ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பொருநை போற்றுதும்! - 90

கிருஷ்ணாபுரம் கோயிலைக் கட்டியவர் மயிலேறும் பெருமாள் என்று கால்ட்வெல் பாதிரியார் குறிப்பிடுகிறார்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:31 pm

டாக்டா் சுதா சேஷய்யன்


கிருஷ்ணாபுரம் கோயிலைக் கட்டியவர் மயிலேறும் பெருமாள் என்று கால்ட்வெல் பாதிரியார் குறிப்பிடுகிறார்.

செப்புப் பட்டயமா, விறலி விடு தூதா என்னும் வினாக்களுக்கிடையே ஆய்வாளர்கள் வேறுபடுகிறார்கள்.  தெய்வச்சிலையார் என்னும் பெயர் நம் சிந்தனையைத் தூண்டுகிறது. திருப்புல்லாணியில் கோயில்கொண்டுள்ள திருமாலை "தெய்வச் சிலையார்' என்றழைக்கிறார் திருமங்கையாழ்வார். தெய்வீக வில்லாயுதத்தைக் கையில் ஏந்தியவர் என்பது பொருள். தொல்காப்பிய சொல் அதிகாரத்திற்கு உரை எழுதிய ஒருவரின் பெயரும் தெய்வச்சிலையார் என்பதாகும். 

இவர் முதலாம் மாறவர்ம குலசேகரபாண்டியன் காலத்தவர் என்று மு.வை. அரவிந்தன் போன்றோர் கருதுகின்றனர். அப்படியானால், உரையாசிரியரான தெய்வச்சிலையாரின் காலம், 13-ஆம் நூற்றாண்டு என்றாகும். ஆனால், நம்முடைய தெய்வச்சிலையாரோ, 1563-இல் அரியணை ஏறிய கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தவர். 

கிடைத்திருக்கும் ஆதாரங்களை வைத்துக் காண்கையில், மா.ராசமாணிக்கனார் கூறுவதே தக்கதாகிறது  "அரசர் ஆணையிட, தெய்வச்சிலை முதலியார் என்னும் அமைச்சர் இவற்றை அமைத்தனர் என்று கோடலே பொருத்தமானது.' 

கோயிலும் கலைச் சிறப்பும்

ஒருகாலத்தில் சீரும் சிறப்பும் பெற்று விளங்கிய கிருஷ்ணாபுரம், இன்றளவில் சின்னஞ்சிறிய கிராமம். கிருஷ்ணாபுரம் வேங்கடாசலபதி கோயில் வெகு பிரசித்தி. 

கிருஷ்ணாபுரம் என்னும் பெயர் வருவதற்கு முன்னர், இந்த ஊருக்குத் திருவேங்கடபுரம் என்னும் பெயர் இருந்ததாகத் தெரிகிறது. ஆக, சிறியதாக இருந்த கோயிலையும் ஊரையும் கிருஷ்ணப்ப நாயக்கரும், அவருடைய அமைச்சரான தெய்வச்சிலையாரும் திருப்பணி செய்து விரிவுபடுத்தியிருக்கவேண்டும். ஏறத்தாழ 2 ஏக்கரில் அமைந்த கோயில். கல்லால் அமைக்கப்பட்ட மதில்கள். மூன்று மதில்கள் இருந்ததாகவும், 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தன்னைத் திருநெல்வேலி நவாப் என்று அழைத்துக்கொண்ட சந்தா சாஹிப்பால் வெளி மதில் இடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பாளையங்கோட்டையின் கோட்டையைக் கட்டுவதற்கு இதன் கற்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறுகிறார்கள். 

நான்குத் திருக்கரங்களில் சங்கும் சக்கரமும் அபயகரமும் கடீஹஸ்தமும் (தொடையின் நடுப்பகுதியைப் பற்றியவாறு இருக்கும் முத்திரை) தாங்கியவராக, ஸ்ரீ தேவியும் பூ தேவியும் இருபக்கத்திலும் உடனிற்க, நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார் அருள்மிகு வேங்கடாசலபதி.  அருள்மிகு அலர்மேல் மங்கைத் தாயாருக்குத் தனிச் சந்நிதியும் உண்டு. 

இக்கோயிலின் சிறப்பு, இங்குள்ள மண்டபங்களில் உள்ளது. பந்தல் மண்டபம், வாகன மண்டபம், திருமன மண்டபம், அரங்க மண்டபம், ஊஞ்சல் மண்டபம், வசந்த மண்டபம், வீரப்ப நாயக்க மண்டபம், நாங்குநேரி ஜீயர் மண்டபம், மணிமண்டபம் என்று ஏராளமான மண்டபங்கள். சதுர வடிவ வசந்த மண்டபம், புராணக் காட்சிகளைத் தூண்களில் கொண்ட வீரப்ப நாயக்க மண்டபம், பாவை விளக்கு பிம்பங்களைக் கொண்ட ஜீயர் மண்டபம் என்று ஒவ்வொரு மண்டபத்திற்கும் பெருமைகள் உண்டு என்றாலும், திருமண மண்டபமும் அரங்க மண்டபமும்  குறிப்பிடத்தக்கவை.  

திருமண மண்டபத்தின் முகப்பில் ஆறு தூண்கள் உள்ளன. ஆறையும், ஆறு தனித்தனிக் கலைக்களஞ்சியங்கள் என்றே விவரிக்கலாம். கிழக்கிலிருந்து மேற்காகக் கண்டால், முதல் தூணில் நடன மங்கை, இரண்டாம் தூணில் அரசன் "அரசி' மகன் கதை, மூன்றாம் தூணில் அர்ஜுனன், நான்காம் தூணில் கர்ணன், ஐந்தாம் தூணில் அரச குமாரியைத் தூக்கிச் செல்லும் குறவன் கதை, ஆறாம் தூணில் நடன மங்கை என்று தூண்களும் சிற்பங்களும் கண்களைக் கட்டிக் கருத்தைக் கவர்கின்றன. 

அரங்க மண்டபம் என்பது நாயக்கர் காலத்தில் ஆடல் பாடலுக்கு அரங்கமாகப் பயன்படுத்தப்பட்டது. 

இம்மண்டபத்தின் பதினான்கு தூண்களும் தனித்தனிக் கலைக்களஞ்சியங்கள். மணிக்கணக்கிலும் நாள் கணக்கிலும் அல்ல, மாதக் கணக்கிலும் ஆண்டுக் கணக்கிலும் இச்சிற்பங்களைக் கண்டும் சுவைத்தும் களிக்கலாம். வீரபத்திரர், மன்மதன், ரதி, குறத்தி, குறவன் ஆகிய வடிவங்கள் தனிச் சிறப்பானவை. 

உயரமான வீரபத்திரர். விரிந்த மூக்கும் நீண்ட மீசையும் வெளியில் நீட்டிக் கொண்டிருக்கும் கோரைப் பற்களும் கோபப் பார்வையுமாக இருக்கிறார். வலது கையில் ஈட்டியும் இடது கையில் கேடயமும் தாங்கி, ஒரு காலைத் தூக்கியபடி நிற்கிறார். கால் ரத்த நாளங்களும் நகங்களும்... கைலாயத்திலிருந்து புறப்பட்டு வந்த வீரபத்திரரை நேரே காண்பதுபோல் இருக்கிறது. 

(தொடரும்...)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.