்பத்தைச் சுகிப்பது போல துன்பத்தைச் சகித்து, சமாளித்து வெற்றி காண்பது நல்லடியார்களின் நல்லியல்பு. அந்நல்லடியார்களே இறைவனின் நேசர்கள்.
இறைமறையின் 3-186 ஆவது வசனம் உங்கள் பொருள்களிலும் ஆத்மாக்களிலும் நிச்சயமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள் என்று சொல்கிறது. இவ்வுலக வாழ்வு இறைவனை மறக்க வைக்கும். சிறக்க வைக்கும் வல்லோன் அல்லாஹ்வை மறக்காது நினைவில் நிலை நிறுத்தவே அல்லாஹ் சோதனைகளைத் துன்பங்களைத் தருகிறான். கடும் துன்பத்திலும் பொறுமை காக்க வேண்டும்.
அவ்வாறு காப்போர் இறைவனிடம் அந்த நல்லியல்புகளுக்காக நற்பயனைப்  பெறுவர். இதனையே 8-46 ஆவது வசனம் நீங்கள் பொறுமையாளர்களாக இருங்கள். அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான் என்று இயம்ப 3-146 ஆவது வசனம் பொறுமையாளர்களை அல்லாஹ் நேசிப்பதைப் பேச 39-10 ஆவது வசனம் பொறுமையாளர்களுக்கு கணக்கற்ற பயன்கள் வழங்கப்படுவதை வலியுறுத்துகிறது.
முன்னருள்ள நபிமார்கள் ஏக இறைக் கொள்கையைப் போதித்த பொழுதும் ஏற்காதவர்கள், ஏற்றவர்களுக்கு எண்ணற்ற இன்னல்களை இழைத்து, போரும் புரிந்தனர். போரில் காயமுற்று பலர் இறந்த பொழுதும், தோற்ற பொழுதும் பொறுமையை இழக்காது சகித்து சாதித்தவர்களை அல்லாஹ் நேசிப்பதை வாசிக்கிறது 3-146 ஆவது வசனம்.
சோதனைக்கு ஆளாகும் அடியார் பொறுமை காக்கிறார். இந்த அடியார் கண்ணியமாக வாகை சூடுவார். இறைவனின் நேசத்தைப் பெறுவார். எந்தத் துன்பம் ஏற்பட்டாலும் இறுதியில் நன்மை விளையும். நல்லடியார்களின் பாதிப்புகள் இடையூறுகள் இன்னல்கள் எல்லாமே நன்மையில் முடியும். நல்லடியார்களின் உள்ளத்தை உறுதிப்படுத்தவே அவர்களின் ஆளுமைத் திறத்தை செம்மைப்படுத்தி ஆழ்
மனதிலும் அல்லாஹ்வின் நினைவை நிலை நிறுத்தவே இச்சோதனைகள் இறைவனால் ஏற்படுத்தப்படுகின்றன.
நம்பிக்கையுடையோரே நீங்கள் பொறுமையைக் கடைப்பிடியுங்கள். ஒருவருக்கொருவர் சகித்துக் கொள்ளுங்கள். எந்நேரமும் தயாராக இருங்கள். அல்லாஹ்விற்கு அஞ்சுங்கள். அல்லாஹ்வின் அச்சம் பாவச் செயல்களில் ஈடுபடாது தடுக்கும். 
ஈருலகிலும் வெற்றியை ஈட்டும். நந்நபி (ஸல்) அவர்கள் நல்லியல்புடைய நல்லடியார் துயரம் நேர்ந்தால் பொறுமையைக் கடைப்பிடிப்பார். அந்தப் பொறுமையும் பொன் விளைவதாக அமையும் என்று அறிவித்தது முஸ்லிம்-2999 -இல் உள்ளது.
துன்பத்தைச் சகித்துக்கொண்டு வெறுப்பை உமிழ்பவர் பொறுமையாளர் அல்ல. துன்பத்தையும் இன்பமாகக் கருதுபவரே நல்லியல்புடைய நல்லடியார் என்று நவின்றார் யூசுஃபுப்னுல் ஹுசைன் (ரஹ்) என்ற பெரியார். இந்தப் பெரியாரின் கூற்று பெருமானார் நபி (ஸல்) அவர்களின் தனக்குக் கிடைக்க வேண்டியது தன்னை விட்டுத் தவறாது; தன்னை விட்டுத் தவறியது தனக்குக் கிடைக்காது என்று இறை நம்பிக்கை உடையோர் உறுதியாக நிற்பர் என்ற பொற்புடைய பொன்மொழியின் பிரதிபலிப்பு. நூல்-திர்மிதி 2070.
நல்லியல்புடைய நல்லோர் இடையூறு ஏற்பட்டாலும் இயல்பாகவே இருப்பர். அவர்களின் தூய்மையான உள்ளம் துவளாது துயருறாது அமைதியாக இருக்கும். 64.11ஆவது வசனம் அல்லாஹ்வின் அனுமதியின்றி யாதொரு தீங்கும் தீண்டாது என்று பொறுத்தாரை அல்லாஹ் நேரான வழியில் நடத்துவான் என்று நவில்கிறது.  
துன்பமும் அல்லாஹ் அளிப்பதே என்று உறுதிபூண்டு பொறுமை காக்கும் நல்லியல்புடைய நல்லடியார்களின் துன்பத்தைப் போக்கி நேர் வழியில் நடக்க நல்லன செய்வான் அல்லாஹ்.
நல்லடியார் நலமாய் வளமாய் வாழ்வர். மறுமையில் இறைவனைப் புகழ்ந்து கொண்டே சொர்க்கம் புகுவர் என்பதை 10-9 ஆவது வசனம் நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிவோரை நீரருவிகள் நிரம்பி ஓடும் நிறை இன்ப சொர்க்கத்திற்குச் செலுத்துகிறான் என்று செப்புகிறது. 
""இறைவனே... உன் மீதுள்ள இறை நம்பிக்கையை எங்களுக்கு விருப்பம் உள்ளதாக ஆக்கி வை. இறை நம்பிக்கையால் எங்கள் உள்ளங்களைச் சிறப்பு செய்'' என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்களின் இறை வேட்டலை அஹ்மது 15891, புகாரி 699 நூல்களில் காணலாம்.
துன்பமும் தூய அல்லாஹ் நேயனைப் பரிசோதித்து பரி பூரணமாக்கும் பாவங்களிலிருந்து விடுபட்டு விலகி ஆக்கபூர்வ நோக்கத்தோடு ஊக்கமுடன் செயல்பட்டு உயர்வு பெற்று உய்வடைய வைப்பதே என்பதை உணர்ந்து மெய்யான இறைவனின் அருளைக் கோரி உரிய வழிகளில் துன்பத்தைத் துடைத்தெறிந்து நல்லியல்புகளால் நன்மையுறும் நல்லடியார்களாக நல்லுலகில் வாழ்வோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.